Tuesday, December 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

போராட்டத்தில் ஈடுபட்டால் சஸ்பெண்ட்! ஊழியர் விரோத போக்கில் பெரியார் பல்கலை!!

காத்திருப்புப் போராட்டத்தில்
ஈடுபட்ட தற்காலிக ஊழியர்கள்
57 பேருக்கு ஒரே நாளில்
குற்றச்சாட்டு குறிப்பாணை
வழங்கி, பெரியார் பல்கலை
நிர்வாகம் முரட்டுத்தனமான
ஊழியர் விரோத
நடவடிக்கையில்
ஈடுபட்டுள்ளது.

சேலம் பெரியார் பல்கலையில் நிரந்தர ஊழியர்களுடன், ஒப்பந்த அடிப்படையில் 329 ஆசிரியர் அல்லாத ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். எழுத்தர், உதவியாளர், தட்டச்சர், தகவல் உள்ளீட்டு அலுவலர், கண்காணிப்பாளர், சுருக்கெழுத்தர் என பல நிலைகளில் தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுகின்றனர்.

 

ஆசிரியர் அல்லாத ஒப்பந்தப் பணியாளர்கள் 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பல்கலை நிர்வாகத்துடன் பலகட்டமாகப் பேச்சுவார்த்தை நடத்தினர். தொகுப்பூதிய பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை நாள் கணக்கில் அல்லாமல் மாத அடிப்படையில் கணக்கிட்டு வழங்க வேண்டும்; மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலியாக உள்ள பணியாளர்களை தொகுப்பூதியத்திற்கு மாற்ற வேண்டும்; ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் ஊழியர்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் ஆகியவை அவர்களின் கோரிக்கைகளுள் முதன்மையானவை.

நிர்வாகத்துடனான பலகட்ட பேச்சுவார்த்தைகளிலும் சுமூக முடிவு எட்டப்படாததை அடுத்து, கடந்த செப். 23ம் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புப்பட்டை அணிந்து கொண்டு அன்றாட பணிகளில் ஈடுபட்டனர். அடுத்தக்கட்ட நகர்வாக கடந்த அக். 8ம் தேதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு திமுக புள்ளிகளும் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தது, பல்கலை நிர்வாகத்தை ரொம்பவே எரிச்சலூட்டியது.

 

அதன் விளைவு… முக்கிய தொழிற்சங்க நிர்வாகிகளான சக்திவேல், கிருஷ்ணவேணி, கனிவண்ணன், செந்தில்குமார் ஆகிய நான்கு பேரை கடந்த அக். 29ம் அதிரடியாக தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார் துணைவேந்தர் குழந்தைவேல். எங்கே அத்துமீறி அலுவலகத்திற்கு வந்து விடுவார்களோ எனக்கருதிய பல்கலை., பயோமெட்ரிக் உபகரணத்தில் இருந்தும் அவர்களின் பெயர்களை நீக்கி, தனது ஊழியர் விரோதப் போக்கைத் தணித்துக் கொண்டிருக்கிறது.

 

இதனால் கொதித்தெழுந்த தற்காலிக ஊழியர்கள் 200க்கும் மேற்பட்டோர், பல்கலை வளாகத்தில் பெரியார் சிலை அருகே, தரையில் அமர்ந்து அக். 30ம் தேதி முதல் நவ. 1ம் தேதி வரை தொடர்ச்சியாக மூன்று நாள்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதற்கிடையே,
தொழிலாளர் நலத்துறை,
பல்கலை தரப்பு,
தொழிற்சங்க தரப்பும்
கலந்து கொண்ட
முத்தரப்பு பேச்சுவார்த்தை
நடந்தது. அப்போது,
உடனடியாக போராட்டதைக்
கைவிடும்படி தொழிலாளர்
நலத்துறை உதவி ஆணையர்
சங்கீதா கேட்டுக்கொண்டதற்கு
இணங்க, தற்காலிக
ஊழியர்கள் போராட்டத்தைக்
கைவிட்டனர்.

 

மீண்டும் நவ. 7ம் தேதி
நடந்த முத்தரப்புப்
பேச்சுவார்த்தையின்போது,
பெரியார் பல்கலை தரப்பு,
நான்கு ஊழியர்கள் மீதான
பணியிடைநீக்க உத்தரவை
திரும்பப் பெற முடியாது
என்றும், இதற்கென
அமைக்கப்பட்ட குழுவின்
பரிந்துரைப்படிதான் அடுத்தக்கட்ட
நடவடிக்கை எடுக்க முடியும்
என்று புறமுதுகில் குத்தியது.
தொழிலாளர் நலத்துறையின்
அறிவுரையை மீறி, பல்கலை
ஒருதலைப்பட்சமாக
செயல்படுவது தற்காலிக
ஊழியர்களிடையே மேலும்
சங்கடத்தை ஏற்படுத்தியது.

 

அத்தோடு இப்பிரச்னையை
விட்டுவிடவில்லை பல்கலை.
காத்திருப்புப் போராட்டத்தில்
ஈடுபட்ட ஆசிரியர் அல்லாத
பணியாளர்கள் 57 பேருக்கு
வெள்ளிக்கிழமை (நவ. 8)
ஒரே நாளில், விளக்கம் கேட்டு
குற்றச்சாட்டு குறிப்பாணையை
வழங்கி இருக்கிறார்
பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல்.

தினக்கூலி பணியாளர் பிரகாஷ்
என்பவருக்கு பதிவாளர்
அனுப்பியுள்ள குறிப்பாணையில்,
”தமிழக அரசு ஆணைக்கிணங்க
கடந்த 31.10.2019ம்
தேதி காலை 10 மணிக்கு,
பல்கலை வளாகத்தில்
தேசிய ஒற்றுமை
நாள் உறுதிமொழி ஏற்பு
நிகழ்விற்கு ஏற்பாடு
செய்யப்பட்டு இருந்தது.
துணைவேந்தர் தலைமையில்
இந்நிகழ்ச்சி நடந்தது.
அன்றைய தினம் பணிக்கு
வந்திருந்த ஆசிரியர்கள்,
மாணவர்கள், அலுவலர்களில்
ஒரு பகுதியினர் இந்நிகழ்ச்சியில்
கலந்து கொண்டு உறுதிமொழி
எடுத்துக்கொண்டனர்.

 

இந்நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொள்ளாமல் சற்று தொலைவில் மற்ற சிலருடன் சேர்ந்து கூட்டமாக அமர்ந்து கொண்டு இருந்தது, அந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்விற்கு அவமரியாதை செய்ததாக பல்கலை நிர்வாகம் கருதுகிறது. மேற்சொன்ன ஒழுங்கீனமான நடவடிக்கைக்கு தங்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க க்கூடாது?,” என்று அந்த குற்றச்சாட்டு குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

இதற்கான விளக்கத்தை நவ. 13ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்றும் பதிவாளர் தெரிவித்துள்ளார். காத்திருப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட 200 பேருக்கும் இதுபோன்ற குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்படும் எனத்தெரிகிறது. மேலும், உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் கலந்து கொள்ளாத எத்தனையோ பேராசிரியர்களும் உள்ளனர். அவர்கள் மீதும் இத்தகைய நடவடிக்கை பாயுமா? என்ற வினாவும் எழாமல் இல்லை.

 

இதுகுறித்து பெரியார் பல்கலை தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சக்திவேலிடம் கேட்டபோது, ”தேசிய ஒற்றுமைநாள் உறுதிமொழி உள்பட சம்பிரதாயமாக நடக்கும் இதுபோன்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகளில் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை கலந்து கொள்ளச்சொல்லி பொதுவாக கட்டாயப்படுத்துவதில்லை. அதுபோன்ற சமயங்களில்கூட எங்களை வழக்கம்போல் அலுவலக வேலைகளைத்தான் பார்க்கச் சொல்வார்கள். இப்படித்தான் காலங்காலமாக நடந்து வருகிறது.

மேலும், காத்திருப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அன்றைய தினம், பணிக்குச் செல்லாமல் ஆப்சென்ட் ஆகியிருந்தனர். அப்படி இருக்கும்போது அந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் எப்படி கலந்து கொள்ள முடியும்? ஆசிரியர் அல்லாத பணியாளர்களை பழிவாங்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் எங்கள் மீது இதுபோன்ற ஒழுங்கு நடவடிக்கைகளை பல்கலை நிர்வாகம் எடுத்து வருகிறது. எங்கள் கோரிக்கைகளை ஏற்று, ஒழுங்கு நடவடிக்கையை பல்கலை நிர்வாகம் கைவிட வேண்டும்,” என்றார்.

 

குற்றச்சாட்டு குறிப்பாணைக்கு என்னதான் விளக்கம் அளித்தாலும், அது திருப்தி அளிக்கவில்லை என்றுகூறி அவர்களில் சில பேரையாவது பணியிடை நீக்கம் செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்றும் சிலர் கூறுகின்றனர்.

 

சொற்ப ஊதியம் பெறும் ஒப்பந்த ஊழியர்கள் மீது இவ்வளவு கொடூர முகம் காட்டும் பெரியார் பல்கலை மீது வேறு சில குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.

 

”போலி ரசீது மோசடி
புகாரில் லஞ்ச ஒழிப்பு
காவல்துறை விசாரணையில்
சிக்கியதுடன், பணியிடை
நீக்கத்திற்கும் உள்ளான
பேராசிரியர் கிருஷ்ணகுமார்
தொடர்ந்து டீன் பதவியில்
இருக்கிறார். மாஜி பதிவாளர்
அங்கமுத்து எழுதிய
தற்கொலை கடிதத்தில்,
கிருஷ்ணகுமாரைத்தான்
பல்கலை முறைகேடுகளுக்கெல்லாம்
‘மூளை’யாக செயல்பட்டார்
என்றும் குறிப்பிட்டுள்ளார்.
போலி முன்அனுபவ சான்றிதழ்
புகாரில் சிக்கிய பெரியசாமி
தமிழ்த்துறைத் தலைவராக
இருக்கிறார். படித்தது ஒரு துறை;
பணியாற்றுவது வேறு துறை
என்று தணிக்கை அறிக்கையில்
ஆட்சேபிக்கப்பட்ட
பேராசிரியர் தங்கவேல்,
பதிவாளராக பொறுப்பு
வகிக்கிறார்.

 

பேராசிரியர்கள் முருகேஷ்,
சங்கீதா, கோவிந்தராஜ்,
செங்கோட்டுவேலன்,
கார்த்திகேயன் ஆகியோர்
மீதும் போலி அனுபவச் சான்றிதழ்
புகார்கள் தணிக்கை
அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு
உள்ளன. உரிய கல்வித்தகுதி
இல்லாமல் சூர்யகுமார் என்பவர்
உதவி பேராசிரியராக உள்ளார்.
இப்படி புகார்களில் சிக்கியவர்களிடம்
இதுவரை ஒரு சிறு
விளக்கம்கூட பெறாத
பல்கலைக்கழகம்தான்,
சாமானியர்களான தினக்கூலி
பணியாளர்களிடம் முஷ்டியை
முறுக்குகிறது,” என்று பல்கலை
வட்டாரத்தில் புலம்பல்கள்
இல்லாமலும் இல்லை.

 

”ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை”

 

என்பதை மாண்புமிகு துணைவேந்தரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

 

– பேனாக்காரன்

Leave a Reply