Sunday, April 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கோகுல்ராஜ் கொலை வழக்கு: ‘சிறப்பான, தரமான சம்பவங்கள் இனிமேல்தான் வரப்போகுது!’ #Gokulraj #Day17

 

கோகுல்ராஜ் கொலை வழக்கில் அரசுத்தரப்பில்
அடுத்தடுத்து விஞ்ஞானப்பூர்வ தடயங்கள் பற்றி,
சாட்சிகள் வாக்குமூலம் அளிக்க உள்ளனர்.
அதனால் யுவராஜ் தரப்பு மற்றும் அரசுத்தரப்பு
வழக்கறிஞர்களிடையே நீதிமன்றத்தில்
அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கும்
என்பதால் இப்போதே எதிர்பார்ப்புகள்
அதிகரித்துள்ளன.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் (23), கடந்த 2015, ஜூன் 23ம் தேதி சாதி ஆணவப்படுகொலை செய்யப்பட்டார். ஜூன் 24ம் தேதி மாலை, திருச்செங்கோடு கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே, ரயில் தண்டவாளத்தில் தலை வேறு, உடல் வேறாக துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜ் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றினர்.

 

இந்த வழக்கில் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். குமார் என்கிற சிவக்குமார், சதீஸ் என்கிற சதீஸ்குமார், யுவராஜின் தம்பி தங்கதுரை, சங்கர் உள்ளிட்ட 11 குற்றவாளிகளை அப்போதைய திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா கைது செய்தார். கைதான நபர்களிடம் இருந்து செல்போன்கள், மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன.

 

குற்றவாளிகளிடம் இருந்து கைப்பற்றப்படும் பொருள்களை அடையாளப்படுத்த, காவல்துறையினர் ‘கைப்பற்றுதல் மகஜர்’ ஒன்றை தயாரிப்பது வழக்கம். இவை அனைத்திற்கும் அரசுத்தரப்பு நேரடி சாட்சியாக திருச்செங்கோடு கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) மணிவண்ணன் சேர்க்கப்பட்டு உள்ளார்.

 

கோகுல்ராஜ் கொலை வழக்கில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி முதல் அரசுத்தரப்பு சாட்சிகளிடம் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்னிலையில் விசாரணை நடந்து வருகிறது.

கடந்த 10.1.2019ம் தேதி சாட்சியம் அளிக்க அரசுத்தரப்பு சாட்சியான விஏஓ மணிவண்ணன் அழைக்கப்பட்டிருந்தார். அப்போது குற்றவாளி கூண்டில் இருந்த சதீஸ்குமாரை அவர் சரியாக அடையாளம் காட்டவில்லை. பின்னர், மறுநாளைக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. ஜனவரி 11ம் தேதி நடந்த விசாரணையின்போதும் அவர் சதீஸ் என்கிற சதீஸ்குமாரை அடையாளம் காட்டுவதற்கு பதிலாக தவறுதலாக பிரபு என்பவரை அடையாளம் காட்டினார்.

 

கோகுல்ராஜூம், அவருடைய தோழி சுவாதியும் கடைசியாக 23.6.2015ம் தேதியன்று, அதாவது கோகுல்ராஜ் கொல்லப்படுவதற்கு முன்பாக பகல் நேரத்தில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போதுதான் யுவராஜ் மற்றும் கூட்டாளிகள் கோகுல்ராஜை மிரட்டி கடத்திச் சென்றுள்ளனர். அந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன.

 

அந்தக் கோயிலில் இருந்து கைப்பற்றப்பட்ட
சிசிடிவி வீடியோ காட்சிகள்தான்
இந்த வழக்கில் அதிமுக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது.
அதனால் அந்த வீடியோ காட்சிகளைப் பார்த்து,
குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் யார் யார் இருக்கிறார்கள்
என்று அடையாளம் காட்டுமாறு
விஏஓ மணிவண்ணனிடம் அரசுத்தரப்பு
சிறப்பு வழக்கறிஞர் பவானி பா.மோகன் கேட்டார்.
அதற்கு, தனது மூக்குக் கண்ணாடியை
மறந்து வீட்டில் வைத்துவிட்டு வந்ததால்,
அடுத்த முறை சரியாக
அடையாளம் காட்டுகிறேன் என்று கூறினார்.
இதையடுத்து விசாரணை
ஜனவரி 18, 2019ம் தேதிக்கு
ஒத்திவைக்கப்பட்டது.

 

அதன்படி நேற்று (வெள்ளிக்கிழமை, ஜனவரி 18)
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
விஏஓ மணிவண்ணனுக்கு சிசிடிவி
கேமரா காட்சிகள் திரையிட்டுக் காட்டப்பட்டன.
அந்தக் காட்சியில் இடம்பெற்றிருந்த
யுவராஜின் கூட்டாளிகள்
சந்திரசேகர் மற்றும் அவரை பின்தொடர்ந்து
செல்லும் அவருடைய மனைவி ஜோதிமணி,
வேட்டி கட்டியிருக்கும் நபர் சதீஸ்குமார்,
கையை நீட்டிக் காண்பிப்பவர்தான் யுவராஜ்,
அவருக்கு பக்கத்தில் இருப்பவர்தான் அருண்,
பச்சை நிற சட்டையில் இருப்பவர்தான் செல்வராஜ்,
கோயில் கோபுர சுவர் ஓரமாக நிற்பவர்தான் ரஞ்சித்,
கையில் பை வைத்துள்ள நபர்தான் ரகு என்கிற ஸ்ரீதர்,
அவருக்குப் பின்னால் இருப்பவர்தான்
குமார் என்கிற சிவக்குமார் என
அடையாளம் காட்டினார்.

 

இதையடுத்து குற்றவாளி கூண்டில் இருக்கும்
எதிரிகளில் சதீஸ் என்ற சதீஸ்குமாரை
சரியாக அடையாளம் காட்டும்படி
அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞர்
பவானி பா.மோகன், சாட்சியிடம் கூறினார்.
அதற்கு நீதிபதி, ‘அவர்தான் ஏற்கனவே
அடையாளம் காட்டிவிட்டாரே…அதை
பதிவும் செய்துவிட்டோம். இனி தேவையில்லை,’ என்றார்.
ஆனாலும், வழக்கறிஞர் பா.மோகன் மீண்டும்
வலியுறுத்தியதன் பேரில், விஏஓ மணிவண்ணன்
சாட்சி கூண்டில் இருந்தவாறே, செல்வராஜ் அருகில்
இருப்பவர்தான் சதீஸ் என்கிற சதீஸ்குமார்
என்று அடையாளம் காட்டினார்.

அவர் அடையாளம் காட்டிய நபர் யார் என்று
கையை உயர்த்தும்படி நீதிபதி இளவழகன் கூறினார்.
அதற்கு சட்டென்று சங்கர் கையை உயர்த்தி,
தனது பெயரைக் கூறினார்.
இந்தமுறையும் தவறாக அடையாளம் காட்டியதால்,
யுவராஜ் தரப்பில் ஆஜரான
வழக்கறிஞர்கள் ஸ்டீபன், பிரேம்குமார் ஆகியோர்
தவறாக அடையாளம் காட்டியதை குறியீடு செய்யும்படி
நீதிபதியிடம் முறையிட்டனர்.
அவர்களின் கோரிக்கையை
நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

 

இதனால் அரசுத்தரப்பு வழக்கறிஞர் பா.மோகன்
அதிருப்தி அடைந்தாலும், மீண்டும்
சாட்சியைப் பார்த்து குற்றவாளி கூண்டுக்கு
அருகில் சென்று நன்றாக பார்த்து
அடையாளம் காட்டுங்கள் என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி இளவழகன்
அரசுத்தரப்பு வழக்கறிஞரிடம் (சற்றே காட்டமாக),
‘இப்படியெல்லாம் விதண்டாவாதம் செய்யாதீர்கள்…
அவரை பக்கத்தில் போய் அடையாளம்
காட்டும்படி சொல்லிவிட்டோம்.
அவர்தான் இங்கிருந்தே அடையாளம்
தெரிவதாகக் கூறினார்.
தவறாக அடையாளம் காட்டிய பிறகும்
அவரை எதற்கு அருகில் சென்று
அடையாளம் காட்டும்படி கூறுகிறீர்கள்?’ என்றார்.
இதனால் அங்கு சிறிது நேரம்
சலசலப்பு ஏற்பட்டது.

அதன்பிறகும் சாட்சி மணிவண்ணன்,
குற்றவாளி கூண்டு அருகே செல்லாமல்
தயங்கியபடியே சாட்சி கூண்டுக்கு அருகிலேயே நின்றார்.
மீண்டும் குறுக்கிட்ட நீதிபதி,
”ஏன் சார் பயமா? பயமில்லாமல்
குற்றவாளி கூண்டு அருகே போய்
அடையாளம் காட்டுங்கள்.
பயமாக இருந்தால் சொல்லுங்கள்…
உங்களுக்கு துணையாக
நான் வருகிறேன்…”
என்று தைரியம் ஊட்டினார்.

 

அதன்பிறகு குற்றவாளி கூண்டு
அருகே சென்ற விஏஓ மணிவண்ணன்,
செல்வராஜிக்கு வலப்பக்கத்தில் நின்றிருந்த
நபர்தான் சதீஸ் என்கிற சதீஸ்குமார் என்று
மிகச்சரியாக அடையாளம் காட்டினார்.
அப்போது சதீஸ்குமார் இறுக்கமான
முகத்துடன் காணப்பட்டார்.
அதன்பிறகே அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞர்களும்,
சிபிசிஐடி போலீசாரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
அத்துடன் விஏஓ மணிவண்ணன்
சாட்சியம் முடிவுக்கு வந்தது.

 

இதையடுத்து, அடுத்தக்கட்ட சாட்சிகள்
விசாரணையை வேறு எந்த நாளில்
நடத்துவது என்பது குறித்து இருதரப்பு
வழக்கறிஞர்களிடமும் நீதிபதி கருத்து கேட்டார்.
யுவராஜ் தரப்பு வழக்கறிஞர்கள்
அடுத்த மாதத்தில் வைத்துக்கொள்ளலாம் என கூறினர்.
அதற்கு நீதிபதி, ‘இந்த வழக்கை மார்ச் மாதத்திற்குள்
முடிக்க வேண்டும். அதனால் இருதரப்பும்
ஒத்துழைக்க வேண்டும்,’ என்றார்.
பின்னர், வரும் 25.1.2019ம் தேதிக்கு
சாட்சிகள் விசாரணையை ஒத்திவைத்து
நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.

மேலும், பிப்ரவரி 1, 2 மற்றும் 4 ஆகிய தேதிகளிலும்
தொடர்ந்து சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்படும் என்றும்,
தாமதத்தை தவிர்க்க யுவராஜ் உள்ளிட்ட
குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும்
சேலம் மத்திய சிறையில் அடைக்கும்படியும்
ஆலோசனை கூறினார்.

 

இதையடுத்து வரும் 25ம் தேதியன்று,
விஏஓ மணிவண்ணனிடம் யுவராஜ் தரப்பு
மூத்த வழக்கறிஞர் ஜி.கே. என்கிற
கோபாலகிருஷ்ண லட்சுமணராஜூ
குறுக்கு விசாரணை நடத்த உள்ளார்.
ஏராளமான கிரிமினல் வழக்குகளில்
ஆஜராகி பலமுறை
வெற்றி பெற்றுள்ளார், மூத்த வழக்கறிஞர் ஜி.கே.
நாமக்கல் நீதிமன்றத்தில் அவர் யுவராஜ் வழக்கை
எடுத்து நடத்துவதை அறிந்த சிலர்,
அவரிடம் தங்கள் வழக்குகளிலும்
ஆஜராகுமாறு அணுகியுள்ளதாகவும்
தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

அதேபோல், இடதுசாரி சிந்தனையாளரும்,
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து வழக்குகளில்
ஆஜராகி வெற்றிகளை குவித்து வருகிறார்,
மூத்த வழக்கறிஞர் பவானி பா.மோகன்.
இவ்விரு ஆளுமைகளும் நேருக்குநேர் மோதுவதால்,
அனல் பறக்கும் விவாதங்கள் இருக்கும் எனத்தெரிகிறது.
‘பேட்ட’ ரஜினி சொல்வதுபோல்,
‘சிறப்பான தரமான சம்பவங்கள்
இனிமேல்தான் பார்க்கப்போகிறோம்,’
என்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.