Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

விவசாயிகளின் கடன் தள்ளுபடி: ஜனாதிபதி

பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கடைசி முழு ஆண்டுக்கான பட்ஜெட்டை வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்ய உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் துவக்க நாளான இன்று (ஜனவரி 29, 2018), நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

முன்னதாக, நாடாளுமன்றத்திற்கு வந்த அவரை துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் வரவேற்றனர்.

ஏற்கனவே, கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதியன்று இரவு பணமதிப்பிழப்பு செய்தபோது பிரதமர் நரேந்திரமோடி, புதிய இந்தியா பிறந்துவிட்டதாக கூறினார். அதன் பின்னர், நள்ளிரவில் ஜிஎஸ்டி அமலாக்கம் குறித்த அறிவிப்பின்போதும் புதிய இந்தியா பிறந்ததாகக் கூறினார். அடிக்கடி அவருடைய உரையில் புதிய இந்தியா பற்றி குறிப்பிடுவது வழக்கமானதாகிவிட்டது.

இன்று உரையாற்றிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் 2018ம் ஆண்டு புதிய இந்தியாவாக இருக்கும் என்று குறிப்பிட்டார். அவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நிகழ்த்தும் முதல் உரை இது. ஜனாதிபதியின் அவருடைய உரையிலிருந்து:

புதிய இந்தியாவை உருவாக்குவதில் 2018 முக்கிய பங்கு வகிக்கும். சாமானியர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் அரசு தான் நல்ல அரசின் அடையாளம். சமூக நீதியின்றி நாடு வளர்ச்சி அடையாது. 3 கோடியே 30 லட்சம் காஸ் இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விறகு அடுப்பில் சமைத்த பெண்களின் கஷ்டங்கள் துடைக்கப்பட்டுள்ளது.

சமூக நீதி, பொருளாதார ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் அரசு செயல்படுகிறது. பெண்களின் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. தொழில் துவங்கும் வழிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் துன்பங்களை இந்த அரசு கவனத்தில் கொண்டுள்ளது. விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவும் இந்த அரசு உத்தேசித்துள்ளது.

முத்தலாக் மசோதா:

இஸ்லாமிய பெண்களின் வாழ்க்கையை முத்தலாக் மசோதா மேம்படுத்தும். 2019 ம் ஆண்டில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை கொண்டாடும் வேளையில் நாட்டினை முற்றிலும் தூய்மையானதாக மாற்ற வேண்டியது நமது கடமை. 2022ம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மூத்த குடிமக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது.

மின்சாரம் எட்டிப்பார்க்காத கிராமங்களுக்கும் மின்சார வசதி அளித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான விவசாயிகள் பயனடைந்துள்ளனர். ஆதி திராவிட மக்களுக்கு அவர்களின் வாழ்விடங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. டிஜிட்டல் சேவை மிக குறைந்த கட்டணத்தில் மத்திய அரசு வழங்கி வருவதால், புறநகர் பகுதிகளையும் டிஜிட்டல் சேவை சென்றடைந்துள்ளது.

இஸ்லாமிய பெண்கள் யார் துணையும் இன்றி ஹஜ் பயணம் மேற்கொள்ளும் வசதியையும் செய்து தந்துள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களும் பயன்பெறும் வகையில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய இந்தியாவை உருவாக்குவதில் அனைவரும் ஒன்றுபட வேண்டும். முத்தலாக் மசோதா இயக்க சட்டம் இயற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. தற்போது 82 சதவீதம் கிராமங்களுக்கு சாலை வசதி அமைத்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. பழமையான சென்னை நகருக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.