Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கோஹ்லி சதம் வீண்; பந்து வீச்சு சொதப்பல்; நியூசிலாந்து அபார வெற்றி

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பகலிரவு ஆட்டமாக இன்று (அக். 22, 2017) நடந்தது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் ஆகியோர் பெரிய அளவில் ரன்களை குவிக்கத் தவறினர். இந்திய அணி தரப்பில் கேப்டன் விராட் கோஹ்லி அதிகபட்சமாக 121 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்து, தினேஷ்கார்த்திக் 37 ரன்கள் எடுத்ததுதான் இந்திய அணி வீரர்களின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 280 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில், அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதையடுத்து, 281 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்து அணி ஆட்டத்தைத் தொடங்கியது. அதிரடி ஆட்டக்காரரான மார்டின் குப்தில், 32 ரன்களில் வெளியேறினார். ஹர்திக் பாண்ட்யா அவரை ஆட்டமிழக்கச் செய்தார். அடுத்து கோலின் விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார். அவர் 28 ரன்களுடன் நடையைக் கட்டினார். கேப்டன் கேன் வில்லியம்ஸ் 6 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். அவரை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் வெளியேற்றினார்.

அடுத்தடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகள் வீழ்ந்ததால் இந்திய அணிக்கு நம்பிக்கை பிறந்தது. ஆனால் அடுத்து வந்த டாம் லாதம், ராஷ் டெய்லர் இணை இந்திய பந்து வீச்சை துவம்சம் செய்தனர். பந்து வீச்சாளர்களை மாற்றி மாற்றி பயன்படுத்தியும் எதுவும் எடுபடவில்லை.

இதனால் அந்த அணி 48 ஓவர்களில் 280 ரன்களை எட்டியது. வெற்றிக்கு இன்னும் ஒரு ரன் தேவை என்ற நிலையில், ராஷ் டெய்லர் 95 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தார். அவர் சதம் அடிக்க இன்னும் 5 ரன்களும், அந்த அணியின் வெற்றிக்கு ஒரு ரன்னும் தேவையாக இருந்தது.

அதன் காரணமாக ராஷ் டெய்லர் சிக்சர் அடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். கடைசியில் ஒரு பந்தை அவர் எல்லைக் கோட்டை நோக்கி அடிக்க முயன்றபோது அந்தப் பந்து சாஹல் கையில் நேராக சென்று தஞ்சம் அடைந்தது. அதனால் ராஷ் டெய்லரின் சதம் அடிக்கும் வாய்ப்பு மயிரிழையில் நழுவியது. நியூசிலாந்து அணியில் டாம் லாதம் அதிகபட்சமாக 103 ரன்களை குவித்தார்.

அதன்பின்னர் களமிறங்கிய நிகோலஸ் பவுண்டரி அடித்து வெற்றி இலக்கை எட்ட வைத்தார். 49 ஓவர்களில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை அபாரமாக வீழ்த்தியது. இதன்மூலம் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1&0 கணக்கில் நியூசிலாந்து முன்னிலை வகிக்கிறது.

இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். நியூசிலாந்து அணியின் டாம் லாதம் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

200-வது போட்டியில் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, சதம் அடித்து சாதனை படைத்தும், இந்த போட்டியில் தோற்றது ரசிகர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டி, வரும் 25ம் தேதி, புனேயில் நடக்கிறது.