Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ரஜினி நாய் கூட எம்எல்ஏ ஆகிவிடும்!: அன்புமணி ராமதாஸ் தாக்கு

தமிழகத்தின் பால்தாக்கரே போல செயல்பட்டு வரும் பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ், அவருடைய மகன் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சினிமாக்காரர்கள் மீதும் குறிப்பாக ரஜினிகாந்த் மீதும் கடும் விமர்சனங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

ரஜினியின் தயாரிப்பில் பாபா படம் வெளியானபோது, ரஜினியின் மீதான பாமக பாய்ச்சல் உச்சக்கட்டத்தில் இருந்தது. பல திரைமறைவு சமரசங்களுக்குப் பிறகு, பாபா படப்பிரச்னை முடிவுக்கு வந்தது. ஆனாலும், ஒட்டுமொத்தமாகவே சினிமாக்காரர்கள் மீதும், அந்த துறை மீதான தாக்குதல் போக்கையும் பாமக இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

கருணாநிதியின் முதுமை, ஜெயலலிதா மறைவு காரணமாக தமிழக அரசியலில் இயல்பாகவே ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. மக்களின் மனம் கவர்ந்த தலைவர்கள் இல்லாத நிலையில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தங்களுடைய அரசியல் ஆசைகளை வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.

கடந்த மே மாதம் ரசிகர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், போருக்குத் தயாராகுங்கள் என்று ரசிகர்களை உசுப்பி விட்டார். அப்போது அவர் பேசுகையில், மு.க.ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ், திருமாவளவன், சீமான் போன்ற திறமையான நல்ல பல தலைவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள் என்றார்.

இவர்கள் எல்லோருமே ரஜினிக்கு ஏதோ ஒரு வகையில் ஒரு காலத்தில் குடைச்சல் கொடுத்தவர்கள்; அல்லது அவர் அரசியலில் நேரடியாக களமிறங்கும்போது குடைச்சல் கொடுக்கக் கூடியவர்கள். அதை சமாளிக்கும் வகையிலேயே முன்னெச்சரிக்கையாக அன்புமணி, சீமான் போன்றோரின் பெயர்களை ரஜினி குறிப்பிட்டுப் பேசியதாக அப்போது யூகங்கள் கிளம்பின.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், தந்தை மருத்துவர் ராமதாஸைப் போலவே ரஜினியை எதிர்ப்பதில் அவருடைய மகனும், எம்பியுமான அன்புமணி ராமதாஸூம் தீவிரமாக இருக்கிறார். அதேநேரம், கமலின் அரசியல் நடவடிக்கைகளை விமர்சிக்கும்போது மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கிறார்.

சினிமாவுக்கு எதிராக விமர்சிக்கும்போது, தமிழக மக்களையும் அவர் கடுமையாக சாடி வருகிறார். மக்கள் சினிமாக்காரர்கள் பின்னால்தான் ஓடுகின்றனர் என்றும் பகிரங்கமாக பேசுகிறார்.

அரியலூர் குருவாலப்பர் கோயிலில்,  பாமக நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் இன்று (அக்டோபர் 30, 2017) கலந்து கொண்டு பேசிய அன்புமணி ராமதாஸ், ரஜினியைப் பற்றியும், மக்களின் மனநிலை பற்றியும் கடுமையாக விமர்சித்தார்.

அவர் பேசுகையில், ”தமிழ்நாட்டில்தான் மக்கள் சினிமாக்காரர்கள் பின்னால் ஓடுகின்றனர். கேரளாவில் அப்படி இல்லை. கேரளாவில் மம்மூட்டி என்ற நடிகர் இருக்கிறார். அவரும் அங்கு சூப்பர் ஸ்டார்தான். அவர் தேர்தலில் நின்றால் கவுன்சிலராகக் கூட ஆக முடியாது.

ஆனால், தமிழ்நாட்டிலும் ஒரு சூப்பர் ஸ்டார் இருக்கிறார். அவர் வீட்டு நாய், தேர்தலில் போட்டியிட்டால்கூட எம்எல்ஏ, எம்பி ஆகிவிடும். அந்தளவுக்கு மக்கள் இங்கு சினிமாக்காரர்கள் பின்னாடியே ஓடுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும்,” என்றார்.

தமிழக மக்களுக்கு சினிமா மீது இருக்கும் மோகம் குறித்து அவர் எல்லா கூட்டங்களிலும் கடுமையாக விமர்சித்து வருகிறார். மற்றொரு பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ”ஓவியா என்று ஒரு நடிகை இருக்கிறார். அவருக்கு ஒன்றரை கோடி பேர் ஓட்டுப்போட்டு காப்பாற்றி இருப்பதாக சொல்கின்றனர்.

உங்களுக்கு எல்லாம் மானம், ஈனம், ரோஷம் எதுவுமே இல்லையா? ஒரு சினிமாக்காரிக்கு ஓட்டுப் போடுறீங்க? இந்த ஒன்றரை கோடி ஓட்டை எனக்குப் போட்டிருந்தால் இந்நேரம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, உங்கள் தலையெழுத்தையே மாற்றி இருப்பேனே,” என்றார்.

அன்புமணியின் பேச்சு, ரஜினி ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.