Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

மேகி நூடுல்ஸூக்கு மீண்டும் இடியாப்ப சிக்கல்!

நெஸ்ட்லே நிறுவனத்தின் மேகி நூடுஸ்ல்ஸே இடியாப்பம் போலத்தான் சுருண்டு கிடக்கும். அதற்குத்தான் இப்போது மீண்டும் இடியாப்ப சிக்கல் ஆரம்பமாகி இருக்கிறது.

நம்ம ஊர்களில் குறிப்பாக கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போகும் வீடுகளில் இரண்டே நிமிடங்களில் சமையல் வேலை முடிகிறது எனில் நிச்சயம் அவர்கள் வீட்டில் அன்றைய தினம், நூடுல்ஸ்தான் முக்கிய உணவாக இருக்கும் என்று புரிந்து கொள்ளலாம்.

அந்தளவுக்கு நெஸ்ட்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ், சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவாகவும் இருந்து வருகிறது.

கடந்த 2015ம் ஆண்டில் ஒருமுறை தரப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மேகி நூடுல்ஸில் அதிர்ச்சிகரமான பல ரசாயனங்கள் சுவைக்காக சேர்க்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுபோன்ற துரித உணவுகளில் 0.01 முதல் 2.5 பிபிஎம் வரை மட்டுமே காரீயம் சேர்க்கப்பட வேண்டும். இது ஒருவகையான செயற்கை சுவையூட்டிதான்.

இந்த அனுமதிக்கப்பட்ட அளவுக்குக் கீழே காரீயம் இருந்தால், அதைச்சாப்பிடும் குழந்தைகளுக்கு மூளைத்திறன் செயல்பாடு (ஐ.க்யூ) குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், ஆய்வுக்கு உட்படுத்திய மேகி நூடுல்ஸில் அப்போது எவ்வளவு காரீயம் இருந்தது தெரியுமா? 17.2 பிபிஎம். அதாவது அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் 7 மடங்கு.

அந்தளவுக்கு காரீயம் சேர்க்கப்பட்ட துரித உணவை அடிக்கடி சாப்பிடுவோருக்கு உடல் பருமன், மறதி, மூட்டுவீக்கம், தலைவலி, கடும் வயிற்றுவலி, நரம்பு பிரச்னைகள், தொண்டை வலி போன்றவை ஏற்படலாம் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். அதனால்தான் 2015ம் ஆண்டு, மேகி நூடுல்ஸூக்கு அப்போது தடை விதிக்கப்பட்டது.

பின்னர் அதே ஆண்டு மீண்டும் ஒரு தரப்பரிசோதனை மூலமாக அந்த உணவுப்பொருள் மீண்டும் சந்தைக்கு வந்துவிட்டது வேறுகதை.

மைதாவுடன் சில வேதிப்பொருள்களை சேர்த்து நூடுல்ஸ் தயாரிக்கப்படுகிறது. இதில் மைதா என்பதே கோதுமையின் கழிவுப்பொருள்தான். நூடுல்ஸ் போன்ற துரித உணவுகளில் புரதம், நார்ச்சத்து, விட்டமின் என சொல்லிக்கொள்ளும்படியான சத்துகள்கூட எதுவும் கிடையாது என்பதுதான் உண்மை. ஆனாலும், குழந்தைகளுக்கு அதுதான் பிடித்திருக்கிறது.

அந்த சுவையை மீண்டும் எதிர்பார்க்க வைப்பதற்காகவே நூடுல்ஸ்சில் மோனோ சோடியம் குளூட்டமேட்டின் வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது.

இந்நிலையில் முன்பு போலவே இப்போதும் சிக்கலில்தான் மாட்டியிருக்கிறது மேகி நூடுல்ஸ். உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேகி நூடுல்ஸ் நிறுவனத்தின் உணவு மாதிரிகளை தர ஆய்வு செய்ததில், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் வேதிப்பொருள்கள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, நூடுல்ஸ் தயாரிப்பு நிறுவனமான நெஸ்ட்லேவுக்கு ரூ.45 லட்சமும், நூடுல்ஸ் விநியோகஸ்தர்களுக்கு ரூ. 26 லட்சமும் அபராதம் விதித்துள்ளனர். இதனால் மீண்டும் மேகி நூடுல்ஸ் உணவுப்பொருளுக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்படலாம் என்ற தகவல்களும் உலா வருகின்றன.

இது தொடர்பாக நெஸ்ட்லே தரப்பில் விசாரித்தபோது, ”எங்களுக்கு அதிகாரப்பூர்வமாக இதுவரை யாரும் அபராதம் குறித்தோ, தர ஆய்வு குறித்தோ சொல்லவில்லை. எதுவாக இருந்தாலும் சட்டப்பூர்வமாக சந்திக்கத் தயாராக இருக்கிறோம்,” என்று அனாயசமாகச் சொல்லி முடித்தனர்.