Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பருவமழை: சேலத்தில் முக்கிய ஏரிகள் நிரம்பின! பார்த்தாலே பரவசம்; எச்சரிக்கையும் தேவை!

தென்மேற்கு மற்றும்
வடகிழக்கு பருவமழை
ஓரளவு கைகொடுத்ததால்
சேலத்தில் மூக்கனேரி,
புது ஏரி ஆகியவை
முழுமையாக நிரம்பின.
இதனால் ஏரிப்பாசனத்தை
நம்பி இருக்கும் விவசாயிகள்
பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நிரம்பி வழியும் மூக்கனேரியின் நீர்ப்பரப்பில் முகம் பார்க்கும் மேகங்கள்…

தமிழக அளவில் நடப்பு ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை நன்றாகவே பெய்துள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் பரவலாக அதிகரித்திருக்கிறது. ஏரிகள் உள்ளிட்ட கணிசமான நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. டிசம்பர் வரை நமக்கு வடகிழக்குப் பருவமழை பெய்ய இருக்கிறது. சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை இவ்விரு பருவமழைக் காலங்களும், இந்த ஆண்டில் பெரிய அளவில் விவசாயிகளுக்கு துணை புரிந்துள்ளது எனலாம்.

 

சேலம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 105 ஏரிகள் உள்ளன. தவிர, அந்தந்த கிராம ஊராட்சி நிர்வாகத்தின் கீழும் ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பனைமரத்துப்பட்டி ஏரி உள்ளிட்ட சில ஏரிகளைத் தவிர மற்ற ஏரிகளில் நீர் நிரம்பி உள்ளன. சேலம் நெய்க்காரப்பட்டி ஏரி 20 ஆண்டுகளுக்கு முன்பு நிரம்பியது. அதன்பிறகு இந்தாண்டுதான் அந்த ஏரி முழுவதும் நிரம்பி வழிகிறது.

இனாம் பைரோஜி ஏரி 14 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. அந்த ஏரியும் முழுமையாக நிரம்பியுள்ளது. அதேபோல் 16 மில்லியன் கன அடி கொண்ட பூலாவரி ஏரியும் இந்தாண்டில் நிரம்பி இருக்கிறது. இவ்விரு ஏரிகளுமே சில ஆண்டுகளாக வறண்டு கிடந்தன.

 

மேலும், சேலம் மாநகரத்தை ஒட்டியுள்ள கன்னங்குறிச்சி புது ஏரி, கடந்த அக்டோபர் மாதத்தில் அடித்துப் பெய்த மழையால் நிரம்பி வழிகிறது. இந்த ஏரியின் கொள்ளளவு 13 மில்லியன் கன அடி. தற்போது முற்றிலும் நிரம்பி உள்ளதால், கடல்போல் காட்சி அளிக்கிறது. ஏற்காடு மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகவே இந்த ஏரி நிரம்பி இருக்கிறது. செப்டம்பர் மாதத்திலும் ஓரளவு மழை பெய்திருந்தாலும்கூட, வரத்துக் கால்வாய்கள் அடைப்பட்டுக் கிடந்ததால் ஆக்கிரமிப்புகளை கடந்து மழைநீரால் ஏரிக்குள் வர முடியவில்லை.

நாம் செப். 1ம் தேதியன்று
கன்னங்குறிச்சி புது ஏரியைப்
பார்வையிட்டபோது, முற்றிலும்
வறண்டு கிடந்தது. ஏரியின்
மையப்பகுதியில் மட்டும்
சிறு குட்டைபோல் தண்ணீர்
தேங்கி இருந்தது. ஆனால்
தொடர் கனமழையால் இன்றைக்கு
புது ஏரி முழுவதும் நிரம்பி
வழிகிறது. ஏரியின் தோற்றமே,
அழகுற மாறியிருக்கிறது.
சேலம் மற்றும் சுற்றுவட்டாரத்தைச்
சேர்ந்த பொதுமக்கள்,
ஏரி பாசனத்தை நம்பி இருக்கும்
விவசாயிகள் ஏரிக்கரையில் உள்ள
முனியப்பன் கோயிலில் வழிபட்டுச்
செல்கின்றனர். நீச்சல் விரும்பிகள்
குளித்து மகிழ்கின்றனர்.
சிறு சுற்றுலாத்தலமாகவே
மாறியிருக்கிறது என்றும்
சொல்லலாம்.

புது ஏரி நிரம்பியதை அடுத்து, அதன் உபரி நீர், கன்னங்குறிச்சியின் மற்றொரு முக்கிய ஏரியான மூக்கனேரிக்குச் செல்கிறது. இதனால் அந்த ஏரியும் முழுமையாக நிரம்பி, கடல்போல காட்சி அளிக்கிறது.

 

மூக்கனேரி,
சில ஆண்டுகளுக்கு
முன்பு தூர்வாரப்பட்டது.
ஏரியின் மையப்பகுதியில்
நீர்த்திட்டுகள் அமைத்தும்,
அடர்த்தியான மரங்களும்
வளர்க்கப்பட்டு உள்ளன.
பறவைகள் வாழிடமாகவும்
இந்த ஏரி புதிய பரிமாணம்
அடைந்தது. படகு சவாரி
வசதியும் உள்ளது.
தூர்வாரப்பட்டதால், மூக்கனேரியில்
நீண்ட காலத்திற்கு தண்ணீர்
தேங்கி இருக்கிறது.
இதனால் சுற்றுவட்டாரத்தில்
நிலத்தடி நீரும் உயர்ந்து
வருவதுடன், விவசாயமும்
செழிப்படைந்துள்ளது.

நிரம்பி வழியும் கன்னங்குறிச்சி புது ஏரியில் உற்சாக குதியாட்டம் போடும் சிறுவர்கள்…

விடுமுறை நாள்களில்
கன்னங்குறிச்சி புது ஏரி,
மூக்கனேரி ஆகிய இரு
ஏரிகளையும் பார்வையிட
வரும் பொதுமக்களின் கூட்டம்
கணிசமாக அதிகரித்திருக்கிறது.
நீர்நிலைகளில் மழை நீர் தேங்க,
குடிமராமத்துப் பணிகளை
முன்னெடுத்ததும் முக்கிய காரணம்.
இனி வரும் காலங்களிலும்
அனைத்து நீர்நிலைகளையும்
குடிமராமத்துப் பணிகளை
முடுக்கி விட வேண்டும் என்பதே
எல்லோருடைய எதிர்பார்ப்பாகவும்
உள்ளது.

எச்சரிக்கை தேவை!

 

கன்னங்குறிச்சி புது ஏரி, மூக்கனேரி ஆகியவற்றை பார்வையிட வரும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் ஏரிகளில் குளித்து மகிழ்கின்றனர். பள்ளி சிறுவர்களும் ஏரிகளில் குதித்தும், நீச்சல் அடித்தும் கும்மாளமிடுகின்றனர். இதுபோன்ற தருணங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை பாதுகாப்பு போடப்படுவதன் மூலம் அசம்பாவிதங்களைத் தவிர்க்க முடியும். இதையும் சேலம் மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

மதுக்கூடமாக மாறிய ஏரிக்கரை!
திறந்தவெளி மதுக்கூடமாக மாறிய புது ஏரிக்கரை

கன்னங்குறிச்சி புது ஏரி,
மூக்கனேரி ஆகியவை
நிரம்பினாலும் நிரம்பியது,
மது குடிக்கிகளுக்கும்
உற்சாகம் நிலை
கொள்ளவில்லை போலும்.
மதுபுட்டிகள், பக்க உணவுகளுடன்
ஏரிக்கரைக்கு படையெடுக்கும்
குடிகாரர்கள் அந்த இடத்தையே
திறந்தவெளி மதுக்கூடமாக
மாற்றி விடுகின்றனர்.
ஊருக்கு நடுவே டாஸ்மாக்
கடைகள் வந்தபிறகு,
குடிகாரர்களும் ஒளிந்தோ,
மறைத்தோ குடிப்பதில்லை.

 

அவர்களும் பலர்
முன்னிலையில்
மது புட்டிகளை திறந்து,
ஊற்றிக்கொள்ளத்
தயங்குவதுமில்லை.
மது போதையில் சிலர்
ஏரிக்கரையிலேயே மலம்
கழித்துவிட்டுச் செல்கின்றனர்.
அவர்களிடம் தூய்மை இந்தியா
பற்றி எல்லாம் சொன்னாலும்
எடுபடப்போவதில்லை.
நாளுக்குநாள் பள்ளிச்சிறுவர்கள்,
பெண்களும் இவ்விரு
ஏரிகளையும் சுற்றிப்பார்க்க
வந்து செல்வது கணிசமாக
அதிகரித்துள்ளது. இந்நிலையில்
குடிகாரர்களால் ஏற்படும்
அசம்பாவிதங்களைத் தடுக்கவும்
காவல்துறையினர் விரைந்து
காரியமாற்ற வேண்டும்.

 

– பேனாக்காரன்