Wednesday, July 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

எடப்பாடி போட்ட ‘லவ்-ஆல்’ சர்வீஸ்! அரசு விழாவில் ‘கிச்சுகிச்சு’!!

என்னதான், தன்னை ஒரு விவசாயக்குடும்ப பின்புலத்தில் இருந்து வந்தேன் என்று சொல்லிக்கொண்டாலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குள் இருக்கும் குழந்தைமைத்தன்மையும் அவ்வப்போது வெளிப்பட்டு விடுவதை பொது விழாக்களில் பார்க்க முடிகிறது.

 

அது மறைந்த முதல்வர் ஜெயலலிதா பற்றி பேசும்போது உணர்ச்சி மேலிட்டு அழுவதாகட்டும்; பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தனக்குத் தெரிந்த நடையில் வெள்ளந்தியாக பேசுவதாகட்டும். அவருக்கென அரசியலில் தனி நடையை உருவாக்கிக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

 

பாமக நிறுவனர் ராமதாஸ், ‘முதல்வர் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்கிறாரே?’ என்று பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டால், அதற்கு கொஞ்சமும் சினம் கொள்ளாமல், ‘அவர் இன்னும் என்னதான் சொல்லவில்லை? அவர்களால்தான் மழையே பெய்ய மாட்டேங்குது. இப்போதுதான் அக்கட்சியினர் மரம் நட ஆரம்பித்திருக்கின்றனர்,’ என்று பாமகவினரை ‘மரம் வெட்டிகள்’ என்று வரும் விமர்சனங்களை முன்வைத்து, நையாண்டியாக பேசுவதும் எடப்பாடி பழனிசாமிக்கே உரிய கலை எனலாம்.

இது ஒருபுறம் இருக்க, சேலத்தில் இன்று (ஆகஸ்ட் 31, 2018) பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அவற்றில் முக்கியமானது, பசுமைவெளி பூங்காக்களை திறந்து வைத்ததும் அடங்கும். சேலம் மாநகராட்சி சார்பில் ரூ.5 கோடி செலவில் மாநகரில் 12 இடங்களில் பசுமைவெளி பூங்காக்களை அமைத்துள்ளது.

 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயனுள்ள பொழுதுபோக்கு இடமாக இனி இவை மாறக்கூடும். மாநகர மக்களுக்கு அண்ணா பூங்காவையும், திரையரங்குகளையும் விட்டால் வேறு பொழுதுபோக்கு இல்லை என்ற நிலையில், பசுமைவெளி பூங்காக்கள் சற்று ஆறுதல் அளிக்கலாம்.

 

இந்நிலையில் சேலம் அம்மாபேட்டையில் பசுமைவெளி பூங்காவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அங்கே சிறிய அளவிலான பாட்மிண்டன் கோர்ட் (இறகுப்பந்து விளையாட்டு அரங்கம்) இருந்தது. அங்கே இறகுப்பந்து விளையாடி, மைதான பயன்பாட்டை துவக்கி வைக்குமாறு உடன் இருந்த அதிமுகவினரும், சில அதிகாரிகளும் கேட்டுக்கொண்டனர். ஏற்கனவே ஓரிடத்தில் அம்மா ஜிம் திறப்பு விழாவின்போதும் இதேபோல் எடப்பாடி பழனிசாமி இறகுப்பந்து விளையாடி இருக்கிறார். அந்த நிகழ்வை மனதில் வைத்துக்கொண்டு கேட்டார்களோ என்னவோ…

 

எடப்பாடி பழனிசாமியும் குஷியாகிவிட, களத்தில் இறங்கினார். அவருடன் சேலம் எம்.பி.பன்னீர்செல்வமும் இணைந்து கொண்டார். எடப்பாடிக்கு எப்போதும் நெருக்கமாக இருக்கும் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இளங்கோவன், விளையாட்டு அரங்கத்தில் எதிர்த்தரப்பில் களமிறங்கினார்.

 

ராக்கெட் மட்டையால் இறகுப்பந்தை எடுத்து லவ்&ஆல் சர்வீஸ் செய்து விளையாட்டைத் துவக்கினார். எடப்பாடியைத் தாண்டி வந்த இறகுப்பந்தை அருகில் இருந்த எம்.பி. பன்னீர்செல்வம் தட்டி விட்டார். இப்படி சில நிமிடங்கள் எடப்பாடி விளையாடியதைப் பார்த்த பொதுமக்கள், கட்சியினர், அதிகாரிகளும் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

 

இதுபோன்ற சில நடவடிக்கைகளின்போது எடப்பாடி பழனிசாமியும் ஜனரஞ்சக முதல்வர் ஆகி விடுகிறார் என்பதும் மறுப்பதற்கில்லை.

 

– நாடோடி.