Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

குலேபகாவலி – சினிமா விமர்சனம்

நடனப்புயல் பிரபுதேவா நடிப்பில், 15 நாள் இடைவெளியில் வெளிவந்திருக்கும் இரண்டாவது படம், ‘குலேபகாவலி’. உலகம் எங்கும் இன்று (ஜனவரி 12, 2018) வெளியாகி இருக்கிறது.

நடிப்பு: பிரபுதேவா, ஹன்சிகா மோத்வானி, ரேவதி, ‘முனீஸ்காந்த்’ ராம்தாஸ், மன்சூர் அலிகான், ஆனந்தராஜ், யோகி பாபு, சத்யன் மற்றும் பலர்; இசை: விவேக் & மெர்வின்; ஒளிப்பதிவு: ஆனந்தகுமார்; தயாரிப்பு: கேஜேஆர்; இயக்கம்: கல்யாண்.

கதை என்ன?: பிரிட்டிஷ்காரர் ஒருவர் 1945ம் ஆண்டு, இந்தியாவை விட்டு வெளியேறுகிறார். அவர் செல்லும்போது, அவரிடம் இருக்கும் விலை உயர்ந்த வைரங்களை திருடும் இந்தியர் ஒருவர், அதை குலேபகாவலி என்ற கிராமத்தில் புதைத்து வைக்கிறார்.

பல ஆண்டுகள் கழித்து, அந்த இந்தியரின் பேரனுக்கு குலேபகாவலி கிராமத்தில் வைர புதையல் இருப்பது தெரிய வருகிறது. அதை எடுக்க இந்தியாவுக்கு வரும் அவர், சிலை கடத்தும் கும்பலிடம் அந்த பொறுப்பை ஒப்படைக்கிறார். அந்த கும்பல் வைர புதையலை எடுத்ததா? இல்லையா? என்ன நடந்தது? என்பதுதான் குலேபகாவலி படத்தின் சுருக்கமான கதை.

நகைச்சுவை: ஒரு முழு நீள நகைச்சுவை படத்திற்கு என்ன தேவையோ அதற்குத் தகுந்த ககைக்களம்தான் இது. திரைக்கதையிலும் அதற்கேற்ப நகைச்சுவை இழையோடுகிறது. ஆனால், முழு நீளத்திற்கும் அத்தகைய உணர்வு ஏற்படவில்லை என்றாலும், குடும்பத்துடன் ஜனரஞ்கமாக ரசிக்கவும் இந்தப்படத்தில் விஷயம் இருக்கிறது.

நம்பி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மன்சூர் அலிகான், சிலை கடத்தல்காரராக வருகிறார். அவரின் அடியாளாக இருக்கிறார் பத்ரி (பிரபுதேவா), சின்னச்சின்ன திருட்டு வேலைகளில் ஈடுபடும் விஜி (ஹன்சிகா மோத்வானி), கார் திருடராக கலக்கும் மாஷா (ரேவதி) ஆகியோர் தனித்தனி ஆட்கள் என்றாலும் பழைய வைரப்புதையலை கொள்ளை அடிக்கும் புள்ளியில் ஒன்றிணைகின்றனர்.

மற்றொருபுறம் ‘முனீஸ்காந்த்’ ராம்தாஸ், ஆனந்தராஜ், அண்ணாச்சியாக வரும் ‘மொட்டை’ ராஜேந்திரன் குழுவும் வைர புதையலை வேட்டையாடுவதில் ஈடுபடுகிறது. குலேபகாவலி ஊர்க்காரர்களும் புதையலை எடுக்க முட்டுக்கட்டை போடுகின்றனர். இவர்களையெல்லாம் கடந்து அந்த வைரப்புதையலை ‘பத்ரி அன்டு கோ’ எடுத்தார்களா என்பதை நகைச்சுவை இழையோட விவரிக்கிறார் இயக்குநர் கல்யாண்.

அழுகை அம்மாவாக பார்த்துப் பழக்கப்பட்ட ரேவதிக்கு இந்தப்படம் முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தைக் கொடுத்திருக்கும். அவருடைய ரசிகர்களுக்கும்தான். காமெடி காட்சிகளில் அவரும் பின்னியிருக்கிறார். ‘அரங்கேற்றவேளை’ படத்தில் அவருடைய பாத்திரத்தின் பெயர் மாஷா. அதே பெயர்தான், குலேபகாவலியிலும்.

படத்தில் ஆங்காங்கே இயக்குநரின் பிரத்யேக ரசனையும் பளிச்சிடுகிறது. ஒரு காட்சியில் மன்சூர் அலிகான், கோபத்தில் யோகி பாபுவை தாக்குவார். அப்போது யோகி பாபு தரையில் ஏதோ எழுதுவார். என்னடா கிறுக்கிக்கிட்டு இருக்க என்று மன்சூர் அலிகான் கேட்கையில், யோகி பாபு ‘இடைவேளை’ என்று எழுதியிருப்பார். படத்தில் யோகி பாபுவின் காமெடி நன்றாகவே எடுபட்டுள்ளது. பல இடங்களில், ரசிகர்கள் சிரிப்பலையில் அரங்கம் அதிர்கிறது.

அதேபோல், மொட்டை ராஜேந்திரன் குழுவில் ஒருவர் கமல் போல நடித்திருப்பார். அவரின் எல்லா நடை, உடை பாவனைகளிலும் கமலை ‘இமிடேட்’ செய்திருப்பதும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.

அண்மைய படங்களில் நாயகிகளுக்கு பெரிய வேலை கொடுப்பதில்லை. இந்தப்படத்தில் ஹன்சிகாவுக்கு கிளாமர் காட்சிகள் இருந்தாலும், படம் முழுக்க அவரும் பயணிப்பது வரவேற்கத்தக்கது. பாடல்களில் நடனப்புயல் என்பதை பிரபுதேவா நிரூபிக்கிறார். ஆனாலும், இந்தப் படத்திற்கு பாடல்கள் தேவையா? என்ற கேள்விகளும் எழாமல் இல்லை. ஒரு பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது.

விவேக் – மெர்வின் என்ற இரட்டை இசையமைப்பாளர்கள் பாடல்களில் கோட்டை விட்டாலும், பின்னணி இசையில் ஸ்கோர் செய்து விடுகின்றனர். ஆனந்தகுமாரின் ஒளிப்பதிவும் கச்சிதம். ஆனால், படத்தொகுப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

காமெடி பொங்கல் வைத்திருக்கிறது குலேபகாவலி.

 

– வெண்திரையான்.