Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

அஜித்தின் ‘விவேகம்’ பைசா வசூல் ஆகுமா?

ரசிகர்களால் அன்புடன் ‘தல’ என்று அழைக்கப்படும் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘விவேகம்’ படம், வரும் 24ம் தேதி ரிலீஸ் ஆகிறது. திரைக்கு வருவதற்கு முன்பே திரையரங்க விநியோக உரிமை, சாட்டிலைட் உரிமம், வெளிநாட்டு உரிமம் மூலம் ரூ.120 கோடிக்கு வியாபாரம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

அஜித்தின் சினிமா வாழ்வில், இந்தப்படம்தான் மிக அதிக பொருட்செலவில் தயாராகி உள்ளது. அதுவும் போட்ட பட்ஜெட்டுக்கு மேல். பெரும்பாலான படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடத்தப்பட்டு உள்ளது.

காஜல் அகர்வால், கதாநாயகியாக நடித்துள்ளார். கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் இந்தப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார். அவருடைய கேரக்டர் இதுவரை சஸ்பென்சாக வைக்கப்பட்டு உள்ளது. பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயும் நடித்துள்ளார்.

வணிக ரீதியான அம்சங்கள் இத்தனை இருந்தாலும், அஜித்தின் முந்தைய ‘வேதாளம்’, ‘வீரம்’ ஆகிய படங்கள் திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோரில் ஒரு தரப்புக்கு மட்டுமே லாபத்தை கொடுத்தது. இந்தப்படம் இரண்டு தரப்பையுமே திருப்தி படுத்துமா? என்பதுதான் இப்போதைய கேள்வி.

‘விவேகம்’ ரிலீஸை எதிர்பார்த்து கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (18/8/17) எந்த ஒரு புதுப்படமும் ரிலீஸ் ஆகவில்லை. இப்படி ஒரு நிகழ்வு, தமிழக திரையுலக வரலாற்றில் இதற்குமுன் நடந்ததில்லை.

இந்நிலையில் வரும் 24ம் தேதி (வியாழக்கிழமை) விவேகம் படம் ரிலீஸ் ஆகிறது. தமிழகத்தின் 95 விழுக்காடு திரையரங்குகளில் ‘விவேகம்’ படத்தை ரிலீஸ் செய்வதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. அதாவது ‘பாகுபலியை’ காட்டிலும் அதிக அரங்குகளில் இந்தப்படம் திரையிடப்படும் என சொல்லப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி வெள்ளிக்கிழமை (25/8/17), அதற்கு அடுத்து சனி, ஞாயிறு என தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் எப்படியும் இந்தப்படம் பெரிய அளவில் கல்லா கட்டிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. போட்டிக்கும் எந்தப் படமும் ரிலீஸ் ஆகவில்லை. அந்த எதிர்பார்ப்பில்தான் தமிழக திரையரங்கு உரிமம் மட்டும் சுமார் ரூ.50 கோடி வரை விற்பனை ஆகியுள்ளது. சென்னை முழுவதும் ஜாஸ் சினிமாஸ் நிறுவனம், விநியோக உரிமையை கைப்பற்றியுள்ளது.

இப்போதே தயாரிப்பாளருக்கு போட்ட முதல் லாபத்துடன் கிடைத்து விட்டதாகச் சொல்லப்படும் நிலையில், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கு லாபம் கிடைக்குமா? போட்ட காசை எடுத்து விட முடியுமா? என்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.

மேலும், தமிழ் திரை உலக வரலாற்றில் இல்லாத அளவுக்கு ‘விவேகம்’ படத்தை முதல் நாளில் மட்டும் தொடர்ந்து 7 காட்சிகள் திரையிடவும் தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

தல ரசிகர்களுக்கு ஆகஸ்ட் மாதமே தீபாவளிதான்!

– இளையராஜா.

இணையத்தில் வாசிக்கhttp://puthiyaagarathi.com