Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பரபரப்பான ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தியது இந்தியா; தொடரையும் கைப்பற்றியது

நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அத்துடன் 2 – 1 கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் மற்றும் மூன்று ட்வென்டி – 20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் நியூஸிலாந்து அணியும் வெற்றி பெற்று 1-1 கணக்கில் சமநிலையில் இருந்தது.

இன்று (அக்டோபர் 29, 2017), கான்பூர் கிரீன்பார்க் மைதானத்தில் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நடந்தது. இந்த தொடரை எந்த அணி வெல்லப்போகிறது என்பதை நிர்ணயிக்கும் போட்டி என்பதால், ரசிகர்களிடையே பெரும் ஆரவாரம் காணப்பட்டது. மைதானமும் நிரம்பி வழிந்தது.

டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன், முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அனல் பறந்தது. மற்றொரு தொடக்க வீரரான ஷிகர் தவான், 14 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.

ரோஹித் ஷர்மா சதம்:

இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் விராட் கோஹ்லி ஏதுவான பந்துகளை அடித்து விளையாடினார். அபாரமாக விளையாடிய ரோஹித் ஷர்மா, சதம் அடித்தார். இது, ஒரு நாள் போட்டிகளில் அவருடைய 15வது சதம் ஆகும். இந்தாண்டில் ரோஹித் ஷர்மாக 1000 ரன்களையும் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கோஹ்லி அசத்தல்:

அதையடுத்து விராட் கோஹ்லியும் சதம் அடித்து அசத்தினார். இது, ஒருநாள் போட்டியில் கோஹ்லியின் 32வது சதம் ஆகும். மேலும், நியூஸிலாந்து அணிக்கு எதிராக அவர் அடிக்கும் 5வது சதம்.

இந்த இணையின் ஆட்டத்தால் இந்திய அணி 350 ரன்களுக்கு மேல் குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், எதிர்பாராதவிதமாக ரோஹித் ஷர்மா 138 பந்துகளில் 147 ரன்கள் எடுத்தார். இதில், 18 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடங்கும்.

பெரிய ஸ்கோர் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராட் கோஹ்லி 106 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோஹித் ஷர்மா – கோஹ்லி இணை முதன்முதலாக 230 ரன்கள் எடுத்து வலுவான அடித்தளமிட்டது.

338 ரன் இலக்கு:

அதன் பின்னர் வந்த இந்திய வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஹர்திக் பாண்ட்யா 8 ரன்கள், தினேஷ் கார்த்திக் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். டோனி 25 ரன்களுடன் ஆட்டமிழந்தனர். கேதர் ஜாதவ் 18 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது.

நியூஸிலாந்து அணி தரப்பில் மிட்சல் சான்ட்னர், ஆடம் மில்னே, டிம் சவுத்தீ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நியூஸிலாந்து அணி களமிறங்கியது. தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் ஆடத்தொடங்கிய அவர்களின் ஆட்டத்திலும் அனல் பறந்தது.

பந்துவீச்சு சொதப்பல்:

அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரரான குப்தில் 10 ரன்களில் பெவிலியன் திரும்பினார். எனினும், அடுத்தடுத்த வீரர்களில் யாராவது ஒருவர் இந்திய பந்து வீச்சாளர்களை பதம் பார்க்கவே செய்தனர். சாஹல், பும்ரா ஆகியோர் தவிர மற்ற பந்து வீச்சாளர்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அனுபவம் வாய்ந்த புவனேஸ்வர்குமார் 10 ஓவர்களில் 92 ரன்களை விட்டுக்கொடுத்து, ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றினார்.

திருப்புமுனை ரன்-அவுட்:

48வது ஓவரில் டாம் லேதமும், கிராண்ட்ஸ்ஹோமும் களத்தில் இருந்தனர். அப்போது நியூஸிலாந்து அணியின் வெற்றிக்கு 15 பந்துகளில் 25 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. பும்ரா, பந்து வீச அழைக்கப்பட்டார். பந்தை எதிர்கொண்ட கிராண்ட்ஸ்கோம் லேசாக தட்டிவிட்டு, ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு ஓட முயன்றார்.

ஆனால் அந்த பந்தை பவுண்டரிக்குச் செல்லாமல் தடுத்த விக்கெட் கீப்பர் டோனி, ரன் அவுட் செய்வதற்காக அந்தப் பந்தை பும்ராவிடம் வீசினர். பும்ராவும் லாவகமாக ஸ்டம்பை குறிபார்த்து எறிந்து, டாம் லேதமை ரன் அவுட் ஆக்கினார். இந்த விக்கெட்டுதான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. டாம் லேதம், 52 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து பரிதாபமாக வெறியேறினார்.

கடைசி ஓவரையும் பும்ரா வீசினார். 6 பந்துகளில் 15 ரன்கள் தேவை என்ற நிலையில், ஆட்டத்தில் ரொம்பவே பரபரப்பு தொற்றிக்கொண்டது. மிகத்துல்லியமாக பந்து வீசிய பும்ரா அந்த ஓவரில் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். 50 ஓவர்கள் இறுதியில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து, 331 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தியது. மேலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரையும் 2&1 கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

பும்ரா – சாஹல் அபாரம்:

கடைசிக்கட்ட ஓவர்களில் சிக்கனமாக பந்து வீசுவதோடு விக்கெட்டும் எடுப்பார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா, இந்த ஆட்டத்திலும் அந்த நம்பிக்கையைக் காப்பாற்றினார். இன்றைய போட்டியிய் அவர் பத்து ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அவருடைய பந்துவீச்சு எகானமி 4.7 ஆகும்.

சுழல்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல், 2 விக்கெட்டுகளை வீ¦ழ்த்தினார். அவரும் பத்து ஓவர்கள் பந்து வீசி 47 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

ஆட்ட நாயகன் – தொடர் நாயகன்:

இந்த ஆட்டத்தில் 138 பந்துகளில் 147 ரன்கள் விளாசிய ரோஹித் ஷர்மா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டு சதம் உள்பட மொத்தம் 263 ரன்கள் குவித்த கேப்டன் விராட் கோஹ்லி, தொடர் நாயகன் விருது பெற்றார். அவர் தலைமையில் இந்திய அணி தொடர்ச்சியாக வெல்லும் 7வது ஒரு நாள் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

டி – 20 போட்டி:

இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ட்வென்டி&20 கிரிக்கெட் போட்டி வரும் 1ம் தேதி (புதன் கிழமை) டெல்லியில் இரவு 7 மணிக்கு நடக்கிறது.