கந்துவட்டிக்காரர்களை ஒடுக்க ‘ஆபரேஷன் குபேரா’ (Operation Kubera) நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், கண்டுகொள்ளாத காவல்துறையால் கந்து வட்டி அரக்கர்களுக்கு ஏழைகள் இரையாவது தொடர்ந்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கந்து வட்டி கொடுமையால் கூலித்தொழிலாளியான இசக்கிமுத்து நேற்று (அக். 23, 2017) குடும்பத்துடன் தீக்குளித்த நிகழ்வு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கிப் போட்டது. இசக்கிமுத்துவின் மனைவி, இரு குழந்தைககளும் தீக்கு இரையாகினர். இசக்கிமுத்து, தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.
இனியும் இசக்கிமுத்துவின் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவலம் வேறு யாருக்கும் ஏற்பட்டு விடக்கூடாது. இதில் யாருக்கும் இரண்டாம் கருத்து இருக்க முடியாது. ஆனால், கந்துவட்டிக்காரர்களின் கொடுமை மட்டுமேதான் இசக்கிமுத்து, இத்தகைய முடிவெடுக்கக் காரணம் என்று சொல்லிவிட முடியாது. இந்த சமூகத்திற்கும் அதில் சரிபாதி பங்கிருக்கிறது. நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.
சரி. இது போன்ற அவலங்களுக்கு தீர்வே இல்லையா?. கந்துவட்டியை ஒழிக்க சட்டங்கள் ஏதுமில்லையா?
தமிழகத்தில், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, கடந்த 2003ம் ஆண்டு ‘கந்துவட்டி தடை சட்டம்’ (Tamilnadu Prohibition of Charging Exorbitant Interest Act, 2003) கொண்டு வரப்பட்டது. சட்டம் கொண்டு வந்து என்ன பயன்? அதன்மீது இதுவரை பெரிய அளவில் யாதொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இத்தனை ஆண்டுகளில் கந்து வட்டிக்கு எதிராக எத்தனை புகார்கள் வந்துள்ளன என்ற புள்ளி விவரங்கள்கூட தமிழக காவல்துறையிடம் கிடையாது.
ஆனால், கடந்த ஏழு ஆண்டுகளில் தமிழகத்தில் கந்துவட்டி கொடுமையால் மட்டும் 823 பேர் தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரப்பூர்வமற்ற புள்ளி விவரங்கள் சொல்கின்றன.
கந்துவட்டி கும்பலும் கிட்டத்தட்ட மணல் மாபியா அல்லது ரியல் எஸ்டேட் மாபியாக்கள் போலதான். ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் பெரும்பாலானோர் கந்துவட்டித் தொழிலும் செய்கின்றனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தும் சமூகத்தினர் கந்துவட்டித் தொழிலில் கொடிகட்டிப் பறக்கின்றனர். மதுரை, நெல்லை போன்ற தென்மாவட்டங்களும், திருப்பூரும் கந்துவட்டிக்காரர்களால் ரொம்பவே பாதிக்கப்பட்டவை.
கந்துவட்டி கும்பலின் இலக்கு, பெரும்பாலும் காய்கறி வியாபாரிகள், சாலையோர கடைக்காரர்கள்தான். கந்துவட்டிக்காரர்கள் மொழியில் சொல்வதெனில், ‘சன் ரைஸ்’ வியாபாரிகள். பரவலாக ரூ.3 முதல் ரூ.5 வரை வட்டி வசூலிக்கின்றனர். தின வட்டி என்றால் ஒரு நாளைக்கு 10 முதல் 20 சதவீதம் வரை வசூலிக்கின்றனர். உதாரணமாக காலையில் ஒருவர் ரூ.1000 கடன் பெறுகிறார் எனில், அன்று இரவுக்குள் ரூ.1100 ஆக திருப்பிச் செலுத்திவிட வேண்டும்.
சேலம் போன்ற பகுதிகளில், பெரும்பாலும் நூறு நாள்கள் அடிப்படையில் கந்து வட்டி கொடுப்பது நடைமுறையில் இருந்து வருகிறது. உதாரணமாக, ஒருவர் ரூ.10 ஆயிரம் கடன் கேட்டு கந்துவட்டிக்காரரை அணுகுகிறார் எனில், அவர் வட்டித்தொகையாக முன்கூட்டியே ரூ.1000 கழித்துக்கொண்டு மீதத்தொகையான ரூ.10 ஆயிரத்தை சம்பந்தப்பட்ட நபருக்கு வழங்குவார்.
அந்த தொகையை அவர் மூன்று மாதத்திற்குள் ரூ.10 ஆயிரமாக திருப்பிச் செலுத்திவிட வேண்டும். ஆனால் நடைமுறையில் 3 மாத தவணையை 100 நாள்கள் வரையிலும்கூட அனுமதிக்கின்றனர். இதன்படி கணக்கிட்டால் மாதத்திற்கு 3.33 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. அதாவது ஆண்டுக்கு 40 சதவீதம் வட்டி மட்டுமே சுளையாக சுருட்டி விடுகின்றனர்.
சில இடங்களில், சொன்னால் சொன்ன நேரத்தில் வட்டி கொடுத்தாக வேண்டும். கொஞ்சம் சாக்குபோக்கு சொல்ல ஆரம்பித்தால் அவ்வளவுதான் கதை. தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் வட்டி எகிறும். வட்டிக்கு வட்டியாக மாறும்போதுதான் சாதாரண கந்து வட்டி மீட்டர் வட்டியாக பரிணாமம் பெறுகிறது. சில மணி நேரத்திற்குள் கொடுக்கல் வாங்கலை முடித்துக் கொள்வதுதான் ரன் வட்டி. ரன் வட்டியை, மணிக்கணக்கு வட்டி என்றும் சொல்கின்றனர்.
வராத கடனை எப்படி வசூலிப்பார்கள் என்பது குறித்த நேரடி அனுபவங்களை நெல்லையைச் சேர்ந்த ஒருவர் ‘புதிய அகராதி’யிடம் பகிர்ந்து கொண்டார். கந்து வட்டி கும்பலின் சில ட்ரீட்மென்டுகள் பற்றி அவர் சொன்னதை கேட்கும்போதே நமக்கு முதுகெலும்பு ஜில்லிப்பு தட்டியது.
”எங்களப் பொருத்தவரைக்கும் கந்துவட்டிக்காரங்கதான் கடவுள் மாதிரி. திருப்பதி பெருமாள போயி பார்க்கறதும் ஒண்ணுதான். கந்துக்காரங்கள பார்க்கறதும் ஒண்ணுதான். நாம சரியா இருந்தா அவங்களும் ஒழுங்கா நடந்துக்குவாங்க. கேட்டப்பலாம் வட்டிக்கு பணமும் கொடுப்பாய்ங்க. ஆனா, சொன்ன டயத்துல வட்டி கட்டலேனு வைய்யுங்களேன்…” என்று இழுத்தார்.
பிறகு அவரே தொடர்ந்தார்.
”அண்ணே…இங்க தேவமாருங்க, கோனாருங்க, தலித்து மக்கள்ல சில பேருகூட கந்துவட்டி தொழில் பன்றாங்க. ஆனா தேவமாருங்களும், கோனாருங்களும்தான் அதிகம். தேவமாருங்க கொடுத்த கடனை வசூலிக்க கோனாரு பசங்கள அனுப்புவாய்ங்க. கோனாருங்க கொடுத்த கடனை வசூலிக்க, தேவமாரு பசங்கள வேலைக்கு வெச்சுக்குவாங்க. மாற்று சாதிக்கார பசங்க போயி கேட்டாலே கொஞ்சம் அசிங்கம்தானே…அதுக்குத்தான்…
சரியா வட்டி கட்டலேனா அவிய்ங்க வீட்டுக்கு நடுராத்தினுகூட பாக்க மாட்டாங்க போய் உக்காந்துருவாங்க. இல்லாட்டி, அதிகாலை 4 மணிக்கு போயி கதவ தட்டுவாய்ங்க. பொண்டாட்டி புள்ளைக முன்னாடியே கேவலமா திட்டுவாய்ங்க. அதுவரைக்கும் நம்ம புள்ளைக முன்னாடி ஹீரோவா தெரிஞ்ச நாம, அங்கேயே செத்துறலாம்போல இருக்கும். கடன் வசூலாகுற வரைக்கும் வீட்டுல கார், பைக் எது இருந்தாலும் எடுத்துட்டுப் போய்டுவாங்க.
இது மட்டுமில்ல. வேற மாதிரியும் நடக்கும்.
இங்க பாரு…நீ கடன் வாங்கிட்ட… உன்னால இப்ப அத கட்ட முடியல. உனக்கோ சொத்துபத்து எதுவும் கிடையாது. உன் பொண்டாட்டி மட்டும்தான் இருக்கா…’எப்படி கடனை கட்டலாம்னு இருக்க….’ அப்படினு கேட்பாய்ங்கண்ணே….அதுல பல அர்த்தம் இருக்கு. புருஷன் பட்ட கடனை அவுக வீட்டுப் பெண்களே ‘அடைச்சதும்’ இருக்கு. சில இடங்கள்ல, பாக்கிக் கடனுக்காக குழந்தையக்கூட வித்திருக்காங்க.
கந்துவட்டியும் சும்மா ஒண்ணும் கொடுத்துற மாட்டாய்ங்க அண்ணே…ஒரு பத்தாயிரம் கடன் வாங்குறோம்னு வைய்ங்களேன்…அதுக்கு வட்டியா ஆயிரம் ரூபாயா முன்கூட்டியே புடிச்சுக்குவாங்க. அப்புறம், புரோ நோட், 20 ரூபா ஸ்டாம்ப் பேப்பர், டாக்குமென்ட் சார்ஜ்னு சொல்லி அதுக்கு ஆயிரம் ரூபா புடிச்சிக்குவாய்ங்க. இதையெல்லாம் நாம வட்டி கட்டித்தான் சமாளிக்கணும்,” என்றார்.
இவ்வளவு நடந்தும், ஏன் காவல்துறை கண்டுகொள்ளவில்லை என்று கேட்டோம். அதற்கு அவர், ”அண்ணே, இங்கு யார் யார் கந்துவட்டி தொழில் செய்கிறார் என்பதெல்லாம் காவல்துறைக்கு நன்றாகவே தெரியும். போலீஸ் சப்போர்ட் இல்லாமலா இந்த தொழில் நடக்குது?,” என்று கேள்வியோடு முடித்தார்.
அடாவடி வட்டிதான் என்பது தெரிந்தும் ஏன் கந்துவட்டிக்கு பணம் வாங்குகிறார்கள் எனக் கேட்கலாம். பாட்டன் பூட்டன் சொத்து சேர்த்து வைத்திராத குடும்பங்களில், மருத்துவம், குழந்தைகளின் படிப்பு, திருமணம் போன்றவற்றுக்கு அடகு வைக்க நகைகள்கூட இல்லாதபோது, சாமானியர்கள் நாடிச்செல்லும் ஓரே இடம் கந்துவட்டிக்காரர்கள்தான். சிலர், சீட்டு போட்டு சேமிப்பதும் உண்டு. ஆனால், வியாபாரிகள் கட்டாயமாக கந்துவட்டிக்காரர்களை சார்ந்தே இருக்கின்றனர்.
கந்து வட்டிக்காரர்களின் அடாவடியை ஒடுக்கத்தான் ‘ஆபரேஷன் குபேரா’ திட்டத்தை செயல்படுத்தும்படி காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கம்போல் காவல்துறையினர் அந்த உத்தரவை கண்டுகொள்ளவே இல்லை.
‘ஆபரேஷன் குபேரா’ பின்னணியிலும் ஒரு கதை இருக்கிறது. சம்பவம் நடந்தது, 2014ல். விருதுநகர் அருகே உள்ள காரியாப்பட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சுந்தரம், இமானுவேல் என்பவரிடம் ரூ.11 லட்சம் கடன் வாங்கியிருந்தார். அதற்காக அவர் சுந்தரத்திற்குச் சொந்தமான ரூ.85 லட்சம் மதிப்புள்ள 22 கடைகள், 4 வீ டுகளை அபகரித்துக் கொண்டார்.
இது தொடர்பாக சுந்தரம் காரியாப்பட்டி போலீசில் புகார் அளித்தும், அவர்கள் வழக்குப் பதிவு செய்யவில்லை. இதன் பின்னர் சுந்தரம், மதுரை உயர்நீதிமன்றத்தை அணுகி, வழக்குப்பதிவு செய்வதற்கான உத்தரவைப் பெறுகிறார். ஆனாலும், காரியாப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தார்களே தவிர, இமானுவேலை கைது செய்யவில்லை. மீண்டும் சுந்தரம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கிறார்.
வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், கேரளாவில் உள்ளதுபோல், தமிழ்நாட்டிலும் கந்துவட்டிக்காரர்களை ஒடுக்க ‘ஆபரேஷன் குபேரா’ நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும். கந்துவட்டி கும்பலை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். காவல்துறையில் இதற்கென தனிப்பிரிவும் தொடங்க வேண்டும் என்றும் சொன்னார்.
‘ஆபரேஷன் குபேரா’ கேரளாவில் வெற்றி பெற்றது எப்படி என்கிறீர்களா? திருவனந்தபுரத்தில் கந்துவட்டிக் கொடுமை தாங்காமல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர். அதையடுத்து, அப்போதிருந்த காங்கிரஸ் அரசு, கந்துவட்டி கும்பலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியது.
ஒரே மாதத்தில் 1448 வழக்குகள் பதிந்து தள்ளினர். 773 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.4.18 கோடி கைப்பற்றப்பட்டது. அதில் ஈர்க்கப்பட்டதால்தான் நீதிபதி கிருபாகரன், தமிழ்நாட்டிலும் ஆபரேஷன் குபேராவை நடத்தும்படி உத்தரவிட்டார்.
அரசியல் – போலீஸ் – ரவுடி – கந்துவட்டி கும்பல் என இவர்கள் அனைவருமே ஒரே நேர்க்கோட்டில்தான் இயங்குகின்றனர். நெல்லை தீக்குளிப்பு போன்ற சமூக அதிர்வுகள் நடக்காதவரை இவர்களுக்குள் இருக்கும் பிணைப்புகள் நம்மால் உணர்ந்திட முடியாது.
இன்னும் சொல்லப்போனால் ஓட்டுக்கட்சிகளின் உள்ளூர் தளபதிகள், க ந்துவட்டிக்காரர்கள்தான். பணத்தை பாதாளம் வரை பாய்ச்சுவதால், அவர்களை போலீசாரும் கண்டுகொள்வதில்லை. இசக்கிமுத்து விவகாரத்திலும் அதுதான் நடந்திருக்கிறது.
போலீசாரின் அலட்சியத்தால்தான், சேலத்தில் வினுப்ரியா என்ற பட்டதாரி மாணவி, கடந்த ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வினுப்ரியாவின் தற்கொலைக்கு கந்துவட்டி காரணம் இல்லை என்றாலும், போலீசாரின் அலட்சியத்தை சுட்டிக்காட்டுவதற்காகச் சொல்கிறோம். புகார் அளிக்கப்பட்ட உடனேயே, கொஞ் சம் கருணை காட்டியிருந்தால்கூட இந்நேரம் தீக்கு இரையான இசக்கிமுத்துவின் பச்சிளம் தளிர்களாவது பிழைத்திருக்குமே.
கூட்டுறவு அமைப்புகள் மூலம் சிறு வணிகர்களுக்கு பிணையமின்றி நுண்கடன்கள் வழங்குவதன் மூலம், கந்துவட்டி இன்னல்களை தடுக்க முடியும். இதுபோன்ற நுண்கடன் திட்டம், வங்கதேசத்தில் வெற்றிகரமாக நடந்து வருகிறது.
புகார் மனுக்களை வாங்கி வாங்கி போட்டுக்கொண்டால் மட்டும் போதும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் நினைத்து விட்டாரோ என்னவோ? மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணிப்பதும் ஆட்சியரின் வேலைதானே?
இசக்கிமுத்துவின் குடும்பம் ஓர் எளிமையான முடிவைத் தேடிக்கொண்டது. அலட்சியமே உருவாகியிருக்கும் நெல்லை காவல்துறையும், மாவட்ட ஆட்சியரும் என்ன பரிகாரம் தேடிக்கொள்ளப் போகிறார்கள்?
– அகராதிக்காரன்.