Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு எனப்படும் ‘நீட்’ தேர்வு எழுதப்பட வேண்டும். 2018-2019 கல்வியாண்டுக்கான நீட் தேர்வு, வரும் மே 6ம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 9ம் தேதி (இன்று) வரை அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இதற்கான அவகாசத்தை வரும் 12ம் தேதி (திங்கள் கிழமை) வரை நீட்டித்துள்ளது. அன்று மாலை 5.30 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முன்பு நீட் தேர்வு எழுத ஆதார் அட்டை அவசியம் என்று அறிவுறுத்தி இருந்தது. இது தொடர்பான ஒரு வழக்கில், நீட் உள்ளிட்ட எந்த ஒரு நுழைவுத்தேர்வுக்கும் ஆதார் அட்டை தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இதையடுத்து, ஆன்லைன் விண்ணப்பம் பூர்த்தி செய்யப்படும்போது ஆதார் விவரங்களை உள்ளீடு செய்யத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளதோடு, அதற்குப் பதிலாக ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், வங்கி கணக்கு எண், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் உள்ள அடையாள எண்களில் ஏதேனும் ஒன்றை பதிவு செய்ய வேண்டும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய விரும்புவோருக்கு வரும் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை அதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு, cbseneet.nic.in என்ற இணையதளத்தை காணலாம்.