Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஆதார் எண் கட்டாயமில்லை: உச்சநீதிமன்றம்

ஆதார் எண் கட்டாயமாக்குவது தொடர்பான வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வங்கிக்கணக்கு, மொபைல் போன் எண் உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நடுவண் பாஜக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் ஆதார் அட்டை விநியோகம் மற்றும் ஆதார் எண்ணுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகிறது. பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா இடத்திலும் ஆதார் எண் கட்டாயம் என்றது.

வங்கிக் கணக்கு, மொபைல் போன், வருமான வரி, பான் அட்டை மற்றும் சமூக நலத்திட்ட பயன்களைப் பெறுவது வரை ஆதார் எண்களை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று அறிவித்தது. இதற்காக நடப்பு மார்ச் 31 வரை அவகாசம் அளித்திருந்தது.

இதை எதிர்த்து பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், அனைத்து விதமான சேவைகளைப் பெறவும் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 13, 2018) நடந்தது. மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஆதார் எண் இணைப்பு தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசு எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை என்று பதில் அளித்தனர்.

இதையடுத்து, இந்த வழக்கில் அரசியல் சாசன அமர்வு இறுதித் தீர்ப்பு அளிக்கும் வரை ஆதார் எண் இணைப்பது கட்டாயமில்லை என் உத்தரவிட்டது. மேலும், சமூக நலத்திட்டங்களுடன் வேண்டுமானால் ஆதார் எண் இணைத்துக் கொள்ளலாம் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளது.