Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

காவல்நிலையங்களுக்கு தனி வாட்ஸ்அப் குழு! ‘சிறப்பான பணிகளை பதிவேற்றுங்கள்!!’

 

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையமும்
தங்களுக்கென தனி வாட்ஸ்அப் குழுவை
உடனடியாக உருவாக்க வேண்டும்
என்று டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

 

தமிழக காவல்துறையை புலனாய்வில்
ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையாக
ஒப்பிட்டு பேசப்பட்டு வந்தாலும், அண்மைக்காலமாக
மக்களுடன் நெருங்கிச் செல்ல காவல்துறையில்
பல்வேறு அதிரடி மாற்றங்கள்
புகுத்தப்பட்டு வருகின்றன.

 

ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்களின் வாழ்நிலை,
முக்கிய பிரமுகர்கள், அவர்களின் தொழில்,
முக்கிய தொடர்புகள் குறித்த விவரங்களை
சேகரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும், மக்கள் எளிதில் காவல்துறை
உதவியை நாடும் வகையில்
அந்தந்த சரக காவலர் முதல் உயரதிகாரிகளின்
செல்போன் எண்களை பொது இடங்களில்
வெளியிட உத்தரவிடப்பட்டு உள்ளது.

 

பல மாநகரங்களில் பொதுமக்கள் நேரடியாக
வாட்ஸ்அப் மூலம் புகார்களை பதிவு செய்யவும்
வாட்ஸ்அப் எண்கள் பகிரங்கமாக
வெளியிடப்பட்டு உள்ளன.

இந்நிலையில், சென்னையில் உள்ள காவல்துறை
தலைமையகம் ஒவ்வொரு காவல்நிலைய
அதிகாரிகள் முதல் கடைநிலையில் உள்ள
இரண்டாம் நிலைக்காவலர் வரை நேரடி தொடர்பில்
இருப்பதற்கான வேலைகளை தொடங்கியுள்ளது.
இதற்காக, ஒவ்வொரு காவல்நிலையமும் தங்களுக்கென
தனி வாட்ஸ்அப் குழுவை உடனடியாக
உருவாக்க வேண்டும் என்று
புதன்கிழமையன்று (ஜனவரி 16)
டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

 

அந்தந்த காவல்நிலையத்தின் பெயரிலேயே
வாட்ஸ்அப் குழுவின் பெயர் இருக்க வேண்டும்;
குழுவின் அட்மின் ஆக சம்பந்தப்பட்ட
காவல்நிலையத்தின் ஆய்வாளர்
அல்லது உதவி ஆய்வாளர்களில்
யாராவது ஒருவர் இருக்கலாம்.
அந்தந்த காவல் சரக எல்லைக்குள்
காவல்துறையினர் மேற்கொண்ட
சிறப்பான பணிகளை
உரிய ஒளிப்படங்கள், வீடியோ
மற்றும் சிறிய குறிப்புகளுடன்
உடனுக்குடன் வாட்ஸ்அப் குழுவில்
பதிவேற்றம் செய்யும்படியும்
டிஜிபி அலுவலக உத்தரவில்
தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காவல்நிலையத்தின் பெயர், அட்மின் ஆக
இருப்பவரின் பதவி, பணியாற்றும் காவலர்கள் விவரம்,
வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்ட நாள்
ஆகிய விவரங்களை ஜனவரி 18ம் தேதி
காலை 10 மணிக்குள் டிஜிபி அலுவலகத்திற்கு
மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்
அனைத்து சரக ஐஜி, டிஐஜி, ஆணையர்கள்,
எஸ்பிக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

 

மக்களையும், காவல்துறையினரையும் நெருக்கமாக
கண்காணிப்பதில் தொழில்நுட்பத்தை தமிழக காவல்துறை
பயன்படுத்தி வருவது வரவேற்கத்தக்கது. என்றாலும்,
இன்றும் சாமானியன் கொடுக்கும் புகார்கள் மீது
உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல்
அலைக்கழிக்கப்படுவது தொடர்வதுதான்
ஆகப்பெரிய மக்களின் சோகம்.
இதன்மீதும் டிஜிபி அய்யா கொஞ்சம் மனசு
வைக்கணும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

– பேனாக்காரன்.