Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஜிஎஸ்டி வரி குறைப்பு: ‘மீம்ஸ்’களால் வறுபடும் பாஜக!

ஜிஎஸ்டி வரி குறைப்பை (சரக்கு மற்றும் சேவை வரி) வரவேற்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோர் தெரிவித்த கருத்துகளுக்கு வழக்கம்போல் ட்விட்டரில் மீம் கிரியேட்டர்கள் அவர்களை நிமிரவே விடாமல் குனிய வைத்து குமுறியிருக்கிறார்கள்.

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே நாட்டின் பன்மைத்துவத்தை சிதைக்கும் வகையில் ஒரே இந்தியா, ஒரே மொழி, ஒரே வரி சித்தாந்தங்களை முன்னெடுத்து வருகிறது. சங்க பரிவாரங்களின் அஜன்டாவை அமல்படுத்துவதில் குறியாக செயல்படுகிறது.

அதற்கேற்ப, கடந்த ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி என்ற வரி விதிப்பு முறையை நடுவண் அரசு அமல்படுத்தியது. 18 ஆண்டுகளுக்கு மேலாக விவாதத்தில் இருந்த இந்த வரி விதிப்பு முறை, பாஜக அரசு அமல்படுத்தியிருக்கிறது.

ஜிஎஸ்டி முறையை காங்கிரஸ் வரவேற்றாலும், அதை அமல்படுத்தியதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும், 28 விழுக்காடு வரையிலான அதிகபட்ச வரிவிதிப்பையும் கடுமையாக எதிர்த்து வருகிறது. குறிப்பாக, சாமானியர்கள் பாதிக்கப்படும் வகையில் வரி விதிப்பு முறை இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் ஜிஎஸ்டி அமலாக்கத்தில் உள்ள குறைகளை பாஜகவும் மறைமுகமாக ஒப்புக்கொண்டது.

இதன் வெளிப்பாடாக நேற்று நடந்த 23வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 177 பொருள்களின் ஜிஎஸ்டி வரி வரம்பை 28%ல் 18% ஆகக் குறைத்துள்ளது. 13 பொருள்களின் வரி வரம்பை 18ல் இருந்து 12% ஆகவும், 6 பொருள்களின் வரி வரம்பை 18ல் இருந்து 5% ஆகவும், 8 பொருள்களின் வரி வரம்பை 12ல் இருந்து 5% ஆகவும் குறைத்துள்ளது.

இந்த புதிய வரி சீர்திருத்தம் வரும் 15ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

எனினும் உயிர் காக்கும் மருந்துகளின் வரி வரம்பை 5 விழுக்காடாகக் குறைக்க வேண்டும் என்றும் கருத்துகள் எழுந்துள்ளன.

ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின்னர், ஏற்கனவே பலமுறை வரி அமைப்புகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. பொருளாதார நிபுணர்களுடன் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாகவும், அவசரகதியிலும் அமல்படுத்தியதன் விளைவுகளை இப்போது பாஜக சந்தித்துக் கொண்டிருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

போகிறபோக்கில் அவர்கள் மீண்டும் வாட் வரி விதிப்புக்கே திரும்பினாலும் ஆச்சர்யம் இல்லை என்றும் கூறப்படுகிறது.

திருத்தப்பட்ட வரி விதிப்பை வரவேற்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோர் தெரிவித்துள்ள கருத்துக்கு வழக்கம்போல் மீம் கிரியேட்டர்கள் கேலி, கிண்டலாக எதிர்வினையாற்றி இருக்கிறார்கள்.

குஜராத் மாநில சட்டப் பேரவை தேர்தலை மனதில் வைத்தே இந்த நேரத்தில் வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் கிண்டலடித்துள்ளனர்.

பாஜக ஆதரவாளர்கள் என்ற ரீதியில் மீம் விமர்சனங்களை அணுகாமல், பொதுப்பார்வையாளனாக உற்றுநோக்கும்போது பாஜகவிற்கான எதிர்வினைகளில் அர்த்தம் இருப்பதை அக்கட்சியே புரிந்து கொள்ளக்கூடும்.

இதுபோன்ற கேலிச்சித்திரங்களை வெறும் பகடியாக கடந்து விடாமல், மக்களின் மனவோட்டமாக பாஜக கருதினால், மக்கள் விரோத திட்டங்களை செயல்ப டுத்துவதை தவிர்க்க முடியும் என்பதே விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.