Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

”லஞ்சம், ஊழலை அம்பலப்படுத்துவது குற்றமல்ல!” தகவல் ஆணையம் அதிரடி!!

பணியிடங்களில் தலைவிரித்தாடும்
லஞ்சம், ஊழல் குறித்து
காவல்துறைக்கு புகார் அளிப்பது
குற்றம் ஆகாது என்றும்,
அதற்காக புகார் அளித்தவரை
தண்டிப்பது கூடாது என்றும்
தமிழ்நாடு தகவல் ஆணையம்
தடாலடியாக தீர்ப்பு
அளித்துள்ளது.

சேலம் சித்தனூரை
சேர்ந்தவர் வைத்தியநாதன் (54).
பெரியார் பல்கலையில்
பொருளாதார துறை
உதவி பேராசிரியராக
பணியாற்றி வருகிறார்.
கடந்த 2017ம் ஆண்டு
இப்பல்கலையின் துணை வேந்தராக
இருந்த சுவாமிநாதன் மீது
பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள்
எழுந்தன.
உதவி பேராசிரியர் / பேராசிரியர்
பணியிடங்கள் 30 லட்சம் முதல்
50 லட்சம் வரை கூவி கூவி
விற்பனை செய்தார் என்பதும்,
பதவி உயர்வு வழங்குவதற்காக
23 உதவி பேராசிரியர்களிடம்
தலா 3 லட்சம் வசூலித்தார் என்பதும்
அவர் மீதான புகார்களில்
முக்கியமானவை.

 

போலி அனுபவ சான்றிதழ்களை
சமர்ப்பித்தவர்கள்,
முழு கல்வித்தகுதியை எட்டாதவர்கள்
பலரிடமும் கூட பணம்
வாங்கிக்கொண்டு
உதவி பேராசிரியர்களாக
நியமிக்கப்பட்டனர்.
பல்வேறு ஆதாரங்கள் இருந்தும்
அவர்கள் இன்றளவிலும்
பணியில் தொடர்வது
வேறு சங்கதி. இந்நிலையில்,
உதவி பேராசிரியர் வைத்தியநாதன்
இந்த ஊழல் முறைகேடுகள்
குறித்து சேலம் லஞ்ச
ஒழிப்புப்பிரிவு காவல்துறைக்கு
விரிவான புகார் மனு
அனுப்பி இருந்தார்.

சுவாமிநாதன்

இதை அறிந்த பெரியார்
பல்கலை நிர்வாகம்,
கடந்த 3.4.2017ம் தேதி அவரிடம்
விளக்கம் கேட்டது.
ஆனால், அதற்கு அடுத்த நாளே
அவருடைய விளக்கம் திருப்தி
அளிக்கவில்லை என்று கூறி,
உடனடியாக பணியிடைநீக்கம்
செய்து உத்தரவிட்டது.

 

இதையடுத்து வைத்தியநாதன்,
இதழியல் துறை பேராசிரியர் நடராஜன்
மீதான ஊழல் புகார், தன் மீதான
ஒரு நபர் விசாரணை கமிஷனுக்கு
பொறுப்பு வகித்த ஓய்வு பெற்ற
மாஜிஸ்ட்ரேட் சாத்தப்பிள்ளை பற்றிய
விவரங்கள், அவருடைய உறவினர்
யாராவது பெரியார் பல்கலையில்
படிக்கிறார்களா? என்பது உள்ளிட்ட
சில விவரங்களை தகவல் பெறும்
உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்டு
விண்ணப்பித்து இருந்தார்.

 

அவருடைய மனுக்களுக்கு
சரியான தகவல்களை அளிக்காததோடு,
அவரை மிரட்டும் உத்தியைக்
கையாண்டது பல்கலை நிர்வாகம்.
இதற்கிடையே, புதிய துணை வேந்தராக
குழந்தைவேல் பொறுப்பேற்ற பிறகும்கூட
வைத்தியநாதன் கோரும் தகவல்களுக்கு
பதில் அளிக்கக் கூடாது என்பதில்
குறியாக இருந்தது பல்கலை நிர்வாகம்.
பல்கலை அளவில் மேல்முறையீடு
செய்தபோதும் திருப்திகரமான
பதிலை அளிக்காததால்,
மாநில தகவல் ஆணையத்திற்கு
இரண்டாவது மேல்முறையீட்டுக்குச்
சென்றார்.

 

இந்த மனு மீது, கடந்த 2018ம் ஆண்டு டிச. 20ம் தேதி விரிவான விசாரணை நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 11 மாதங்கள் கழிந்த நிலையில், மாநில தகவல் ஆணையம் உதவி பேராசிரியர் வைத்தியநாதனுக்கு சாதகமான தீர்ப்பு அளித்துள்ளது.

 

அந்த தீர்ப்பில்,
”ஊழல் மற்றும் லஞ்சம் குறித்து
லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மனுதாரர்
புகார் கடிதம் அனுப்பியது குற்றம்
எனக்கூறி, பல்கலைக்கழக நிர்வாகத்தால்
மனுதாரருக்கு பிரச்னைகள் ஏற்படுத்தி உள்ளது மிகப்பெரிய தவறான செயலாகும்.

தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 என்பது ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிராகவும், வெளிப்படைத்தன்மையுடன் தகவல்கள் வழங்கப்படுவதன் அம்சமாக உருவாக்கப்பட்டது ஆகும். மனுதாரர் குறிப்பிடுவது லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு சம்பந்தமான தகவல்கள் என்பதால், மனுதாரருக்கு உடனடியாக வெளிப்படைத் தன்மையுடன் முழுமையான தகவல்கள் வழங்க பொதுத்தகவல் அலுவலருக்கு உத்தரவிடப்படுகிறது,” என்று தீர்ப்பு அளித்துள்ளது.

இது தொடர்பாக நாம் உதவி பேராசிரியர் வைத்தியநாதனிடம் பேசினோம்.

வைத்தியநாதன்

”பெரியார் பல்கலையில்
துணை வேந்தராக சுவாமிநாதன்
இருந்தபோது, பேராசிரியர் பணியிடங்கள்
50 லட்சம் ரூபாய் வரை விலைக்கு
விற்கப்படுவதாக,
ஆசிரியர் சங்க நிர்வாகி வைத்தியநாதன்
பேட்டி அளித்ததாக கடந்த 2017ம்
ஆண்டு ஒரு நாளிதழில்
செய்தி வெளிவந்தது.
அந்த வைத்தியநாதன் நான்தான்
என்று கருதி என் மீது
ஒருதலைப்பட்சமாக சுவாமிநாதன்
பணியிடை நீக்கம் செய்து
நடவடிக்கை எடுத்தார்.
நான் எந்த ஒரு ஆசிரியர்
சங்கத்தின் நிர்வாகியும்
இல்லை என்பதை அவரே
ஒப்புக்கொண்ட பிறகும்,
முறைகேடுகளை எதிர்த்துக் குரல்
கொடுத்து வந்ததால் என் மீது
பாரபட்சமாக நடவடிக்கை
எடுத்தனர்.

 

ஆசிரியர் நியமன ஊழல் மட்டுமின்றி,
பேராசிரியர் நடராஜன் பொறுப்பு
வகித்து வரும் கற்றல்சார்
குறைதீர் மையத்தில் நடந்த
ஊழல் குறித்தும் ஆர்டிஐ
சட்டத்தின் கீழ் தகவல் கேட்டிருந்தேன்.
இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கும்
புகார் அனுப்பினேன். ஒருவர்
பணியிடை நீக்கம் செய்யப்பட்டால்
6 மாதத்திற்குள் அவர்
மீதான புகாரை விசாரித்து
முடிக்க வேண்டும். என் விவகாரத்தில்
அப்படி நடக்கவில்லை.

 

மேலும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நாளில் இருந்து 6 மாதத்திற்கு அரை மாத சம்பளம் பிழைப்பு ஊதியமாகவும், அதற்குப் பிறகு பணியில் சேரும் வரை 75 சதவீத பிழைப்பு ஊதியமும் தரப்பட வேண்டும். இதிலும் விதி மீறலுடன் நடந்து கொண்டனர். என்னை பணியிடைநீக்கம் செய்வது குறித்து சிண்டிகேட் குழுவிலும் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.

 

அடுத்தடுத்து எனக்கு அநீதி இழைக்கப்பட்டதால் என் சம்பந்தமான விவரங்களை ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கேட்டபோது, அதற்கு சரியான பதில்களை பல்கலை நிர்வாகம் தரவில்லை. முதல் மேல்முறையீட்டிலும் எனக்கு பரிகாரம் கிடைக்காததால்தான், மாநில தகவல் ஆணையத்தில் இரண்டாம் மேல்முறையீட்டுக்குச் சென்றேன். கால தாமதம் ஆனாலும்கூட நல்ல தீர்ப்பாக கிடைத்திருக்கிறது. இது என்னைப் போன்ற ஆர்டிஐ ஆர்வலர்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய தீர்ப்பாக இருக்கிறது,” என்றார்.

 

ஆர்டிஐ ஆர்வலரான நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜூவிடம் மாநில தகவல் ஆணையத்தின் தீர்ப்பு குறித்து கேட்டோம்.

வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜூ

”ஊழல்களை வெளிக்கொண்டு
வரும் ஆர்டிஐ ஆர்வலர்கள்
மிரட்டப்படுவது எல்லா
அரசுத்துறைகளிலும் நடக்கிறது.
காவல்துறை, நீதித்துறைகளில்
இதுபோன்ற மிரட்டல்கள் அதிகம்.
பள்ளிக்கல்வித்துறையில் ஊதிய உயர்வு,
கல்வித்தகுதி விவரங்களை எஸ்ஆர்
புக்கில் பதிவு செய்ய வேண்டும்.
இதற்குக் கூட ஒவ்வொரு
பதிவுக்கும் 100 ரூபாய் லஞ்சம்
கேட்கிறார்கள். இதுகுறித்து
ஒரு ஆசிரியர், பணிப்பதிவேடு
புத்தகத்தின் கடைசி பதிவு குறித்து
ஆர்டிஐ சட்டத்தில் கேட்டால்
பதில் தருவதில்லை.
அதனால் வேறு நபரை
வைத்து கேட்டால்,
சம்பந்தப்பட்ட ஆசிரியரை
வைத்தே தன் தனிப்பட்ட
விவரங்களை யாருக்கும்
கொடுக்கக்கூடாது என்று
ஆட்சேபணை தெரிவிக்குமாறு
அவரை மிரட்டி எழுதி
வாங்கும் போக்கும் நடக்கிறது.

 

அதேபோல,
முதல் மனுக்களில்
90 சதவீதம் வரை தள்ளுபடி
செய்யப்படுகிறது.
இந்த ஊரடங்கு காலத்தில்
மட்டும் 600 ஆர்டிஐ மனுக்களை
அனுப்பி இருக்கிறேன்.
இதில், 4 மனுக்களுக்கு மட்டுமே
திருப்திகரமான பதில்கள்
கிடைத்துள்ளன.

 

பொதுமக்களுக்கு தகவல் தரணும் என்றுதான் ஒரு வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், நிஜத்தில் இந்த தீர்ப்பை யாரும் முழுமையாக பின்பற்றுவதில்லை. ஊழல் முறைகேடுகள் வெளியே வந்துவிடக்கூடாது என்பதில் அரசு நிர்வாகம் தெளிவாக இருக்கிறது. ஆர்டிஐ சட்டம் கொண்டு வந்தபோது, ஒவ்வொரு அரசு அலுவலகமும் நூலகமாக மாற வேண்டும். பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் சென்று தங்களுக்குத் தேவையான ஆவணங்களை பெற்று வரும் நிலை வரும் என்றார்கள.

 

ஆர்டிஐ சட்டம் பிரிவு 4, ‘அரசு அலுவலகங்களின் 99 சதவீத தகவல்களை யாரும் மனுக்கள மூலம் கோராமலேயே தாமாக முன்வந்து வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அவற்றை இணையதளத்திலும் வெளியிட வேண்டும்,’ என்றும் சொல்கிறது. ஆர்டிஐ சட்டத்தின் இந்தப் பிரிவு பற்று அரசுத்துறைகளிலேயே போதிய விழிப்புணர்வு இல்லை.

 

உதவி பேராசிரியர்
வைத்தியநாதனுக்கு
தகவல் ஆணையம் அளித்துள்ள
தீர்ப்பு வரவேற்புக்குரியது.
ஆர்டிஐ ஆர்வலர்களுக்கு மக்களும்,
குடும்பத்தினரும் ஆதரவு
அளிக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாவிட்டால்
பல துறைகளின் ஊழல்கள்
வெளியே வராமலேயே போய்விடும்.
ஆர்டிஐ ஆர்வலர்களும் நம்பிக்கை
இழந்து விடுவார்கள்.
வைத்தியநாதன் மீது பாரபட்சமாக
நடந்து கொண்ட பல்கலை
அதிகாரிகள் மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும்,” என்கிறார்
வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜூ.

 

ஊழலற்ற நிர்வாகம்,
வெளிப்படையான அரசு
என்பதெல்லாம் உதட்டளவில்
மட்டுமே உள்ளது.

 

– பேனாக்காரன்