ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டுவென்டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்தியாவுக்கு எதிரான ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை, ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே 4-1 கணக்கில் இழந்திருந்தது. இதையடுத்து மூன்று டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
முதலாவது டி-20 போட்டி ராஞ்சியில் இன்று (அக்டோபர் 7) நடந்தது. இரவு 7 மணிக்கு போட்டி துவங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், தோள் பட்டையில் ஏற்பட்ட வலி காரணமாக அவர் விளையாடவில்லை. டேவிட் வார்னர் கேப்டன் பொறுப்பை ஏற்றார். ஸ்மித்துக்கு மாற்று வீரராக மார்கஸ் ஸ்டாய்னிஸ் இடம் பெற்றார். இந்திய அணியில் ரஹானே, அக்சர் படேல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, குல்தீப் யாதவ், ஷிகர் தவான் வாய்ப்பு பெற்றனர்.
வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்கிய ஆஸி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 8 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றினார். அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் 17 ரன்களில் திருப்திபட்டு வெளியேறினார். அந்த அணியின் ஆரோன் பின்ச் மட்டும் அதிகபட்சமாக 42 ரன்களை குவித்து, அரை சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.
ஹென்ரிக்ஸ் (8), டிராவிஸ் ஹெட் (9), டிம் பெய்னே (17), நாதன் கூல்டர்&நைல் (1) ஆகியோரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். டேனியல் கிறிஸ்டியன் 9 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் ஆவுட் ஆனார். 18.4 ஓவர்களில் ஆஸி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டது.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ், பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்திய அணிக்கு 6 ஓவர்களில் 48 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் ஷர்மா 11 ரன்களில் அவுட் ஆனார். கேப்டன் விராட் கோஹ்லி 22 ரன்களும், ஷிகர் தவான் 15 ரன்களும் எடுத்து வெற்றிக்கு அடித்தளமிட்டனர். 5.3 ஓவர்களில் இந்திய அணி 49 ரன்கள் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
இதன்மூலம் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டுவென்டி-20 போட்டி, வரும் 10ம் தேதி கவுகாத்தியில் நடக்கிறது.