Thursday, May 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கடைசி டி-20: இந்தியா அபார வெற்றி; தொடரையும் கைப்பற்றியது!

கேப் டவுனில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி மற்றும் மூன்றாவது ட்வென்டி-20 போட்டியில், இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, 3 போட்டிகள் கொண்ட தொடைரையும் 2-1 கணக்கில் வென்று கோப்பையைக் கைப்பற்றியது.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு மூன்று ட்வென்டி-20 போட்டிகளில் பங்கேற்று விளையாடியது. முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவும் வெற்றி பெற்றன.

இதையடுத்து தொடரை கைப்பற்றும் முனைப்பில் மூன்றாவது மற்றும் இறுதி டி-20 போட்டியில் இரு அணிகளும் நேற்று (பிப்ரவரி 24, 2018) களமிறங்கின. இந்திய நேரப்படி, இரவு 9.30 மணிக்கு போட்டி தொடங்கியது.

விராட் கோலிக்கு ஓய்வு:

கேப்டவுன் நியூலேன்ட் மைதானத்தில் போட்டி நடந்தது. இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. கேப்டன் விராட் கோலிக்கு முதுகுப்பிடிப்பு காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார்.

கடந்த போட்டியில் ரன்களை வாரி வழங்கிய சுழல் பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் நீக்கப்பட்டு, அக்ஷர் பட்டேலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. வேகப்பந்து வீச்சாளர் உனத்கட்டுக்கு ஓய்வளிக்கப்பட்டு, ஜஸ்பிரித் பும்ரா அணிக்குத் திரும்பினார்.

ஜோன்கர் அறிமுகம்:

தென்னாப்பிரிக்கா அணியிலும் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ஸ்மட்ஸ், பேட்டர்சன் ஆகியோர் நீக்கப்பட்டு, ஜோன்கர், பேங்கிசோ சேர்க்கப்பட்டனர். ஜோன்கர் முதல் சர்வதேச டி-20 போட்டியில் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டதால் கேப்டன் பொறுப்பை ரோஹித் ஷர்மா ஏற்றார். டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

ரோஹித் ஷர்மா விக்கெட்டை வீழ்த்திய ஜுனியர் டாலா, சகா வீரர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்.

ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். வழக்கம்போல் இந்தப் போட்டியிலும் ரோஹித் ஷர்மா சோபிக்கவில்லை. ஜூனியர் டாலாவின் வேகத்தில் ரோஹித் ஷர்மா, எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவர் 8 ரன்களில் வெளியேறினார்.

சுரேஷ் ரெய்னா அதிரடி:

இதையடுத்து சுரேஷ் ரெய்னா களம் புகுந்தார். இந்த இணை ஓரளவுக்கு தாக்குப்பிடித்து விளையாடியது. எனினும், பெரிய அளவில் ரன் குவிப்பில் ஈடுபடவில்லை.

குறிப்பாக ஷிகர் தவான் ஒரு நாள் போட்டியைப் போல நிதானமாக ஆடினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய சுரேஷ் ரெய்னா, ஷம்ஷி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அவர், 27 பந்துகளில் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 43 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்களை குவித்தது. அதன்பிறகு ஷிகர் தவானுடன் மனீஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். அவர் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் ஷிகர் தவான் எதிர்பாராத விதமாக ரன்-அவுட் ஆனார்.

ஷம்ஷி வீசிய பந்தை டீப் மிட்-விக்கெட் திசையில் தட்டிவிட்டு, இரண்டாவது ரன்னுக்கு ஓட முயன்றார். அப்போது ஜூனியர் டாலா குறி வைத்து எறிந்த பந்து, ஸ்டம்புகளை பதம் பார்த்தது. ஷிகர் தவான் 40 பந்துகளில் 3 பவுண்டரிகள் உள்பட 47 ரன்கள் சேர்த்தார்.

173 ரன்கள் இலக்கு:

இதன்பின், இந்திய அணிக்கு நிலையான பார்ட்னர்ஷிப் அமையாததால் ரன் குவிப்பும் மந்தமாகவே இருந்தது. ஹர்திக் பாண்ட்யா மட்டும் 3 ஓவர்கள் தாக்குப்பிடித்து 21 ரன்கள் எடுத்தார். தோனி 12 ரன்களில் வெளியேறினார். 20 ஓவர்களில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது.

தென்னாப்பிரிக்க தரப்பில் ஜூனியர் டாலா 3 விக்கெட்டுகளும், கிறிஸ் மோரீஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து 173 ரன்கள் இலக்குடன் தென்னாப்பிரிக்கா களம் இறங்கியது. ஹென்ரிக்ஸ், மில்லர் ஆகியோர் தொடக்க விக்கெட்டுக்கு களம் புகுந்தனர். ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் இந்த ஜோடி பிரிந்தது. புவனேஷ்வர் குமார் வேகத்தில் ஹென்ரிக்ஸ் 7 ரன்களில் வெளியேறினார்.

அடுத்து, மில்லருடன் கேப்டன் டுமினி இணைந்தார். இந்த ஜோடி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அதிரடி ரன் குவிப்பில் ஈடுபடாமல் கவனமாக ஆடியது. 7 ரன்களுக்குள்ளேயே ரன்ரேட் விகிதம் இருந்தது. சுரேஷ் ரெய்னாவுக்கு பந்து வீச வாய்ப்பு அளிக்கப்பட்டது. 10வது ஓவரை சுரேஷ் ரெய்னா வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் மில்லர் ஆட்டமிழந்தார். அவர் 24 ரன்கள் எடுத்தார்.

டுமினி அபாரம்:

ஆட்டத்தின் 16வது ஓவர் வரையிலுமே இந்திய வேகங்களின் துல்லியமான, நேர்த்தியான பந்து வீச்சால் தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் அதிரடியான ஷாட்டுகளை அடிக்க முடியாமல் தடுமாறினர். சுழல் பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் பந்து வீ ச்சில் மட்டும் டுமினி அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை பறக்க விட்டார். அக்ஷரின் 12வது ஓவரில் டுமினியும், கிளாஸனும் சேர்ந்து 16 ரன்களை திரட்டினர்.

அந்த அணியின் கேப்டன் டுமினி மட்டும் அதிகபட்சமாக 43 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 55 ரன்களை குவித்தார். முதல் முறையாக களம் கண்ட கிறிஸ்டியான் ஜோன்கர் இறுதிக்கட்டத்தில் மிரட்டினார். கடைசி ஓவரில் அந்த அணி வெற்றி பெற 19 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. கடைசி ஓவரை வீச புவனேஸ்வர்குமார் அழைக்கப்பட்டார்.

ஜோன்கர் மிரட்டல்:

அந்த ஓவரின் முதல் பந்தில் ஜோன்கர் ஒரு ரன் எடுத்தார். இரண்டாவது பந்தில் பெஹார்டீன் ஒரு பவுண்டரி அடிக்க, ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. மூன்றாவது பந்தில் பெஹார்டீன் ஒரு ரன் எடுத்தார். அதற்கு அடுத்த பந்தை வைடு ஆக வீசியதில் இனாமாக ஒரு ரன் கிடைத்தது. நான்காவது பந்தை இன்ஸ்விங் யார்க்கராக வீசினார் புவனேஸ்வர் குமார். அந்த பந்தை எதிர்கொண்ட ஜோன்கர் 2 ரன்கள் எடுத்தார்.

அப்போது 2 பந்துகளில் 10 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலை இருந்தது. 5வது பந்தை எதிர்கொண்ட ஜோன்கர், மீண்டும் 2 ரன்களை எடுத்தார். கடைசி பந்தை எக்ஸ்டரா கவர் திசையில் அடிக்க முயன்ற ஜோன்கர், ரோஹித் ஷர்மா வசம் கேட்ச் ஆகி விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஜோன்கர் 24 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களே எடுக்க முடிந்தது. தென்னாப்பிரிக்கா அணி கடுமையாக போராடியும் தோல்வியைத் தழுவியது.

இந்தியா வெற்றி:

இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 2-1 கணக்கில் வென்று கோப்பையைக் கைப்பற்றியது.

இந்தியா தரப்பில் புவனேஸ்வர்குமார் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 43 ரன்கள் மற்றும் ஒரு விக்கெட் கைப்பற்றிய சுரேஷ் ரெய்னா, ஆட்ட நாயகனாகவும், புவனேஸ்வர் குமார் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

துளிகள்….

 

வாழ்வா? சாவா? போட்டிகளில் இந்தியாவுக்கே வெற்றி:

கடந்த 2016ம் ஆண்டிலிருந்து, இரு அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி-20 போட்டிகளில் இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெற்று வந்துள்ளது. ஆஸ்திரேலியாவை 7 விக்கெட் வித்தியாசத்திலும் (2016), ஸ்ரீலங்கா அணியை 9 விக்கெட் வித்தியாசத்திலும் (2016, விசாகப்பட்டினம்), ஸிம்பாப்வே அணியை 3 ரன்கள் வித்தியாசத்திலும் (ஹராரே, 2017), இங்கிலாந்து அணியை 75 ரன்கள் வித்தியாசத்திலும் (பெங்களூரு, 2017);

நியூ ஸீலாந்து அணியை 6 ரன்கள் வித்தியாசத்திலும் (திருவனந்தபுரம், 2017), கடைசியாக ஸ்ரீலங்கா அணியை 5 விக்கெட் வித்தியாசத்திலும் (மும்பை, 2017) இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. இதில், முதலில் குறிப்பிட்ட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி மற்றும் கடைசியில் குறிப்பிட்டுள்ள ஸ்ரீலங்கா அணிக்கு எதிரான போட்டி ஆகியவற்றைத் தவிர மற்ற போட்டிகள் அனைத்தும் வாழ்வா? சாவா? என தீர்மானிக்கும் போட்டிகள் என்பது குறிப்பிடத்த க்கது.

தற்போதைய வாழ்வா, சாவா போட்டியிலும் இந்தியா அபாரமாக வெற்றி பெற்று, கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.

இந்தியாவுக்கு நம்பிக்கை அதிகரித்திருக்கும்: சொல்கிறார் டுமினி!

”இந்திய அணியின் பந்து வீச்சு பிரமாதமாக இருந்தது. பேட்டிங் பவர் பிளேயிலும் சிறப்பாக ஆடினர். நாங்கள் பவர் பிளே வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. பவுண்டரிகள் அடிப்பதிலும், ஒன்றிரண்டு ரன்கள் எடுப்பதிலும் போதிய கவனம் செலுத்தவில்லை. பவர் பிளேயில் நாங்கள் 30 ரன்கள் வரை குறைவாக எடுத்திருந்தோம். என்றாலும், கடைசியில் 7 ரன்களில்தான் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம்.

ஒவ்வொரு தொடரிலும் புதிது புதிதாக கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். எங்கள் அணியில் முதல்முதலாக களம் கண்ட ஜோன்கர் சிறப்பாக ஆடினார். அவருக்கு இது நம்பிக்கை அளித்திருக்கும். டெஸ்ட் தொடரில் மூன்றாவது மற்றும் கடைசி ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

அப்போதே அவர்களின் தன்னம்பிக்கை வெகுவாக அதிகரித்திருந்திருக்கும். அது இந்த தொடர் வரை நிலைத்துவிட்டதால்தான் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். வெற்றிக்கு முழு தகுதியுள்ள அணி, இ ந்தியா,” என்றார் டுமினி.

”பந்து வீச்சாளர்களால் சாத்தியமானது”: ரோஹித் ஷர்மா!

”வெளிப்படையாகச் சொல்லவேண்டுமெனில் இன்றைய போட்டியில் நாங்கள் 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். ஆனாலும், ஆட்டத்தின் முதல் பாதி எப்படி செல்கிறதோ, அதுவே முடிவை நோக்கிச் செல்லும் என்பதை நம்பினேன்.

ஆனாலும், எங்கள் அணியின் பந்து வீச்சாளர்கள் தென்னாப்பிரிக்காவின் திட்டங்களை முறியடித்து, வெற்றியைத் தேடித்தந்துள்ளனர். இந்த போட்டி மட்டுமின்றி இந்த தொடர் முழுவதுமே பந்து வீச்சாளர்களின் ஆதிக்கமே ஓங்கியிருந்தது. ஒரு குழுவாக இணைந்து வெற்றி பெறுவது குறித்து தொடர்ந்து நாங்கள் திட்டமிட்டு, அதன்படி செயல்படுகிறோம்,” என்றார் இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா.

விராட் கோலி சாதனை:

வெளிநாட்டு மண்ணில் குறிப்பிட்ட தொடரில் அனைத்து வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டிலும் அதிக ரன் குவித்த வீரர்களில் 871 ரன்கள் திரட்டி, இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலிடம் வகிக்கிறார். அவர் நடப்பு 2017/2018 தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் 3 டெஸ்ட், 7 ஒரு நாள், 3 டி-20 போட்டிகளில் 14 இன்னிங்ஸ்களில் 871 ரன்களை திரட்டி சாதனை படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித், 2003ம் ஆண்டில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது 16 இன்னிங்ஸ்களில் 937 ரன்கள் திரட்டி முதலிடத்தில் உள்ளார். ஆலன் பார்டர் (785 ரன்), அலிஸ்டர் குக் (769), ஸ்ட்ராஸ் (767), மைக் ஆதர்டன் (753) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

ரோஹித் ஷர்மா அபாரம்:

முதல் நான்கு டி-20 போட்டிகளில் கேப்டனாக பொறுப்பேற்று வெற்றி பெற்ற கேப்டன்களின் பட்டியலில் ரோஹித் ஷர்மாவும் 6வது வீரராக இடம் பிடித்தார். அவருக்கு முன்னதாக மிஸ்பா, சங்ககாரா, அப்ரிடி, மலிங்கா, சர்ப்ராஸ் ஆகியோர் உள்ளனர்.

சுபமாக முடிந்த சுற்றுப்பயணம்:

தென்னாப்பிரிக்கா மேற்கொண்ட இந்திய அணியின் நீண்ட சுற்றுப்பயணம் தித்திப்புடன் முடிந்திருக்கிறது. முன்னதாக இ ந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 21 கணக்கில் இழந்திருந்தது. பின்னர் 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 6-1 கணக்கிலும், டி-20 தொடரை 2-1 கணக்கிலும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது இந்தியா.