Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

‘எடப்பாடிய தூக்குங்க’; எம்எல்ஏக்கள் போர்க்கொடி!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டோம்; அவரை மாற்ற வேண்டும் என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் இன்று (22/8/17) ஆளுநர் (பொ) வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.

அதிமுகவில் நீண்ட இழுபறிக்குப் பின்னர் ஒருவழியாக எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் நேற்று ஒன்றாக இணைந்தது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். அவருடைய அணியைச் சேர்ந்த மாஃபா க.பாண்டியாராஜனுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

சமீப காலமாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இரு அணிகளையும் கடுமையாக விமர்சித்து வந்தனர். நேற்று இரு அணிகளும் இணைக்கப்பட்டபோதும்கூட தினகரன் ஆதரவு தரப்பை, அவ்விரு தரப்புமே கண்டுகொள்ளவில்லை.

இதனால் விரக்தி அடைந்த தினகரன் தரப்பினர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்து விட்டோம்; அவரை மாற்ற வேண்டும் என்று கோரி, இன்று தமிழக ஆளுநர் (பொ) வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்தனர். மொத்தம் 19 எம்எல்ஏக்கள் இவ்வாறு தனித்தனியாக கடிதம் (படம்) கொடுத்துள்ளனர்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தேவைப்பட்டால் ஆளும்கட்சி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்று கூறி வரும் நிலையில், ஆளுங்கட்சிக்குள்ளேயே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 19 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியிருப்பது நிலைமையை மேலும் சிக்கலுக்குள்ளாக்கி இருக்கிறது.

எனினும், டிடிவி தினகரன் தரப்பினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதுதான் நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளனரே தவிர, அதை அரசின் மீதான நம்பிக்கை இல்லை என்று கருதிவிட முடியாது. அதனால் முதல்வர் மாற்றப்பட்டாலோ அல்லது அவர்களின் மறைமுக நிபந்தனைகள் ஏற்கப்பட்டாலோ தினகரன் தரப்பினர் சமாதானம் அடைந்துவிடுவர் என்றும் தெரிகிறது.