-மகளிர் தின ஸ்பெஷல்-
”இந்த உலகத்துல
நாம பயன்படுத்திய பிறகு
தூக்கி எறியப்படும் காகிதம்,
தகரம், உடுத்தின பிறகு
வீசப்படும் துணிமணிகள்னு
எல்லாமே மறுசுழற்சி மூலமாக
திரும்பவும் ஏதோ ஒரு ரூபத்துல
பயன்பாட்டுக்கு வந்துடுது.
அதனால இங்கே வேஸ்ட்னு
எதுவுமே இல்ல.
செத்ததுக்கப்புறம் எரித்து
சாம்பலாகிடற மனுஷங்கள
வேணும்னா வேஸ்ட்னு
சொல்லலாம்,” என போகிற
போக்கில் வாழ்க்கையின்
ஆகப்பெரும் தத்துவத்தை
சொல்கிறார் மலர்மணி (37).
கொடிய வறுமையும்,
அனுபவங்கள் கற்றுக்கொடுத்த
பாடமும்தான் அவரை இந்தளவுக்கு
பக்குவமாக பேச வைத்திருக்கிறது.
வாழ்வியல் சூழலுக்கு ஏற்பதான்
ஒருவரின் சிந்தனையும் அமைகிறது.
அதற்கு மலர்மணியும்
விதிவிலக்கு அன்று.
அவர் எதற்காக
பழைய காகிதம், பழைய இரும்பை
உதாரணமாகக் கூறினார்
என்பதற்குக் காரணங்கள்
இல்லாமல் இல்லை.
சேலம் மாவட்டம்
இளம்பிள்ளை
பெருமாகவுண்டன்பட்டியில்
கடந்த பதினோரு ஆண்டுகளாக
பழைய இரும்பு, காகிதம்,
காலி அட்டைப்பெட்டிகள்,
நூற்பு ஆலைகளில் இருந்து
அப்புறப்படுத்தப்படும் கழிவு நூல்,
காகித உருளைகள் (கோன்)
ஆகியவற்றை வாங்கி,
தரம் பிரித்து மறுசுழற்சி
பயன்பாட்டிற்காக விற்பனை
செய்து வருகிறார், மலர்மணி.
கணவர் சின்னதுரையும்
அவருடன் இணைந்தே
பயணிக்கிறார்.
ராமகிருஷ்ணன், சுஜிதா, தர்ஷன்
என மூன்று பிள்ளைகள்.
பி.காம்., முடித்துவிட்ட
மூத்த மகன் ராமகிருஷ்ணன்,
பெற்றோரின் தொழிலில்
ஒத்தாசையாக இருக்கிறார்.
ஒரு மாலைப் பொழுதில் அவரை சந்தித்தோம். பழைய காகித உருளைகளை சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்தார்.
”என் வீட்டுக்காரர்
எட்டு… ஒன்பது வயசில
இருந்தே பழைய இரும்பு,
காகிதம் சேகரிக்கும்
கடையிலதான் வேலை
செஞ்சிட்டுருந்தாரு. அதனால
அவருக்கு இந்த தொழிலில்
எல்லாமே அத்துபடி.
எங்களுக்குக் கல்யாணம் ஆச்சு.
பையன் பொறந்தப்பலாம்
கையில நாலு காசு கிடையாதுங்க.
அன்னாடு வேலைக்குப்
போனாதான் கூலிய வாங்கிட்டு
வந்து அடுப்புல உலை
வைக்க முடியும். அப்படித்தான்
அப்போது எங்க நிலைமை
இருந்துச்சு.
அப்பலாம் ஒரு நாளைக்கு
ராத்திரி மட்டும்தான் சாப்பாடு
சாப்பிடுவோம். மற்ற நேரம்லாம்
வெறும் டீத்தண்ணிய
குடிச்சியே பசிய ஆத்திக்குவோம்.
இப்படிதான் எங்களோட
ஆரம்பக்காலம் இருந்துச்சு.
(சொல்லும்போதே அவரால்
கண்ணீரைக் கட்டுப்படுத்த
முடியாமல் கதறி அழுதார்).
”அம்மா அழாதம்மா…
அதான் இப்ப நல்லாருக்கோம்ல…,”
என்று பிள்ளைகள்
தேற்றினார்கள்.
இரண்டாவதா பொண்ணு
பொறந்தா. அப்ப பிரசவ
செலவுக்குக்கூட கையில
பணமில்ல. அன்னம்மாள்
களஞ்சியம் குழுதான்
எனக்கு பத்தாயிரம்
ரூபாய் கடன் கொடுத்தது.
பிரசவ செலவுக்கு அந்த
நேரத்துல பெத்த தாயி போல
உதவினது களஞ்சியம்தான்.
இந்த கஷ்ட காலம்லாம்
எங்களுக்கு சின்னவன் (தர்ஷன்)
பொறக்கற வரைக்கும்தான்.
அதுக்கப்புறம் எங்க
நிலைமையே வேற
லெவலுக்கு மாறிடுச்சு,”
என்கிறார் மலர்மணி.
இன்றைக்கு மாதம் சில லட்சம் ரூபாய் வரை வணிக சுழற்சிக்கு விடும் அளவுக்கு தொழிலில் வளர்ச்சி அடைந்துள்ள மலர்மணி, நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார்.
”ஒரு கூலியாக என்னதான்
கஷ்டப்பட்டு உழைச்சாலும்,
வாழ்க்கையில பெருசா ஒண்ணும்
சாதிச்சிட முடியாது. அதனால,
எங்க வீட்டுக்காரருக்கு
தெரிஞ்ச பழைய பேப்பர்,
பழைய இரும்பு தொழிலையே
சொந்தமாக பண்ணலாம்னு
முடிவெடுத்தோம். களஞ்சியம் குழு
மூலமாக 50 ஆயிரம் ரூபாய்
கடன் வாங்கி நாங்க
சொந்தமாக தொழிலை
ஆரம்பிச்சோம். எங்கள்
தொழிலுக்கு முதல் முதலீடு
என்பதே களஞ்சியம்
கொடுத்ததுதான்.
திருப்பூர், இளம்பிள்ளை
ஆகிய இடங்களில் உள்ள
நூற்பாலைகளில் இருந்து
நூல் கோன், சேதமடைந்த
அட்டைப் பெட்டிகள்,
பழைய நூல் கழிவுகள்,
பழைய இரும்பு உள்ளிட்ட
பொருள்களை சேகரிக்கிறோம்.
அளவைப் பொருத்து
பழைய அட்டை பெட்டிகளின்
விலை மாறுபடும்.
அட்டைப்பெட்டிகளில்
சேதமடைந்த பகுதிகளை
செல்லோ டேப் கொண்டு
ஒட்டினால், மீண்டும் அந்தப்
பெட்டிகளை பார்சல் கட்ட
பயன்படுத்த முடியும்.
அதுபோன்ற பெட்டிகளை
சரிசெய்து, மறு பயன்பாட்டிற்காக
ஈரோடு, பெங்களூருவில் உள்ள
ஜவுளி கடைகள்,
தொழிற்சாலைகளிடம் விற்பனை
செய்கிறோம். அட்டைப்
பெட்டிகளின் சைஸைப் பொறுத்து,
அதிகபட்சம் 55 ரூபாய் வரை
மறு விற்பனை செய்கிறோம்.
களஞ்சியத்தில் கடன் வாங்கினால் அதை கூடுமான வரைக்கும் வேகமாக திருப்பிச் செலுத்தி விடுவேன் என்பதால், அடிக்கடி கடன் வாங்குவேன். மீண்டும் ஒரு லட்சம் ரூபாய் கடன் பெற்று, சரக்கு ஏற்றி வருவதற்கு வசதியாக ஒரு மினி டெம்போ வாங்கினோம். மெல்ல மெல்ல தொழிலும் எங்களுக்கு வளர்ந்துச்சு. ஒரு லோடு பழைய அட்டை பெட்டிகள், நூல் கோன்களை எடுத்து வர கையில் குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாயாவது வேண்டும். சமீபத்துலகூட களஞ்சியத்தில் 1.50 லட்சம் ரூபாய் கடன் வாங்கி, செகண்ட்ஹேண்ட்ல ஐஷர் வேன் வாங்கினோம்.
இப்போது எங்களிடம்
வாகன ஓட்டுநர்கள்,
பழைய பேப்பர் கிடங்கில்
வேலையாள்கள் என
பத்து பேர் வேலை செய்கின்றனர்.
ஒரு கூலியாக வாழ்க்கையைத்
தொடங்கிய நாங்கள்,
இன்றைக்கு பத்து பேருக்கு
சம்பளம் கொடுக்கும் அளவுக்கு
வளர்ந்திருக்கிறோம்.
தொடர்ந்து கடினமாக
உழைத்துக் கொண்டும்
இருக்கிறோம். எல்லா
தொழிலைப் போலவும்
இதிலும் போட்டிகள்
இருக்கின்றன. ஆனாலும்,
எத்தனை பேர் வந்தாலும்
எல்லோருக்கும் பழைய பேப்பர்,
பழைய இரும்பு விற்பனையில்
சந்தை வாய்ப்பு இருக்கு,”
என்று மணி மணியாகச்
சொல்கிறார் மலர்மணி.
இன்றைய நிலையில்,
தினமும் ஒரு லோடு அளவுக்கு
மறு விற்பனைக்காக பழைய
அட்டைப்பெட்டிகள், நூல் கோன்
உள்ளிட்ட இதர பொருள்களை
அனுப்பி வருகின்றனர்.
ஒரு காலத்தில்,
வருமானமில்லாமல்
ஒருவேளை உணவை மட்டுமே
சாப்பிட்டு வந்த மலர்மணியின்
குடும்பம், இன்றைக்கு
சாப்பிடக்கூட நேரமின்றி
தொழிலில் வளர்ச்சி
அடைந்திருக்கிறார்கள்.
சந்தைக்கு எது தேவை
என்ற அவதானிப்பும்,
கடின உழைப்பும் இருந்தால்,
எத்தகைய சவால்களையும்
முறியடித்து யார் வேண்டுமானாலும்
ஜெயிக்கலாம் என்பதற்கு
மற்றுமொரு சான்றுதான்,
மலர்மணி.
-பேனாக்காரன்