Sunday, April 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

இளையராஜாவின் மகள் பவதாரணி திடீர் மரணம்!

இளையராஜாவின் மகளும், பிரபல திரையிசை பின்னணி பாடகியுமான பவதாரணி இன்று (ஜன. 25) மாலை உடல்நலக்குறைவால் திடீரென்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 47.

இசைஞானியும், ராஜ்யசபா எம்.பி.,யுமான
இளையராஜாவின் ஒரே மகள் பவதாரிணி.
இசைக்குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால்
சிறு வயதிலேயே இசைத்துறைக்குள்
காலடி வைத்துவிட்ட பவதாரணி,
பின்னணி பாடகி, இசையமைப்பாளர்,
கவிஞர் என பன்முகத்திறமை
கொண்டவராக விளங்கினார்.

இவருடைய உடன்பிறந்தவர்களான கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா ஆகியோரும் பிரபல இசையமைப்பாளர்களாகத் திகழ்ந்து வருகின்றனர்.

பிரபுதேவா நடித்த ராசய்யா
படத்தில்தான் இவர் முதன்முதலில்
பின்னணி பாடகியாக அறிமுகம் ஆனார்.
பாரதி படத்தில் இவர் பாடிய,
மயில்போல பொண்ணு ஒண்ணு… என்ற
பாடலுக்காக சிறந்த பின்னணி
பாடகிக்கான தேசிய விருது பெற்றார்.

இதற்கிடையே,
அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு
இருப்பது தெரிய வந்தது.
இதற்காக அவர், ஸ்ரீலங்காவில் தங்கி,
ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தார்.
இளையராஜாவும் அவருடன் தங்கியிருந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி
இன்று மாலை அவர் திடீரென்று
உயிரிழந்தார்.

பவதாரிணி பெரும்பாலும் அவருடைய
தந்தை மற்றும் சகோதரர்கள் இசையமைப்பில்
பாடல்களைப் பாடியுள்ளார்.
இசையமைப்பாளர்கள் தேவா, சிற்பி ஆகியோரின்
இசையிலும் சில பாடல்களைப் பாடியுள்ளார்.

முத்தே முத்தம்மா… (உல்லாசம்), என் வீட்டு ஜன்னல் வந்து.. (ராமன் அப்துல்லா), தாலியே தேவை இல்ல நீதான்… (தாமிரபரணி), மெர்குரி பூவே… (புதிய கீதை), ஒளியிலே தெரிவது தேவதையா… (அழகி), தனுஷ் நடிப்பில் வெளியான, ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி… (அனேகன்) உள்ளிட்ட பாடல்களால் நன்கு அறியப்பட்டவர்.

வெள்ளிச்சி… என்ற நாட்டுப்புற இசைக்காக தனித்துவமான பெயரெடுத்தார். வித்தியாசமான குரலுக்குச் சொந்தக்காரரான இவருக்கு தனி ரசிகர் பட்டாளமும் உண்டு.

நடிகை ரேவதி இயக்கிய
‘மித்ர மை பிரண்ட்’ என்ற படத்தின் மூலம்
இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆனார்.
ரேவதி இயக்கிய மற்றொரு படமான
‘பிர்மிலாங்கி’ படம் உள்பட பத்துக்கும்
மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

சென்னையில் உள்ள ரோசரி மெட்ரிக் பள்ளியில் படித்த பதவதாரணி, சபரிராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர், விளம்பர பட நிறுவனம் நடத்தி வருகிறார்.

இசைஞானியின் மகள் என்ற படாடோபம் சிறிதும் இல்லாமல் எளிமையாகப் பழகும் குணம் கொண்டவர் என்றும், அவருடைய குரலைப் போலவே மிகவும் மென்மையான சுபாவம் கொண்டவர் என்றும் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் பரணி கூறுகையில்,
”அவர் இறந்துவிட்டார் என்ற தகவலை
இப்போதும் என்னால் நம்பவே முடியவில்லை.
அதிர்ச்சியாக இருக்கிறது.
என்னுடைய இசையிலும்
அவர் பாடியிருக்கிறார்.
பழகுவதற்கு மென்மையானவர்.
அவருடைய இறப்பு, ஈடு செய்ய
முடியாத இழப்பு,” என்றார்.

பவதாரணியின் திடீர் மரணம், திரையுலகினர், இளையராஜா, யுவன்சங்கர் ராஜா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அவருடைய மரணம், தமிழ்த்திரையுலகத்திற்கு பேரிழப்பு ஆகும்.

அவருடைய உடல், வெள்ளிக்கிழமை (ஜன. 26) ஸ்ரீலங்காவில் இருந்து சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இறுதிச்சடங்குகள் நடைபெறும் எனத் தெரிகிறது.

 

– பேனாக்காரன்