Tuesday, December 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

எடப்பாடி பழனிசாமி இப்படி; மம்தா பானர்ஜி அப்படி!

பிறப்பு முதல் இறப்பு வரை எல்லாவற்றுக்கும் ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கிய காவி கும்பலை எதிர்க்கும் மிகப்பெரும் சக்தியாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உருவெடுத்துள்ளார்.

மத்திய அரசால் வழங்கப்படும் ஆதார் எண்ணை அனைத்து திட்டங்களுடனும் இணைக்கும் படி மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. அதேபோல் சிம் கார்டுகளை சமூக விரோதிகள், தீவிரவாதிகள் பயன்படுத்துவதைத் தடுக்க மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் கடந்த மார்ச் 23-ஆம் தேதி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் கொல்கத்தாவில் ஒரு பொதுக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், ”நான் என்னுடைய மொபைல் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க மாட்டேன். ஆதார் இணைக்குமாறு கட்டாயப்படுத்துவது தனிநபர் உரிமை மீது நடத்தப்படும் தாக்குதலாகும். இதனால் என் மொபைல் எண் இணைப்பை துண்டித்தாலும் பரவாயில்லை.

மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை யாரும் இணைக்காதீர். அவ்வாறு இணைக்கப்பட்டால் கணவன்- மனைவியிடையே நடைபெறும் உரையாடலும் அந்தரங்கம் இல்லாமல் போய்விடும். பொதுவெளிக்கு செல்லக் கூடாத வகையில் சில விஷயங்கள் உள்ளன,” என்றார்.

தொடர்ந்து அவர் பாஜகவின் பல்வேறு திட்டங்களையும், கொள்கைகளையும் கடுமையாக சாடினார்.

கடந்த சில மாதங்களுக்கு முன், விஐபி கலாச்சாரத்தை ஒழிக்கும் வகையில், இனி முதல்வர் உள்பட பல முக்கிய விஐபிகளுக்கு கார்களில் சுழல் விளக்கு பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.

அவர் அப்படிச்சொன்ன மறுநாளே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய காரில் தானே ஏறி, மேலே பொருத்தப்பட்டிருந்த சுழல் விளக்கை அகற்றினார். அப்போது அவர் ஊடகத்தினரிடம் கூறுகையில், ”சுழல் விளக்கு கலாச்சாரத்தை தவிர்க்கும்படி பிரதமர் சொன்னதால்தான் அகற்றினேன்,” என்றார்.

இந்தியாவில் பெரும்பான்மை மாநிலங்களில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டு அசுர பலத்துடன் இருந்தாலும், அந்தக் கட்சியையும், பிரதமரையும் தைரியமாக மம்தா பானர்ஜி விமர்சித்து வருகிறார். ஆனால், நம் மாநிலத்திலோ ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்வதற்காக பாஜகவின் எத்தகைய அமிலச்சோதனைக்கும் தன்னை உட்படுத்திக்கொள்ள முதல்வர் உள்ளிட்ட பரிவாரங்கள் தயாராக இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

– பேனாக்காரன்.

Leave a Reply