Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

வாளும் இல்லை கேடயமும் இல்லை… மாணவர்களை போருக்கு அனுப்பும் சேலம் பெரியார் பல்கலை!; சீரழிவின் உச்சத்தில் ‘பிரைடு’!!

 

– சிறப்புச்செய்தி –

 

முன்னாள் பதிவாளர் தற்கொலை, பணி நியமனங்களில் பல கோடி ரூபாய் ஊழல், பேராசிரியர்களுக்குள் அடிதடி என புகார் வளையங்களில் சிக்கி மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் சேலம் பெரியார் பல்கலைக்கழகம், தொலைநிலைக் கல்விச் சேவையிலும் முற்றிலும் முடங்கிவிட்டதாக குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன.

 

சேலம் பெரியார் பல்கலைக்கழகம் கடந்த 1997ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி என பின்தங்கிய நான்கு மாவட்ட மாணவர்களின் நலனுக்காக இப்பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. 2001-2002ம் ஆண்டு முதல் ‘பிரைடு’ என்ற பெயரில் தொலைதூர கல்விச் சேவையும் தொடங்கப்பட்டது.

பெரியார் பல்கலைக்கழகம்

இதற்காக இந்தியா முழுவதும் தனியாருக்கு படிப்பு மையங்கள் (ஸ்டடி சென்டர்) தொடங்க பெரியார் பல்கலை அனுமதி வழங்கியது. தொலைதூர கல்வித் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகளில் காப்பி அடித்தல், பேப்பர் சேஸிங் என பெருமளவில் முறைகேடுகள் நடந்ததால், வெளிமாநிலங்களில் செயல்படும் படிப்பு மையங்களுக்கு திடீரென்று யுஜிசி அனுமதி மறுத்தது.

 

இதனால் கடந்த 20.5.2016 முதல் பெரியார் பல்கலையின் கீழ் தமிழ்நாட்டுக்கு வெளியே செயல்பட்டு வந்த அனைத்து படிப்பு மையங்களும் மூடப்பட்டது. இந்த திடீர் உத்தரவால் அதுவரை வெளி மாநில படிப்பு மையங்கள் மூலம் சேர்ந்த மாணவர்களுக்கு தேர்வு நடத்துவதிலும், முடிவுகளை வெளியிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டது.

 

இங்கிருந்துதான் பெரியார் பல்கலையின் தொலைநிலைக் கல்விச்சேவை பெரும் சரிவை சந்தித்து வருவதாக படிப்பு மைய நிர்வாகிகள் கூறுகின்றனர். தொலைநிலைக் கல்வியில் தொடரும் குளறுபடிகள் குறித்து படிப்பு மைய நிர்வாகிகள் சிலரிடம் நாம் நேரில் விசாரித்தோம்.

 

”பெரியார் பல்கலையில் தொலைநிலைக்கல்வித் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட தனியார் படிப்பு மையங்களுக்கு ஒரு மாணவர் சேர்க்கைக்கு 60 : 40 என்ற விகிதத்தில் கமிஷன் வழங்கப்படுகிறது.

துணை வேந்தர் கொழந்தைவேல்

அதாவது, பல்கலைக்கு 60 சதவீதமும், படிப்பு மையத்திற்கு 40 சதவீதமும் கமிஷன் கிடைக்கும். எளிமையாக சொல்வதென்றால், இளநிலை பட்டப்படிப்பில் ஒரு மாணவரை சேர்த்தால் 600 ரூபாயும், முதுநிலை பட்டப்படிப்பில் சேர்த்தால் 748 ரூபாயும் படிப்பு மையங்களுக்குக் வருவாய் கிடைக்கும்.

 

இந்த வருவாயில்தான் படிப்பு மைய அலுவலக அறை வாடகை, மின்சாரக் கட்டணம், ஊழியர்கள் ஊதியம், உள்கட்டமைப்பு ஆகியவற்றை சமாளித்தாக வேண்டும். தொடக்கத்தில் இருந்தே தேர்வு முடிவுகள் வெளியிடுவதிலும், சான்றிதழ்கள் வழங்குவதிலும் குறுபடிகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், கடந்த ஓராண்டாக குறித்த காலத்தில் தேர்வு நடத்துவதிலும் குழப்பங்கள் அரங்கேறி வருகின்றன.

 

காலண்டர் ஆண்டில் சேரும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் டிசம்பர் 15ம் தேதியும், கல்வி ஆண்டில் சேரும் மாணவர்களுக்கு மே 15ம் தேதியும் தேர்வுகள் நடத்தப்படுவது நடைமுறையில் இருந்து வந்தது.

 

கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடக்க வேண்டிய தேர்வு இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில்தான் நடத்தப்பட்டது. மே 15ல் தொடங்கியிருக்க வேண்டிய தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற அறிகுறியே இதுவரை தென்படவில்லை.

 

தொலைதூர கல்வித்திட்டத்தில் சேர்ந்த மாணவர்களுக்கு இதுவரை புத்தகங்கள் வழங்கப்படவில்லை. குறிப்பாக இளநிலை பட்டப்படிப்பில் ஆங்கிலம், வரலாறு ஆகிய பாடப்புத்தகங்களும், முதுநிலையில் தமிழ் பாடப்பிரிவுக்கும் இன்னும் புத்தகங்கள் அச்சிடப்படவே இல்லை.

 

இத்தனைக்கும் புத்தகங்களுக்கும் சேர்த்துதான் கட்டணம் வசூலிக்கிறோம். ஆனால் புத்தகங்களே இல்லாமல் மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள வேண்டிய விந்தை பெரியார் பல்கலையில் மட்டும்தான் உள்ளது.

 

புத்தகங்களைக் கேட்டு மாணவர்கள் எங்களை நச்சரிப்பதால், வேறு வழியின்றி நாங்கள் பழைய மாணவர்களிடம் இருந்து புத்தகங்களைப் பெற்றும், பலருக்கு நகல் எடுத்தும் கொடுத்து வருகிறோம். 5 பாடங்களுக்கும் புத்தகங்களை நகல் எடுத்தால் 800 ரூபாய்க்கு மேல் செலவாகிறது. இதற்கெல்லாம் கைக்காசை செலவழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொலைதூர கல்வித்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு தனியார் படிப்பு மையம் சார்பில் நகலெடுத்து வழங்கப்பட்ட பாடப்புத்தகங்கள்

புத்தகம் கிடைக்காத மாணவர்கள் பெரியார் பல்கலை ஆன்லைனில் வெளியிட்டுள்ள பாடப்புத்தகத்தை படிக்கும்படியும், இல்லாவிட்டால் சி.டி.,யில் பதிவிறக்கம் செய்து கொள்ளும்படியும் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்குநர் கூறுகிறார். வசதியில்லாத கிராமப்புற ஏழை மாணவர்கள்தான் தபால் வழியில் படிக்கின்றனர். அவர்கள் இணைய வசதிக்கு எங்கே போவார்கள்?

 

தவணை முறையில் கல்விக் கட்டணம் செலுத்தும் வசதி இருந்ததையும் திடீரென்று ரத்து செய்து விட்டனர். ஏழை மாணவர்கள் ரொம்பவே சிரமத்திற்கு உள்ளாகின்றனர்,” என்று புலம்பினார் படிப்பு மைய பெண் நிர்வாகி ஒருவர்.

 

தொலைநிலை கல்வி மையங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதிலும் பெருமளவு ஊழல் தாண்டவமாடியதாக மற்றொரு படிப்பு மைய நிர்வாகி கூறினார். முன்பு பல்கலையில் தற்காலிக ஊழியராகவும் பணியாற்றி வந்த இவர், ”எதற்கெடுத்தாலும் காசு காசுனு கேட்டு ஸ்டடி சென்டர் நிர்வாகிகளை பெரியார் பல்கலைக்கழகத்தில் டார்ச்சர் செய்கின்றனர்,” என்றார். அவர் மேலும் கூறுகையில்…

 

”படிப்பு மையங்களின் அங்கீகாரத்தை மூன்று ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்றார்கள். இதற்கான  விண்ணப்பக் கட்டணம் 5 ஆயிரம் ரூபாய் என்றனர். படிப்பு மைய அனுமதிக்கான கட்டணமே 500 ரூபாய்தான். ஆனால், அங்கீகாரம் புதுப்பிக்க அதை விட பத்து மடங்கு அதிக கட்டணம் கேட்பது முரணாக இருந்தது.

 

மாணவர் சேர்க்கை முடிந்து அது தொடர்பான விண்ணப்பங்கள், மாணவர்களின் சான்றிதழ்களை பல்கலையில் ஒப்படைக்க வேண்டும். அப்போது மாணவர்களின் சில ஆவணங்கள் சரியாக இல்லை எனக்கூறி, அதை சரிசெய்ய வேண்டுமானால் 55 ஆயிரம் ரூபாய் செலவாகும் என அப்போது தொலைநிலைக் கல்வி இயக்குநர் பொறுப்பில் இருந்த பேராசிரியர் பாலகுருநாதன் என்னிடம் வெளிப்படையாகவே கேட்டார்.

 

நானும் இந்தப் பல்கலையில் தற்காலிக ஊழியராகத்தான் இருக்கிறேன் என்று சொன்னதால் 5 ஆயிரம் ரூபாய் மட்டும் குறைத்தனர். ஆனாலும் லஞ்சம் கொடுத்து புதுப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மறுத்துவிட்டேன்.

 

இதனால் எங்கள் மையத்தில் இருந்து அனுப்பப்பட்ட 160 மாணவர்களின் சேர்க்கைக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. அதே மாணவர்களின் சேர்க்கை ஆவணங்களை வேறு ஒரு படிப்பு மையத்தின் மூலமாக அனுப்பும்போது எந்த மறுப்பும் சொல்லாமல் ஏற்றுக்கொண்ட விந்தையும் நடந்தது.

 

மாணவர் சேர்க்கைக்கான பிராஸ்பெக்டஸ் மற்றும் விண்ணப்பப்படிவத்திற்காக இளநிலைக்கு 150ம், முதுநிலைக்கு 300 ரூபாயும் கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் எங்களுக்குத் தெரிந்து இதுவரை யாருக்கும் பிராஸ்பெக்டஸ் கொடுத்ததாக தெரியவில்லை. சேர்க்கை விண்ணப்பத்தை பல்கலை இணையதளத்தில் இருந்து மாணவனே பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அப்படி இருக்கும்போது எதற்காக இந்தக் கட்டணக் கொள்ளை?

 

இதுமட்டுமின்றி, ஒரு தாளுக்கு ஆயிரம் ரூபாய் செலுத்தி விட்டால் போதும். வினாத்தாளும், விடைத்தாளையும் மாணவர்களின் கையிலேயே கொடுத்து விடுவார்கள். அவர்கள் வீட்டில் இருந்தே தேர்வு எழுதும் மோசமான சூழல் இன்னும் இருக்கிறது,” என்றார் அந்த முன்னாள் படிப்பு மைய உரிமையாளர்.

 

”பெரியார் பல்கலை ஆசிரியர்களுக்கு ஊதியம், பராமரிப்பு செலவினங்களுக்காக யுஜிசி ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் மட்டுமே வழங்குகிறது. உண்மையில் இதுபோன்ற செலவினங்களுக்கு ஆண்டுக்கு 36 கோடி ரூபாய் வரை தேவை. அதனால் தொலைதூர படிப்பு மையங்களில் நடக்கும் மாணவர் சேர்க்கை மூலம்தான் ஆசிரியர்களின் ஊதியம், பராமரிப்பு செலவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

தபால் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு புத்தகம் வழங்காதது, தேர்வு நடத்த தாமதம், எல்லாம் சரியாக இருந்தாலும் தேர்வு முடிவுகளை தாமதமாக வெளியிடுவது, மதிப்பெண் சான்றிதழ் தராமல் இழுத்தடிப்பது போன்றவற்றால் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.

 

இப்போதைய நிலையில் பல்கலை சார்பில் வங்கிக் கணக்கில் 150 கோடி ரூபாய் நிரந்தர வைப்பில் உள்ளது. இதே நிலை நீடித்தால் சீக்கிரமே பெரியார் பல்கலை சம்பளம்கூட கொடுக்க முடியாத அளவுக்கு திவால் ஆனாலும் ஆச்சர்யம் இல்லை,” என்கிறார் பல்கலையில் முன்பு முக்கிய பொறுப்பில் இருந்த ஊழியர் ஒருவர்.

பிரைடு மைய இயக்குநர் புவனலதா

இதுபற்றி நாம் பெரியார் பல்கலை தொலைதூர மைய இயக்குநரான பேராசிரியர் புவனலதாவின் கவனத்திற்குக் கொண்டு சென்றோம். துணைவேந்தர் அனுமதியின்றி பத்திரிகையாளர்களிடம் பேசக்கூடாது என ஆட்சேபித்தவரிடம், நீங்கள் அனுமதி வாங்கிவிட்டே பேசுங்கள் என்றோம். துணை வேந்தர் அனுமதியுடன் அவர் பேசினார்.

 

”சார்…. தமிழ்நாட்டிலேயே பெரியார் பல்கலைக்கழகத்தில்தான் தொலைதூர கல்வியில் மிக மிகக்குறைந்த கட்டணம் வாங்குகிறோம். அதனால்தான் தவணை முறையை ரத்து செய்து, ஒரே முறையில் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்பட்டது.

 

மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படாதது குறித்து எங்கள் கவனத்திற்கும் புகார்கள் வந்தன. இனிமேல், தொலைதூரக் கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே சேர்க்கை நடத்தப்படும். பாடங்களும் ஆன்லைன் மூலமே வழங்கப்படும். அதனால் புத்தகங்கள் வழங்குவதை நிறுத்தி விட்டோம்.

 

ஏற்கனவே கையிருப்பில் உள்ள புத்தகங்களை மாணவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம். ஆன்லைனில் படிக்க முடியாதவர்கள் சி.டி.,யில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது நகல் எடுத்துப் படிக்கலாமே?. இனிமேல் ஸ்டடி சென்டர்கள் மூடப்பட்டு, லேர்னிங் சப்போர்ட்டிங் சென்டர்களாக மாற்றப்போகிறோம்.

 

அதேபோல், கல்லூரியில் உள்ளதுபோல் தொலைதூரக் கல்வியில் படிப்பவர்களுக்கும் இனி செமஸ்டர் முறையில் தேர்வு நடத்தப்படும். அட்மிஷன் குறைந்து விட்டதாக கூறும் இதே காலக்கட்டத்தில் நாங்கள் 25 ஆயிரம் மாணவர்களை சேர்த்திருக்கிறோம். புகார் சொல்பவர்கள் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். பல்கலைக்கழகம் திவால் குறித்து நான் பதில் சொல்ல முடியாது,” என்றவரிடம்,

 

”புத்தகம் வழங்காவிட்டால் அதற்கென ஏன் கட்டணம் வசூலிக்க வேண்டும்?,” என்று கேட்டோம். அதற்கு அவர், ”புத்தகக் கட்டணத்தை மாணவர்களுக்கே திருப்பி வழங்குவதற்காக துணைவேந்தருக்கு நோட் ஃபைல் வைக்கிறேன்,” என்றார் புவனலதா.

பிரைடு மைய முன்னாள் இயக்குநர் பாலகுருநாதன்

படிப்பு மையங்களின் அங்கீகாரம் புதுப்பித்தலுக்காக அப்போதைய தொலைதூரக்கல்வி மைய இயக்குநர் பேராசிரியர் பாலகுருநாதன் லஞ்சம் கேட்டதாக சொல்லப்படும் புகார் குறித்து அவரிடமே விசாரித்தோம்.

 

”பெரியார் பல்கலை தொலைதூர கல்வி மையத்தை மறு சீரமைப்பு செய்ததே நான்தான். 5 ஆயிரம் பேராக இருந்த மாணவர் சேர்க்கையை 60 ஆயிரம் பேராக உயர்த்தினேன். அந்தப் பொறுப்பில் இருந்து வெளியேறி இரண்டு ஆண்டுகள் ஆச்சு.

 

இப்போது யார், எதற்கு அப்படி பேச வேண்டும்? யாராவது காழ்ப்புணர்வு காரணமாக என் மீது புகார் சொல்லியிருக்கலாம். என் பணிக்காலத்தில் யாரிடமும் அஞ்சு பைசா கூட வாங்காமல்தான் ஸ்டடி சென்டர்களுக்கு ரெனிவல் செய்து கொடுத்தேன்,” என்றார்.

 

நேற்றைய தினம் இதுகுறித்து தனியார் படிப்பு மைய நிர்வாகியிடம் பேசியபோது, ”தொலைதூரக் கல்வி மையத்தில் படிக்கும் மாணவர்களிடம் இருந்து தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 11ம் தேதி வரை பெறப்பட்டது. படிப்பு மையங்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களை பல்கலைக்கு சமர்ப்பிக்க வரும் 17ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

எப்படியும் இந்த மாத இறுதிக்குள் தேர்வுகள் தொடங்கி விடும் எனத்தெரிகிறது. ஆனாலும் அதிகாரப்பூர்வ கால அட்டவணை இன்னும் வரவில்லை,” என்றார்.

 

கடந்த மே மாதம் அழகப்பா பல்கலையில் நடந்த விழாவில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்றார். பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கடைசி நாள் வரை புத்தகங்கள்கூட வழங்காமலேயே தேர்வுக்கு அனுப்புவதுதான் சிறந்த உயர்கல்வியா?

 

– பேனாக்காரன்.