Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சட்டப்பேரவை: மு.க.ஸ்டாலின் வெளிநடப்பும் டிடிவி தினகரன் வருகையும்!

சட்டப்பேரவையில் இருந்து அடிக்கடி வெளிநடப்பு செய்யும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை கிண்டலடித்தும், முதன்முதலில் எம்எல்ஏவாக பேரவைக்குள் காலடி வைத்த டிடிவி தினகரனை பாராட்டியும் ட்விட்டரில் பலர் ‘மீம்’கள் பதிவிட்டுள்ளனர்.

நடப்பு ஆண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 8, 2017) தொடங்கியது. கடந்த அக்டோபர் மாதம் தமிழக ஆளுநராக பொறுப்பேற்றார் பன்வாரிலால் புரோஹித். அவர் உரையாற்றும் முதல் கூட்டத்தொடர் இது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆர்.கே.நகர் தொகுதி முதன்முதலில் இடைத்தேர்தலைச் சந்தித்தது. அதில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்ற டிடிவி தினகரன், எம்எல்ஏ ஆக காலடி வைக்கும் முதல் கூட்டத்தொடர்.

மக்களவை, மாநிலங்களவை எம்பியாக இருந்த டிடிவி தினகரன் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் இடைவெளிக்குப்பிறகு, மக்கள் பிரதிநிதியாக அவர் இப்போது சட்டப்பேரவைக்குள் நுழைந்துள்ளார்.

ஜெயலலிதா இல்லாத, அதிமுக அரசின் முதல் பட்ஜெட் தொடருக்கு முந்தைய கூட்டத்தொடர் இது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவை முன்னவராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டார். சில நாள்களுக்கு முன்பாக அந்தப் பொறுப்பில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்ட பின்னர், நடைபெறும் முதல் கூட்டத்தொடர் இது.

இப்படி பல முக்கிய அம்சங்கள் நிறைந்த இந்தக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே கடும் புயல் வீசக்கூடும் என்ற எதிர்பார்ப்புகள் சில நாள்களாகவே அரசியல் அரங்கில் நிலவி வந்தன. அதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உண்டு. 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் ஆளும் அதிமுகவுக்கு பெரும்பான்மை இல்லாதது.

இன்னொன்று, அண்மையில் கன்னியாகுமரியை தாக்கிய ஒகி புயல் நிவாரணப் பணிகளில் மெத்தனம், மாயமான மீனவர்களை மீட்பதில் அலட்சியம் என பல இக்கட்டுகளில் சிக்கிக் கொண்டிருப்பது.

மூன்றாவது காரணம், டிடிவி தினகரனின் திடீர் எழுச்சியால் ஆளும் தரப்பில் எத்தனை பேர் ஸ்லீப்பர் செல்கள் இருப்பார்களோ என்ற முதல்வர் உள்ளிட்ட பரிவாரங்களின் பரிதவிப்பும்கூட நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளன.

முதல்முறையாக எம்எல்ஏ ஆன குதூகலமோ என்னவோ இன்றைய கூட்டத்தொடரில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்களுக்கு முன்னதாகவே டிடிவி தினகரன் அவருடைய இருக்கையில் முதல் ஆளாக வந்து அமர்ந்து கொண்டார். அவருக்கு ஆளும்கட்சி எம்எல்ஏக்கள் பக்கத்தில் கடைசி வரிசையில் 148வது எண் கொண்ட இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது.

ட்விட்டரில் பலர் அவரை, ‘தனி ஒருவன்’ என்று புகழந்து கருத்துகளை பகிர்ந்துள்ளனர். ஒரு வலைப்பதிவர், அமைச்சர் செல்லூர் ராஜூவை பார்த்து டிடிவி தினகரன், ”என்னடா ராஜூ” எனக் கேட்பது போலவும், அதற்கு செல்லூர் ராஜூ, ”தயவு செய்து என்கூட பேசாதப்பா” என கெஞ்சுவது போலவும் மீம் பதிவிட்டிருந்தார்.

மற்றொரு பதிவர், சட்டப்பேரவைக்குள் பாகுபலி போல டிடிவி தினகரன் நுழைகிறார் என்று சித்தரித்து கருத்து வெளியிட்டு இருந்தார். அவர் தனியாக தனது இருக்கையில் அமர்ந்து ஆளுநர் உரையை கவனித்துக் கொண்டிருப்பது போன்ற படங்கள் சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்துள்ளன.

அதேநேரம், பெரும்பான்மையற்ற அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அழைக்காமல் ஆளுநர் உரையை வாசித்ததைக் கண்டித்து, வெளிநடப்பு செய்தார் திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின். எங்கு பார்த்தாலும் லஞ்சமும் ஊழலும் கொடிக்கட்டி பறக்கின்றன. அதற்கு ஆளும் மைனாரிட்டி அதிமுக அரசுதான் பொறுப்பு என்றும் கடுமையான விமர்சனங்களை ஊடகங்களிடம் முன்வைத்தார் மு.க.ஸ்டாலின்.

ஆளுநர் உரை, மஸ்கோத் அல்வா போல் உள்ளதாகவும் கேலியாக குறிப்பிட்டார். வெளிநடப்புக்கு நியாயமான காரணங்கள்தான் அவை. ஆனால், பொதுவெளியில் திமுகவின் செயல்பாடுகளுக்கு போதிய வரவேற்பு இல்லை என்பதை சமூக ஊடகங்கள் வாயிலாக உணர முடியும்.

வழக்கமாக எதிர்க்கட்சியினர் ஆளுநர் உரை முடிந்த பின்னர்தான் வெளிநடப்பு செய்வர். திமுகவும், கூட்டணி கட்சியான காங்கிரஸூம் ஆளுநர் உரை முடிவதற்கு முன்பே பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சமூக ஊடகங்களில் மு.க.ஸ்டாலினின் வெளிநடப்பிற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. கேலி செய்தும் விமர்சனங்களை பலர் பதிவிட்டுள்ளனர். ஒரு பதிவர், ”சட்டப்பேரவை கேண்டீன்காரர் அப்படி என்னதான் சொக்குப்பொடி போட்டாரோ. எப்போது பார்த்தாலும் திமுக, காங்கிரஸ்காரர்கள் கேண்டினிலேயே இருக்கிறார்கள்,” என்று கிண்டல் செய்து கருத்து வெளியிட்டுள்ளார்.

மற்றொரு பதிவர், ”இந்த வெளிநடப்புக்கா நான் அரை மணி நேரம் பவுடர் பூசிட்டு வந்தேன். வேஸ்ட் ஆப் டைம் செயல்,” என்று துரைமுருகன் ஸ்டாலினைப் பார்த்து புலம்புவது போல கேலியாக மீம் பதிவிட்டுள்ளார்.

இன்னொரு பதிவர், ”ஒரு நல்ல எதிர்க்கட்சி மக்களின் குரலை சட்டசபையில் ஒலிக்கச் செய்வதே. அதுவே ஆரோக்கியமான அரசியல். நின்று களமாடும்போதுதான் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

”பவுன்சர் போட்டாலே சிக்சர் விளாசுறாரு டிடிவி. ஃபுல்டாஸ் போட்டதுக்கே அவுட் ஆகி வெளிநடப்பு செய்யுறாரு செயலு,” என்றும் கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார் ஒரு பதிவர்.

”ஆளுநர் உரை முடிந்து சபை ஆரம்பிக்கவே இல்லை. அதற்குள் வெளிநடப்பு செய்து மங்குனி என்பதை மீண்டும் நிரூபிக்கிறார் மு.க.ஸ்டாலின். மக்கள் இதற்கா உங்களுக்கு ஓட்டு போட்டார்கள்?,” என்றும் ஒருவர் ட்விட்டரில் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசியலில் தொண்டர்களோடு தொண்டராகவும், மேயர், எம்எல்ஏ, துணை முதல்வர் என்ற பொறுப்புகளையும் வகித்து பழுத்த அனுபவம் பெற்ற மு.க.ஸ்டாலினின் அரசியல் ரீதியான அண்மைய செயல்பாடுகள் கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, அவரின் அரசியல் ஆளுமை பலமுறை கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

இன்றைய நிகழ்வுகளிலும் மு.க.ஸ்டாலின் மீது அத்தகைய விமர்சனங்கள் எழாமல் இல்லை. திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு செய்தாலும், சுயேட்சை எம்எல்ஏவான டிடிவி தினகரன், சட்டப்பேரவை கூட்டம் முடியும் வரை கலந்து கொண்டதும் பெரிய அளவில் கனத்தை ஈர்த்துள்ளது. வழக்கமாக மு.க.ஸ்டாலினின் அரசியல் அணுகுமுறைகள் அவருடைய தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதியுடன் ஒப்பிட்டு பேசப்படும்.

இன்று அந்த ஒப்பீடு, டிடிவி தினகரன் உடனாக மாறிப்போனதுதான் காலத்தின் கோலம்.

 

– அகராதிக்காரன்.