Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

குரங்கணி: ஆசிரியர்களே இது தகுமா?; செல்ஃபி மோகத்தில் கரைந்த மனிதம்!

குரங்கணி கொழுக்கு மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்பதற்காக வந்த ஹெலிகாப்டர் முன்பு ஆசிரியர் பயிற்சி மாணவிகள், ஆசிரியர்கள் ஆர்வமாக நின்று கொண்டு செல்பி, குழு புகைப்படம் எடுத்துக்கொண்டது உள்ளூர் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மூன்று நாள்களுக்கு முன்புதான், ‘அடிமேல் அடி வாங்கும் ஆசிரியர்கள்; திரும்பிய திசையெல்லாம் இடி’ என்ற தலைப்பில் புதிய அகராதி இணையத்தில் ஒரு கட்டுரை எழுதி இருந்தேன்.

தொடக்கக் கல்வித்துறை மட்டுமின்றி ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட துறை அதிகாரிகளின் தலையீட்டால் ஆசிரியர்கள் கடும் மன உளைச்சளுக்கு ஆளாவது பற்றியும், அதனால் குழந்தைகளின் கல்வி நலன் பாதிக்கப்படுவது குறித்தும் விரிவாகவே எழுதியிருந்தோம். ஆசிரியர்களிடம் பரவலாக வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில், குரங்கணியில் ஆசிரியர்களும், ஆசிரியர் பயிற்சி மாணவிகளும் மேற்கொண்ட செயல் நிச்சயம் அவர்களை படித்த காட்டுமிராண்டிகளாகவே சித்தரிக்கிறது. சாவு வீட்டிலும் செல்ஃபி எடுப்பதை நாம் வரவேற்க முடியுமா என்ன? அண்மையில் கேரளாவில் ஒரு பழங்குடி இளைஞர் திருடிவிட்டதாகச் குற்றஞ்சாட்டி, ஊர் மக்களே அடித்துக்கொன்றனர்.

அப்போதும்கூட அந்த ஆதிவாசி இளைஞர் முன்பு நின்று கொண்டு படித்த இளைஞர் கூட்டம் ஒன்று செல்ஃபி எடுத்து மகிழ்ந்தது. அந்த காட்டுமிராண்டி செயலுக்கும், குரங்கணியில் ஆசிரியர்கள் மேற்கொண்ட செயலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பேன்.

குரங்கணி காட்டுத் தீயில் சிக்கியவர்களை மீட்பதற்காக வந்த ராணுவ ஹெலிகாப்டர் முன்பு, பெண் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சி மாணவிகள் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட நிகழ்வை, ‘புதிய தலைமுறை’ டிவி சேனல் குமுளி செய்தியாளரும் நண்பருமான ரமேஷ் கண்ணன் வீடியோ எடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் ‘கற்கை நன்றே….கற்கை நன்றே!’ என்ற தலைப்பில் தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அவருடைய அனுமதியுடன் அந்தப் பதிவு இங்கே…

”தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களை மீட்க வந்த ஹெலிகாப்டரை “செல்ஃபி” எடுத்து மகிழ்ந்த நிகழ்வு அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.

தேனி மாவட்டம் போடியில் குரங்கணியில் மலேயேறும் பயிற்சிக்கு சென்ற மாணவியர், மலையேற்ற குழுவினர் காட்டுத்தீயில் சிக்கினர். தீயின் கோரப்பசிக்கு 9 பேர் பலியாகினர். 10 பேர் அதிக தீக்காயங்களுடன் போராடி வருகின்றனர்.

தீயில் சிக்கியவர்களை மீட்க ராணுவ ஹெலிகாப்டர் போடிக்கு வரவழைக்கப்பட்டது. இதற்காக போடி ஸ்பைசஸ் பள்ளி வளாகத்தில் தற்காலிக ஹெலிபேட் அமைக்கப்பட்டு, மீட்பு பணிகள் நடந்து வந்தன. ஹெலிகாப்டர் கொண்டு மீட்பு பணி மேற்கொள்ளும் அளவிற்கு விபத்தின் வீரியம் அதிகமாக இருந்ததை உணர்ந்த மக்கள் ஹெலிபேடை சுற்றிலும் குவிந்தனர்.

ஒவ்வொருவர் மனதிலும், வனத்துக்குள் இருந்து இரவெல்லாம் தீக்காயங்களுடன் போராடிய ஜீவன்கள் ஹெலிகாப்டரில் உயிருடன் வந்திறங்க வேண்டுமே என்ற வேண்டுதலே இருந்தது. ஆடையின்றி வனத்துக்குள் கிடந்த இளந்தளிர்களின் உடல்களை ஊடகங்களில் கண்ட ஒவ்வொருவரும் இதயம் ஒரு முறை நின்று துடிக்கும் வலியை உணர்ந்தனர். இந்த உள்ளத்தை உறையவைக்கும் நிகழ்வால் ஊரே சோகத்தில் மூழ்கிருந்த தருணம்.

போடி ஸ்பைஸ் வில்லேஜ் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஆசிரிய பயிற்சிப் பள்ளி மாணவியருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. வரிசையாக நின்ற அவர்கள் கண்காட்சிக்கும் சுற்றுலாவிற்கும் செல்வது போல் ஹெலிபேடிற்குள் நுழைந்தனர்.

அப்போதும் கூட, ஏதோ ஹெலிகாப்டரில் மீட்கப்படும் மகளிருக்கு உதவுவதற்காக செல்கிறார்கள் என்றுதான் அங்குள்ள மக்கள் நினைத்திருந்தனர். ஆனால் இப்படி ஒரு சோகத்திலும் அப்படி ஒரு மகிழ்விற்காகவா செல்கிறார்கள் என்று யாருக்கும் எண்ணத் தோன்றவில்லை.

மீட்பு பணிக்கு வந்த ஹெலிகாப்டர் அருகே வந்த அவர்கள் “படபட”வென ஹெலிகாப்டரின் பின்னணியில் “செல்ஃபி” எடுக்கத்துவங்கினர். சில மாணவியர் தனிப்படமும், தோழிகளுடனான படமும் வேறு தோழிகளைக்கொண்டு எடுத்தனர். சில மாணவியர் ஒரு வகுப்பு முழுக்க பயிற்றுவிக்கும் ஆசிரியர்களோடு நின்று புகைப்படம் எடுத்து சந்தோஷம் கொண்டனர்.

“எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல்” நடந்த இந்த அருவறுக்கத்தக்க நிகழ்வு, கூடியிருந்த பொதுமக்களை மனம் கனக்க வைத்தது. அரை மணி நேரத்திற்கும் மேலாக மாணவியரின் இரக்கற்ற படமெடுப்பு மகிழ்தலைக்கண்டு பொதுமக்களோடு ராணுவத்தினர், போலீசார் என அனைவரும் முகம் சுளித்தனர்.

மீட்பு பணிக்காக வந்திருந்த ஹெலிகாப்டருடன் “செல்ஃபி” எடுத்தும் குழு படமெடுத்தும் மகிழ்ந்தனர். மாணவியரின் இந்த மனிதாபிமானமற்ற செயல் அங்கிருந்த பொதுமக்கள் மட்டுமின்றி போலீசார், ராணுவத்தினரை வருத்தம் கொள்ள வைத்தது.

வளர்ந்துவரும் விஞ்ஞான உலகில் மரித்துவரும் மனித நேயத்திற்கான சான்றாய் இந்த வருங்கால ஆசிரியர்களை காண முடிந்தது. மாதா, பிதாவிற்கு அடுத்த இடத்தில் இருக்கப்போகும் இவர்கள்… தெய்வத்திற்கு முன் இடம்பிடிந்திருக்கும் இவர்கள்… இப்படி நடந்து கொள்வார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லைதான்!

பள்ளி வளாகத்தின் கம்பி வேலிக்கு பின்புறம் இருந்த பொதுமக்களில் சிலர் வேதனை தாங்காமல் மாணவிகளை அழைத்து நேரடியாக திட்டல்களால் அர்ச்சித்தனர்.

எல்லாவற்றுக்கும் ‘நேரங்காலமும் காலநேரமும்’ உண்டு. எல்லோருக்கும் கற்றுக்கொடுக்கப் போகிறவர்களுக்கு கற்றுக்கொடுக்கப் போவது யார்??? கலங்கும் விழிகளோடு… எல்லோரும் கேட்ட கேள்வி இது!,” என்று ரமேஷ் கண்ணன் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக நாம் ரமேஷ் கண்ணனிடம் கேட்டபோது, ”ஆசிரியர் பயிற்சி மாணவிகளை படம் பிடித்து ஒளிபரப்ப வேண்டுமா என்ற தயக்கமும் எனக்குள் இருந்தது. ஆனாலும், தீயில் கருகி ஆடையில்லாமல் கிடக்கும் பெண் பிள்ளைகளை ஒளிபரப்பும்போது, ஆசிரியர்களின் பொறுப்பற்ற செயலை உலகத்துக்குக் காட்ட ஒளிபரப்பினால் தவறில்லை என்ற எண்ணத்தில் படம் பிடித்தேன்,” என்றார்.

நண்பர் ரமேஷ் கண்ணன் எழுப்பும் வினா இதுதான்:

எல்லோருக்கும் கற்றுக்கொடுக்கப் போகும் ஆசிரியர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்போவது யார்?

 

– பேனாக்காரன்.