Friday, June 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

நெல்லை: நெஞ்சை உலுக்கும் சம்பவம்; கந்து வட்டி கொடுமையால் ஒரு குடும்பமே தீக்குளிப்பு; தொடரும் துயரம்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (அக். 23, 2017) காலை, கந்துவட்டி கொடுமையால் கைக்குழந்தையுடன் ஒரு குடும்பமே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (32). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சுப்புலட்சுமி (24). இவர்களுக்கு 4 வயதில் மதிசரண்யா என்ற மகளும், 2 வயதில் அக்ஷய சரண்யா என்ற பெண் கைக்குழந்தையும் உள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் இன்று நடந்து வருகிறது. இந்த முகாமில் மனு கொடுப்பதற்காக இசக்கிமுத்து குடும்பத்துடன் ஆட்சியர் அலுவலகம் வந்தார். மனுக்கள் கொடுக்கும் அரங்கு முன்பு திடீரென்று அவர்கள் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை தங்கள் மீதும், குழந்தைகள் மீதும் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டனர்.

தீ மளமளவென பற்றி எரிந்து. இதனால் ஆட்சியர் வளாகமே கடும் பரபரப்படைந்தது. பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் தீயை அணைத்து அவர்களை மீட்டனர். நான்கு பேரும் உடனடியடியாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர் க்கப்பட்டனர்.

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவர்களை நேரில் சென்று பார்த்தார். அவர்களுக்கு உடலில் 70 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

விசாரணையில், தற்கொலைக்கு முயன்ற இசக்கிமுத்து அவருக்குத் தெரிந்த முத்துலட்சுமி என்பவரிடம் ரூ.1.45 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கி இருந்தாராம். அதற்கு அவர் வட்டி, அசல் எல்லாம் சேர்த்து இதுவரை ரூ.2.34 லட்சம் திருப்பி செலுத்திவிட்டாராம். ஆனாலும், கடன் கொடுத்தவர்கள் தரப்பிலிருந்து தொடர்ந்து வட்டித் தொகை கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

இதுகுறித்து இசக்கிமுத்து ஏற்கனவே அச்சன்புதூர் காவல்நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். ஆனால் காவல்துறையினர் அந்த புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஏற்கனவே நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் ஆறு முறை புகார் மனு அளித்தும், அதன் மேலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில்தான் அவர் இன்றும் புகார் மனு கொடுக்க வந்திருக்கிறார்.

கடும் விரக்தியில் இருந்த அவர் தனது குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சித்து இருப்பதும் தெரியவந்துள்ளது. எனினும், அவர் எவ்வளவு கடன் பெற்றிருந்தார், அந்த முத்துலட்சுமி யார் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில், ”கந்துவட்டி புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

கந்துவட்டியில் இத்தனை வகைகளா?:

தமிழகத்தின் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றான நெல்லை மாவட்டத்தில் கூலி தொழிலாளர்கள், பீடி தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். இம்மாவட்டத்தில் கந்துவட்டியும், ரியல் எஸ்டேட்டும் பூதாகரமான பிரச்னையாக உள்ளது. பெரும்பாலானோர் தங்கள் தொழில், குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண தேவைகளுக்கு கடன் வாங்கியே வாழ்க்கை நடத்த வேண்டியுள்ளது.

இதையே சாக்காக வைத்து கொண்டு கந்து வட்டிக்காரர்கள் களம் இறங்கி அப்பாவி மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி, நாள் வட்டி, வார வட்டி என பல வழிமுறைகளை அவர்கள் கையாள்கின்றனர்.

தொடரும் துயரம்:

நெல்லை மாவட்டத்தில் சமீபகாலமாக நிகழும் பல தற்கொலை சம்பவங்களுக்கு பின்னணியில் கடனும் கந்துவட்டியும் இருப்பது காவல்துறை அறிந்த ஒன்றாகும். பாளையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கந்துவட்டி கொடுமையால் நகை தொழில் செய்யும் கோபால் ஆசாரி மற்றும் அவரது குடும்பத்தினர் 6 பேர் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

புளியங்குடியில் கடந்த 2012ம் ஆண்டு இரும்பு வியாபாரியின் குடும்பம் கந்துவட்டி தொல்லையால் தற்கொலைக்கு முயன்றது. கந்துவட்டிக்காரர்களின் கடுமையான வார்த்தைகளுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் பல ஏழை குடும்பங்கள் தற்கொலை செய்து கொள்வதையே தீர்வாக எண்ணுகின்றன.

மிரட்டல்:

கந்துவட்டிக்காரர்கள் வட்டிக்கு வாங்கியவர்களின் வீட்டை எழுதி வாங்குவது, எழுதி கொடுக்க மறுப்பவர்களை காரை ஏற்றிக் கொல்வேன் என மிரட்டுகின்றனர். பாளையங்கோட்டையில் பல வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடன் வாங்கியவர்கள், கந்துவட்டி கொடுமை குறித்து காவல்துறையில் புகார் செய்யவும் பயப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினால் மட்டுமே கந்துவட்டி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.