கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டதன் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் பொறுப்புக்கு வந்த நாள் முதல், நடந்த அனைத்து பணி நியமனங்களிலுமே யுஜிசி விதிமீறல்களும், பண பேரமும் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பல்கலையின் துணைவேந்தராக கணபதி, கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார். மன்னார்குடி கும்பலின் ஆசியுடன் அவர் இந்தப் பதவியில் அமர்த்தப்பட்டார். அப்போது தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யா, ஜெயலலிதாவுக்கு ரொம்பவே இணக்கமாக இருந்தார்.
மன்னார்குடி கும்பல் ஆசி:
அதனால்தான், சசிகலா கும்பல் கைக்காட்டிய பலருக்கு அப்போது துணைவேந்தர் பதவி கிடைத்தது. இந்த விசுவாசம் காரணமாகத்தான், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டபோது, அவருக்கு நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்த துணைவேந்தர்களில் கணபதியும் ஒருவர்.
என்னதான் மன்னார்குடி கும்பலின் ஆசிகள் இருந்தாலும், கணபதிக்கு துணைவேந்தர் பதவியை ஒன்றும் சும்மா தூக்கிக் கொடுத்துவிடவில்லை. 8 கோடி ரூபாய் கொடுத்துதான், அவரால் இந்தப் பதவிக்கு வர முடிந்தது என்கிறார்கள் பல்கலை வட்டாரத்தில். இதில் ஒரு சின்ன ட்விஸ்ட் இருக்கிறது. என்னவென்றால், அவர் கொடுத்ததாகச் சொல்லப்படும் 8 கோடி ரூபாயும் அவருடைய சொந்தப் பணம் இல்லை என்கிறார்கள்.
8 கோடி ரூபாய் யாருடையது?:
இது தொடர்பாக நம்மிடம் பேசிய ஓய்வு பெற்ற அரசுக்கல்லூரி பேராசிரியர் ஒருவர், கோவை பாரதியார் பல்கலையின் முன்னாள் துணைவேந்தராக இருந்த ஒருவர்தான், உற்ற நண்பராக பழகிய கணபதிக்கு அந்தப் பணத்தை கொடுத்து உதவியதாகச் சொன்னார். இந்தப் பதவியைக் கைப்பற்றுவதற்காக கணபதி ஏற்கனவே சிலரிடம் அவசரப்பட்டு கடன் வாங்கியது குறித்து அந்த முன்னாள் துணைவேந்தரிடம் கூறி புலம்பியுள்ளார்.
பிறகு அந்த முன்னாள் துணைவேந்தர், சேலம் பெரியார் பல்கலைக்கு துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். பேராசிரியர் பணிக்காக பணம் கொடுக்க பலர் ‘கியூ’வில் நிற்கிறார்கள். அவர்களில் சிலரை, பாரதியார் பல்கலைக்கு அனுப்புகிறேன். அவர்களிடம் பணத்தை வாங்கி, பட்ட கடனை அடைத்துவிடு என்று நம்பிக்கை அளித்ததாகச் சொன்னார்.
நாலாபுறமும் பிக்கல் பிடுங்கல் அதிகமாக இருக்கவே, பல்கலையில் தற்காலிக பணியாளர்கள் நியமனம் முதல் உறுப்பு க்கல்லூரிகளுக்கு உதவி பேராசிரியர்களை நியமிப்பது, இணைவு பெற்ற கல்லூரிகளுக்கு கூடுதல் பாடப்பிரிவு அனுமதி, புதிய கல்லூரி தொடங்க அனுமதி, தொலைநிலைக் கல்வி மையம் தொடங்க அனுமதி என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக இலக்கு வைத்து பணம் பார்த்துள்ளார் கணபதி.
அப்படி, உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்த சுரேஷ் என்பவரிடம் அந்தப்பணிக்காக 30 லட்சம் ரூபாய் பேரம் பேசிய விவகாரத்தில்தான் இப்போது வகையாக மாட்டியிருக்கிறார் துணைவேந்தர் கணபதி.
சுரேஷ் முதலில் அட்வான்ஸ் தொகையாக 1 லட்சம் ரூபாயை ரொக்கமாக கொடுத்துள்ளார். மீதப்பணத்தை பின்தேதியிட்ட காசோலையாக தருவதாகக் கூறியிருக்கிறார். உலகிலேயே லஞ்சப் பணத்தை காசோலையாக வாங்கிய முதல் ஆசாமி கணபதி என்பதில்தான் தர்க்க முரண் எழுகிறது.
அதன்படி, இன்று காசோலைகளைக் கொடுக்கும்போது முன்பே துணைவேந்தர் வீடு அருகே பதுங்கியிருந்த லஞ்ச ஒழிப்புப் போலீசார், கையும் களவுமாக கணபதியை பிடித்துவிட்டனர். காலை 9 மணிக்குள் போலீசார் அவருடைய வீட்டுக்குள் நுழைந்ததும், உள்பக்கமாக தாழிடப்பட்டது.
பத்திரிகையாளர்கள், உறவினர்கள், துணைவேந்தரின் வழக்கறிகர்கல் என ஒருவரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. இரவு 7.30 மணிக்கு மேலாகியும் விசாரணை முடியவில்லை.
அன்றே சொன்னார் பாமக ராமதாஸ்:
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், கடந்த 16.11.2016ம் தேதி ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், பாரதியார் பல்கலையில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர் என 76 பணியிடங்களும், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலையில் 54 பேராசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 130 பணியிடங்களை நிரப்ப 60 கோடி ரூபாய் கைமாறிவிட்டதாக பகிரங்கமாகவே குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து, உயர்கல்வித்துறை அமைச்சர், செயலர் ஆகியோர் இப்பணியிடங்களுக்கான ஒப்புதல் பெறக்கூடிய ஆட்சிமன்றக் கூட்டத்தை நடத்தக்கூடாது என அவசர அவசரமாக ஓர் உத்தரவை பிறப்பித்தனர். அதன்பின்னர், 2016, நவம்பர் 21ம் தேதியன்று, துணைவேந்தர் கணபதியை உயர்கல்வித்துறை செயலர் கார்த்திக் நேரில் அழைத்து விசாரித்து அனுப்பினார்.
இதனால், பாரதியார் பல்கலையில் பணி நியமனங்கள் இருக்காது என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில், மறுநாளே சிண்டிகேட் கூட்டத்தில் 76 பேராசிரியர் பணியிடங்களுக்கும் ஒப்புதல் பெற்ற தீர்மானத்தை நிறைவேற்றினார் துணைவேந்தர் கணபதி.
ஆக, சிண்டிகேட் கூட்டத்திற்கு தடை விதித்தது, உயர்கல்வித்துறை செயலரின் விசாரணை எல்லாமே வெகுசன ம க்களை நம்ப வைப்பதற்காக நடத்தப்பட்ட நாடகம் என்பதும், சுருட்டிய தொகையில் யார் யாருக்கு எவ்வளவு பங்கு என்பதை உறுதிப்படுத்தவே இந்த கெடுபிடி நாடகம் நடத்தப்பட்டதாகவும் அப்போது சந்தேகம் கிளம்பின.
அவர் பொறுப்பேற்றதுமுதல் இன்று வரை மொத்தம் 112 நியமனங்கள் நடந்துள்ளதாகவும், இதன்மூலம் அவர் 25 கோடி ரூபாய்க்கு மேல் சுருட்டியிருக்கலாம் என்றும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூத்திரதாரி யார்?:
ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு நெருக்கமாக இருந்து வரும் துணை வேந்தரை லஞ்ச ஒழிப்புப் போலீசார் நெருங்கியது எப்படி என்ற சந்தேகம் எல்லோருக்கும் இயல்பாக எழக்கூடும். இன்றைய நிகழ்வின் பின்னணியில் இருந்தது, ஆளும்தரப்பு அல்ல; ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
பன்வாரிலால் புரோஹித், கோயம்பத்தூரில் மக்கள் குறைகேட்க சென்றிருந்தபோதே பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தினர், துணைவேந்தர் கணபதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பாரதியார் பல்கலையில் அரங்கேறி வரும் ஊழல்கள் குறித்தும் விரிவாக தயாரிக்கப்பட்ட புகார் மனுவை நேரில் அளித்துள்ளனர். அதன் தொடர் நடவடிக்கைதான் பொறியில் சிக்கிய எலியாக அகப்பட்டுக் கொண்டிருக்கிறார் கணபதி.
வித்யாசாகர் ராவ், இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்புக்கு கொஞ்சமாவது இசைந்து கொடுத்தார். ஆனால், பன்வாரிலால் புரோஹித், கட்டுப்படுவது பாஜக மேலிடத்திற்கு மட்டும்தானாம். அவருடைய நேரடி உத்தரவின்பேரில்தான் லஞ்ச ஒழிப்புப் போலீசார் இன்று, இத்தகைய துணிச்சலான காரியத்தில் இறங்கியுள்ளதாகவும் கூறுகின்றனர்.
ட்விட்டரில் சீற்றம்:
கணபதி கைது செய்யப்பட்டதற்கு பலரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். முன்னாள் பேராசிரியர் ஒருவர், ”இவர்களையெல்லாம் சுட்டுக்கொல்ல வேண்டும் சார். உயர்கல்வித்துறையையே நாசமாக்கிவிட்டனர்,” என்று கடும் கோபத்துடன் சீறினார்.
ட்விட்டரில் ஒருவர், ”இவரை கைது செய்யக்கூடாது. இவரை மாதிரி ஆளுங்களை தேர்வு செஞ்சாங்களே அவங்கள உள்ளே போடணும். இவர்களை தேர்வு செய்தது அவமானம்,” மற்றொருவர், ”பாரதியார் கணபதி சரி… அழகப்பா சுப்பையா எப்பய்யா…?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பாரதியார் பல்கலை ஆங்கிலத்துறை பேராசிரியர் சரவண செல்வன், பிஹெச்.டி., மாணவி ஒருவரிடம், ”பட்டம் வேண்டுமென்றால் ஒரு நாள் தன்னுடன் தங்க வேண்டும்,” என்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டது அப்போது பெரும் சர்ச்சை ஆனது. அதன் மீது துணைவேந்தர் கணபதி எவ்வித நடவடிக்கையும் எடுக்காததற்கும் இப்போது பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வன்கொடுமை வழக்கு:
துணைவேந்தர் கணபதி மீது, லட்சுமி பிரபாகரன் என்ற பிஹெச்.டி., மாணவி, தன்னை சாதி பெயர் சொல்லி திட்டியதாக புகார் கூறியிருந்தார். அந்தப் புகாரின்பேரில், வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவின் கீழ் கணபதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
சிபிஐ விசாரணை:
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்கள், அவற்றின் உறுப்புக் கல்லூரிகளில் கடந்த 2011ம் ஆண்டு முதல் நியமிக்கப்பட்ட அனைத்து பணி நியமனங்களின் உண்மைத் தன்மை குறித்தும் சிபிஐ போலீசார் விரிவான விசாரணையை மேற்கொண்டால்தான், உயர்கல்வித்துறையில் அரங்கேறும் ஊழல்களை ஒடுக்க முடியும்.
– பேனாக்காரன்.