Tuesday, December 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

வைத்திலிங்கம் நீக்கம்: டிடிவி அதிரடி

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் நேற்று ஒன்றாக இணைந்தது. இரு அணிகளும் இணைப்புக்குப் பின்னர் நேற்று மாலை ஊடகங்களிடம் பேசிய எம்பி வைத்திலிங்கம், அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்படுவார் என்று தெரிவித்தார்.

பொதுச்செயலாளரை நீக்கும் அதிகாரம் பொதுக்குழுவிற்குதான் உண்டு என்று அப்போதே வைத்திலிங்கம் கருத்துக்கு தினகரன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், எடப்பாடி அணியில் உள்ள அமைச்சர் ஓஎஸ் மணியன், வைத்திலிங்கம் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும், சசிகலா தொடர்பாக யாரும் விவாதிக்கவில்லை என்றும் கூறினார்.

இந்நிலையில் அதிமுகவின் துணை பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் வைத்திலிங்கத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார். சசிகலாவுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் கட்சியில் இருந்து கட்டம் கட்டப்படுவார்கள் என்றும் தினகரன் தரப்பு எச்சரித்துள்ளது.

அதிகாரமில்லை: இதுகுறித்து பதில் அளித்த எம்பி வைத்திலிங்கம், ”என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் துணை பொதுச்செயலாளருக்கு இல்லை,” என்றார்.

தங்கதமிழ்ச்செல்வன்: தினகரன் அணியைச் சேர்ந்த தங்கதமிழ்ச்செல்வன் எம்எல்ஏ பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், ”கட்சியை இரண்டாக உடைத்ததுடன், இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதற்கும் காரணமாக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவரை முதல்வர் ஆக்கியவர் சசிகலாதான்.

நம்பிக்கை துரோகம் செய்த பன்னீர்செல்வத்துடன் எதற்காக எடப்பாடி பழனிசாமி இணைய வேண்டும். அதனால்தான் அவர் மீது நம்பிக்கை இழந்து விட்டோம். அவரையும் முதல்வர் ஆக்கிவிட்டு, சிறையில் இருப்பவர்தான் சசிகலா. ஆண்டவன் இருக்கான். தண்டனை கொடுப்பான்,” என்றார்.

Leave a Reply