Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

இந்திய வங்கிகளின் செயல்படாத சொத்துக்களின் மதிப்பு 9.50 லட்சம் கோடியாம்!

இந்திய வங்கிகளின் செயல்படாத சொத்துக்களின் மதிப்பு 9.50 லட்சம் கோடியாக உயரும் என்று அசோசெம் எனப்படும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அசோசெம் அறிக்கையில் மேலே சொல்லப்பட்ட ஒரு வரி தகவல்தான், புதிய செய்தி. அதற்கு முன்பாக செயல்படாத சொத்துக்கள் என்றால் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியதாகிறது. வாராக்கடன் (Bad Debt) மற்றும் வாரா அய்யக்கடன் (Bad and Doubtful Debt) என்ற சொற்கள் எல்லாம் கணக்குப்பதிவியலை ஒரு பாடமாக படித்தவர்கள் நன்கு அறிவர்.

அந்த வாராக்கடன் சொல்லுக்குதான் புதிய மூலாம் பூசி, ‘செயல்படாத சொத்துக்கள்’ (NPA – Non Performing Asset) என்கின்றனர். இந்த புதிய சொல்லாடல் எல்லாமே 1991க்கு பிறகுதான் நடைமுறைக்கு வருகிறது. அதாவது, உலகமயம் கொள்கையை கையில் எடுத்த பிறகு. அப்போது இருந்துதான் தாராளமயம், தனியார்மய கொள்கைகளும் பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டன.

இந்த வாராக்கடன் என்பது எல்லா வங்கிகளுக்குமே உள்ள பெரிய சவால்தான். அதை வைத்தே, பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க வேண்டும் என்று உரத்துப் பேசும் வர்க்கமும் உண்டு.

கடந்த 2015ம் ஆண்டில் இந்திய பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் ரூ. 2.79 லட்சம் கோடியாக இருந்தது. மொத்த வாராக்கடனில் 73 சதவீத வாராக்கடன் என்பது, ஒரு கோடி ரூபாயும் அதற்கு மேலும் கடன் வாங்கி, அதைத் திருப்பிச் செலுத்தாதவர்களால் உருவானது என்கிறது வங்கிகள் கூட்டமைப்பின் அறிக்கை.

நேர்மை, தேச பக்தியைப் பற்றி அதிகமாக பேசும் பாஜக அரசாங்கம், 2012 முதல் 2015ம் ஆண்டுகள் வரையிலான வாராக்கடனில் ரூ. 1.14 லட்சம் கோடியை தள்ளுபடி செய்து பெருமுதலாளிகளுக்கு பெரிய அளவில் இரக்கம் காட்டியது.

சாதாரணமாக கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற ஏழைபாழைகள், கீழ் நடுத்தர வர்க்கத்தினர் உரிய காலத்தில் கடனை திருப்புச் செலுத்த இயலாதபோது அவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்கின்றன. பத்திரிகைகளில் பெயர்களைப் போட்டு பகிரங்கப்படுத்துகின்றன, கூட்டுறவு வங்கிகள். ஆனால், ரூ. 1.14 லட்சம் கோடி கடன் தள்ளுபடியால் பயனடைந்த கடன்தாரர்களின் பெயர்களை இதுவரை பாஜக அரசாங்கம் வெளியிடாமல் மவுனம் சாதிப்பது ஏனோ?

இந்த வாராக்கடன், 2016ம் ஆண்டில் 4 லட்சம் கோடிகளாக உயர்ந்தது. நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஷிப் பிரதாப் சுக்லா, கடந்த மார்ச் 31ஆம் வரை வங்கிகளின் செயல்படாத சொத்துக்களின் மதிப்பு 8.5 லட்சம் கோடியாகவுள்ளது என மத்திய ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்தாண்டு மார்ச் மாத இறுதிக்குள் இதன் மதிப்பு 9.5 லட்சம் கோடியாக உயரும் என இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்கூட்டமைப்பின் (ASSOCHAM) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளில் கடன்பெற்ற நிறுவனமோ அல்லது தனிநபரோ, அதனைத் திருப்பிச் செலுத்தாத நிலையில், அந்தத் தொகையானது வாராக்கடனாக இருக்கும். இந்த வாராக்கடன் நிலை குறிப்பிட்ட காலம் வரை நீடித்தால், இந்த கடன் தொகையானது செயல்படாத சொத்துக்களாகக் கருதப்படும்.

ஸ்விட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடக்கும் உலகப் பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசுவதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இந்தியாவின் வளர்ச்சி யாருக்கானது என்பது இப்போதாவது மக்களுக்கு புரிகிறதா என்பதுதானே முக்கியம்.

– நாடோடி.