Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

உடல் பருமனான பெண்கள் பேரல் போன்றவர்களா? தனியார் ஜிம் மீது பாய்ச்சல்

இலங்கையில் உள்ள ஓஸ்மோ என்ற தனியார் உடற்பயிற்சி நிறுவனம் (ஜிம்), உடல் பருமனான பெண்களை பீப்பாயுடன் (பேரல்) ஒப்பிட்டு வைத்திருந்த விளம்பரத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில் அந்நிறுவனத்தை இணையவாசிகள் தொடர்ந்து புரட்டி எடுத்து வருகின்றனர்.

உடல் பருமன் இன்று இளைய தலைமுறையினரை வாட்டி எடுக்கும் பிரச்சனையாக உள்ளது. ஆசிய நாடுகளில், குறிப்பாக இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் உடல் பருமன் சமூக பிரச்னையாகவும் உருவெடுத்துள்ளது.

மாறிவரும் உணவு பழக்கம், முறையற்ற வேலை நேரம் உள்ளிட்ட வாழ்வியல் முறைகளால் உடல் பருமன் ஏற்படுகிறது. இதனால், ஆண், பெண் என இருபாலினத்தவரும் பாதிக்கப்பட்டாலும், பெண்கள் அதனால் பலராலும் பொதுவெளியில் அவமானபடுத்தப்படுகின்றனர்.

உடற்பயிற்சி கூடங்களில் விளம்பரம் கூட பெண்களை மையப்படுத்திதான் உள்ளது. பெண்கள் இந்த வடிவத்திலும், அளவிலும் இருக்க வேண்டும் என்றே சமூகம் எதிர்பார்க்கின்றது.

இலங்கையில் உள்ள ஓஸ்மோ என்ற ஜிம், பெண்களை பேரலுடன் ஒப்பிட்டு விளம்பரம் வெளியிட்டுள்ளது, பலரையும் கொதிப்படைய வைத்துள்ளது. அந்த விளம்பரத்தில், ”இது பெண்களுக்கான வடிவம் இல்லை”, என குறிப்பிடப்பட்டிருந்தது.

பாலியல் ரீதியாக இத்தகைய விளம்பரத்தை வெளியிட்டதற்கு, சமூக வலைத்தளங்களில் இணையதளவாசிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். பலரும், ஓஸ்மோ ஜிம்மை புறக்கணிப்போம் என பதிவிட்டு வருகின்றனர்.

இந்த விளம்பர பலகையை நீக்க வேண்டும் என, தான் கொழும்பு ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளதாக துணை பொருளாதார துறை அமைச்சர் ஹர்ஷா டி சில்வா தெரிவித்தார்.

அதேபகுதியில், பெண்ணுரிமை அமைப்புகள் அந்த விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்ற பாரதியாரின் பாடல் வரிகளை அச்சிட்டு, விளம்பர பேனரை ஒட்டியது. ஆனால், ஒரே நாளில் அந்த பேனரை மர்ம நபர்கள் அகற்றி விட்டனர்.

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் விளம்பர பதாகை வைத்திருந்த ஓஸ்மோ நிறுவனம், திடீரென்று அந்த பதாகையை அகற்றியது. மேலும், பெண்களை அவமானப்படுத்தும் நோக்கில் அத்தகைய விளம்பர பலகையை அமைக்கவில்லை என்றும் ஜிம் நிர்வாகம் தெரிவித்தது.