Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம்தான்! ரஜினி பரபரப்பு பேட்டி!!

நடிகர் ரஜினிகாந்த்,
கடந்த 2017ல் தனது
அரசியல் பிரவேசம் குறித்து
திடமாக அறிவித்த பின்னரும் கூட,
தன் படங்களுக்கான புரமோஷன்
உத்தியாகவே பல தரப்பில்
இருந்தும் விமர்சனங்கள்
கிளம்பின.

இந்த நிலையில்
கடந்த அக்டோபரில்
அவருடைய உடல்நலம்
குறித்த தகவல்கள்
சமூக ஊடகங்களில்
வேகமாக பரவின. அதுகுறித்து
கருத்து தெரிவித்த ரஜினி,
”சமூக ஊடகங்களில் என்
உடல்நலம் குறித்து
வெளிவந்திருக்கும் தகவல்கள்
உண்மைதான். ஆனால்
அது அதிகாரப்பூர்வமாக
நான் அறிவிக்கவில்லை,”
என்றார்.

 

இதனால் அவர் ஏற்கனவே அறிவித்தபடி அரசியல் கட்சி தொடங்குவாரா? என்ற அய்யம் பல மட்டங்களிலும் எழுந்தது.

 

இந்நிலையில்,
நவ. 30ம் தேதி ரஜினி
மக்கள் மன்ற நிர்வாகிகளுடன்
ராகவேந்திரா மண்டபத்தில்
திடீர் ஆலோசனைக் கூட்டம்
நடத்தினார். அப்போது ரஜினி,
ஓரிரு நாளில் அரசியல்
நிலைப்பாடு குறித்து முடிவை
அறிவிப்பதாக கூறியிருந்தார்.
அப்போதே அவர் ஜனவரியில்
புதிய கட்சியைத் துவங்குவது
உறுதியாகி விட்டதாக யூகங்கள்
காற்றில் றெக்கை கட்டி
பறக்கத் தொடங்கின.

 

இந்த பரபரப்புக்கு இடையேதான்,
ரஜினிகாந்த் வரும்
டிசம்பர் 31ம் தேதி
புதிய அரசியல் கட்சியைத்
தொடங்க உள்ளதாக இன்று
தெரிவித்து இருக்கிறார்.
இந்த அறிவிப்பால்
அவருடைய ரசிகர்கள்
உற்சாகம் அடைந்துள்ளனர்.

 

ரஜினிகாந்த் தனது
போயஸ் தோட்ட வீட்டில்
இருந்து இன்று (டிச. 3)
பகல் 1.30 மணியளவில்
செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:

 

அரசியலுக்கு வருவேன்
என்று கடந்த 2017ம் ஆண்டு
டிசம்பர் 31ம் தேதி சொல்லி
இருந்தேன். அதன் பின்னர்
உள்ளாட்சித் தேர்தல்,
மக்களவை தேர்தலில் நாம்
போட்டியிடவில்லை. சட்டமன்றத்
தேர்தலுக்கு முன்னர் நாம்
கட்சித் தொடங்கி, 234
தொகுதிகளிலும் போட்டியிடுவோம்
என்றும், மக்களிடம் அந்த
எழுச்சி வரும்போது அரசியல்
கட்சித் தொடங்குவது குறித்து
அறிவிப்பேன் என்றும்
சொல்லி இருந்தேன்.
இப்போது மக்களிடம்
அந்த எழுச்சி வந்துவிட்டது.

 

கட்சி தொடங்குவதற்கு முன்பாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டேன். ஆனால் கொரோனா ஊரடங்கால் முடியாமல் போய்விட்டது. உடல்நலம் சரியில்லை. இது தொடர்பாக மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டேன். கொரோனா பாதித்தால், போதிய நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் போனால் ஹார்ட் வரைக்கும் பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்தனர். தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் எனக்கு சந்தோஷம்தான். நான் என்றைக்கும் கொடுத்த வாக்கை காப்பாற்றுவேன். வாக்கு தவறமாட்டேன்.

 

தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும். ஆட்சி மாற்றம் வேண்டும். அது காலத்தின் கட்டாயம். இப்போது இல்லாவிட்டால் இனி எப்போதும் முடியாது. மாற்றணும்; எல்லாவற்றையும் மாற்றுவோம். நீங்கள்தான்…ஜனங்கள்தான் ஆதரவு தர வேண்டும். புதிய கட்சியின் பெயர் வரும் டிச. 31ம் தேதி அறிவிக்கப்படும். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றுவோம். எனக்கு நீங்கள் எல்லாம் துணை நிற்க வேண்டும் என்று இரு கைகளைக் கூப்பி கேட்டுக் கொள்கிறேன்.

 

அரசியலில்
நான் வெற்றி பெற்றால்
அது நீங்கள் பெற்ற வெற்றி;
நான் தோற்றால் அது
உங்களுக்கு கிடைத்த தோல்வி.
இவ்வாறு ரஜினிகாந்த்
கூறினார்.

 

40 சதவீதம் பாக்கி இருக்கு!

 

‘அண்ணாத்த’ பட
ஷூட்டிங்கில் இன்னும்
40 சதவீத வேலைகள் பாக்கி
இருக்கிறது. பட வேலைகளையும்
முடித்துக் கொடுத்து விட்டு
வந்து விடுகிறேன். ஏற்கனவே
கட்சி தொடங்குவதற்கான
வேலைகளை தொடங்கிவிட்டோம்.
டிசம்பர் 31ம் தேதி கட்சிப்
பெயர் அறிவிக்கப்படும்
என்றும் ரஜினி தெரிவித்தார்.

 

அர்ஜூனமூர்த்தி – தமிழருவி மணியன்:

 

ரஜினி தான் தொடங்கப்போகும்
புதிய கட்சிக்கு அர்ஜூனமூர்த்தி
என்பவரை தலைமை
ஒருங்கிணைப்பாளராக
நியமித்து உள்ளார். அவர்
ஏற்கனவே பாஜகவில் அறிவு
சார்ந்த தொழில்நுட்ப பிரிவில்
தலைமைப் பொறுப்பில் இருந்தவர்
என்பது குறிப்பிடத்தக்கது.
பேட்டியின் போது
தமிழருவி மணியன்
உடன் இருந்தார். அவர்,
ஒரு மேற்பார்வையாளராக
இருந்து வழிநடத்தினார்
என்று ரஜினி குறிப்பிட்டார்.

 

ட்விட்டர் பதிவு:

 

முன்னதாக ரஜினிகாந்த்
தனது ட்விட்டர் பக்கத்தில்,
”வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில்,
மக்களுடைய பேராதரவுடன்
வெற்றி பெற்று, தமிழகத்தில்
நேர்மையான, நாணயமான,
வெளிப்படையான, ஊழலற்ற,
ஜாதி மதச்சார்பற்ற ஆன்மீக
அரசியல் உருவாகுவது நிச்சயம்.
அற்புதம்… அதிசயம்… நிகழும்,”
என்று பதிவிட்டு இருந்தார்.
மேலும், ”மாத்துவோம்.
எல்லாத்தையும் மாத்துவோம்.
இப்போ இல்லேன்னா
எப்பவும் இல்ல” என்றும்
பதிவிட்டிருந்தார்.

 

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பால் தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.

 

– பேனாக்காரன்