Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

விவசாயிகள் என்ன பயங்கரவாதிகளா?; இபிஎஸ் அரசின் தலைகீழ் விகிதங்கள்!!

 

எட்டுவழிச்சாலைக்கு எதிராக
கிளர்ந்தெழும் விவசாயிகளிடம்
திட்டத்தின் நோக்கம் குறித்து
வெளிப்படையாக பேச மறுக்கும் அரசு,
வெடிகுண்டு தடுப்புப்பிரிவு,
கியூ பிரிவுகள் மூலம் உளவியல் ரீதியில்
ஒடுக்குவதன் மூலம், அவர்களை
பயங்கரவாதிகளாக சித்தரிக்க
முயல்கிறதோ என்ற அய்யம்
எழுந்துள்ளது.

சேலம் முதல் சென்னை வரையில் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் எட்டுவழிச்சாலை அமைப்பதற்கான வேலைகளில் மத்திய, மாநில அரசுகள் இறங்கியுள்ளன. இத்திட்டத்திற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் கையகப்படுத்தப்பட உள்ள தனியார் நிலங்களில் பெரும் பகுதி இருபோகம் விளைச்சலைத் தரக்கூடிய விளைநிலங்கள் ஆகும்.

 

இதனால் ஆரம்பத்தில் இருந்தே எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கு மேற்சொன்ன ஐந்து மாவட்டங்களிலும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுவும் ஏதோ விவசாயிகளுக்கு மட்டுமான பிரச்னைதான் எனக்கருதிவிட்ட மகாஜனங்களோ, வழக்கம்போல் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். ஆனால், மேடைதோறும் முதல்வர் எடப்பாடி ப-ழனிசாமி, இத்திட்டத்தை 97 சதவீதம் பேர் ஆதரிப்பதாகவும், 3 சதவீதத்திற்கும் குறைவானவர்களே எதிர்த்து வருவதாகவும் பேசி வந்தார்.

 

இதையடுத்து, சேலத்தில் இரண்டாம் கட்டமாக விவசாயிகள் இப்போராட்டத்தை மேலும் வலுப்படுத்தினர். எட்டுவழிச்சாலைக்கு நிலம் கொடுக்க மறுத்து கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் ஆட்சேபனை மனுக்களை அளித்தனர். அதன் அடிப்படையில் பார்த்தாலும் இத்திட்டத்தை 77 முதல் 80 சதவீதம் பேர் எதிர்ப்பது புலனாகிறது. மூன்றில் இரண்டு பங்கினருக்கு மேலும் எதிர்க்கும் ஒரு திட்டத்தை செயல்படுத்தியே தீர்வது என்பதில் நடுவண் அரசைக் காட்டிலும் தமிழக அரசு வேகமாக இருக்கிறது.

கடந்த டிசம்பர் மாதம் ஆட்சேபனை மனு அளித்தவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்த, நில எடுப்பு வருவாய் அலுவலர் குழந்தைவேலு தலைமையிலான அதிகாரிகள் செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 22, 2019) அயோத்தியாப்பட்டணத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். சின்னகவுண்டாபுரத்தைச் சேர்ந்த ஆட்சேபனை மனுக்கள் அளித்திருந்த 36 பேருக்கு அழைப்புக்கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது.

 

சின்னகவுண்டாபுரம் விவசாயிகளுடன் குப்பனூர், மின்னாம்பள்ளி, குள்ளம்பட்டி, ராமலிங்கபுரம், ஏரிக்காடு, பூலாவரி, கூமாங்காடு, சித்தனேரி, நிலவாரப்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகளும் விசாரணைக்கு வந்திருந்தனர். ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழக்கூடும் என காவல்துறை தரப்பு கருதியதோ என்னவோ, உதவி ஆணையர் கணேசன் தலைமையில் ஆய்வாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரோஜா உள்பட 25க்கும் மேற்பட்ட காவல்துறையினர் முன்கூட்டியே நிகழ்விடத்தில் பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட்டு இருந்தனர்.

விவசாயிகள் திரண்டு வந்ததால் அவர்களை விசாரணை அலுவலகத்திற்கு 100 மீட்டர் தொலைவிலேயே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். ‘தனித்தனி நபராக மட்டுமே அலுவலகத்திற்குள் செல்ல வேண்டும். ஒட்டுமொத்தமாக செல்ல அனுமதி இல்லை,’ என்றது காவல்துறை. இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

 

‘இந்த திட்டத்திற்கு நிலம் கொடுக்க எங்களுக்கு விருப்பம் இல்லை. இதை விசாரணை அதிகாரியிடம் சொல்லப்போகிறோம். அதற்கு அவர் தனித்தனியாக பதில் கூறுவதைக் காட்டிலும் ஒட்டுமொத்தமாக எங்களிடம் ஒரே நேரத்தில் சொல்வதில் என்ன கஷ்டம் இருக்கப் போகிறது?,’ என விவசாயிகள் தரப்பில் குப்பனூர் நாராயணன் கூறினார்.

 

விவசாயிகள் கவிதா, சிவகாமி ஆகியோர், ‘காவல்துறையினர் தலையிடுவதால்தான் இந்தப் பிரச்னை பெரிதாகிறது. காவல்துறையினரால்தான் ஒரு பெண், சமூக ஊடகங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டார். அதுகுறித்து புகார் அளித்து ஐந்தாறு மாதங்கள் ஆகியும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது எங்களை அடக்க வந்துவிட்டீர்களா?,’ என்று கேள்வி எழுப்பினர்.

காவல்துறையினருடன் வருவாய்த்துறை பெண் அதிகாரி ஒருவரும் வந்து விவசாயிகளிடம் பேச்சு நடத்தினார். அதற்கும் அவர்கள், அனைவரையும் ஒரே நேரத்தில் விசாரணை அரங்கத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்றனர். சுமூக உடன்பாடு ஏற்படாததால் விவசாயிகள், ஆட்சேபனை மனுக்கள் மீதான விசாரணையை புறக்கணிப்பதாகக் கூறினர்.

இதுகுறித்து விவசாயிகள் மேலும் கூறுகையில்,
”எட்டுவழிச்சாலை தொடர்பாக தகவல் அறியும்
உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்டால்,
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில்
உள்ளதால், தகவல் தெரிவிக்க முடியாது
என்று அதிகாரிகள் பதில் அளிக்கின்றனர்.
அப்படியெனில், வழக்கு முடிவடையாதபோது
விவசாயிகளின் ஆட்சேபனை
மனுக்கள் மீது மட்டும் எப்படி
அதிகாரிகள் விசாரணை நடத்த முடியும்?
இந்த திட்டத்திற்கு எதிராக ஏற்கனவே
ஆட்சேபனை மனு அளித்துள்ளபோது,
தொடர்ந்து திட்டத்தை செயல்படுத்துவதற்கான
பணிகளை மேற்கொண்டு
வருவது கண்டிக்கத்தக்கது.
எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்காக
நாங்கள் ஒருபோதும் நிலம்
கொடுக்க முடியாது,” என்றனர்.

 

இதன்பிறகு அவர்கள் விசாரணைக் கூட்டத்தை புறக்கணித்து அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். கால் ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள், உழவுப்பணிகளில் ஈடுபட விரும்பாத நான்கைந்து பேர் மட்டுமே விசாரணைக்கு ஆஜராயினர். அவர்களும் ஏற்கனவே அறிவித்ததை விட கூடுதல் இழப்பீடு தருவதாக இருந்தால் மட்டுமே நிலத்தை வழங்குவோம் என்று எழுதிக் கொடுத்தனர்.

 

எட்டுவழிச்சாலைத் திட்ட நில எடுப்பு வருவாய் அலுவலர் குழந்தைவேலிடம் கேட்டபோது, ”இந்த திட்டத்தால் யார் யாருக்கு எவ்வளவு நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது, எந்தெந்த இடத்தில் மேம்பாலம், சோதனைச்சாவடிகள் வருகின்றன, கையகப்படுத்தப்படும் நிலத்தில் அருகில் உள்ளவர்களின் நிலம் உள்ளிட்ட விவரங்களைக் கூறுகிறோம். அதுகுறித்த வரைபடங்களை வைத்து விளக்கம் அளிக்கிறோம்,” என்றார்.

 

முன்னெப்போதும் இல்லாத நடைமுறையாக, மாநகர வெடிகுண்டு தடுப்புப்பிரிவு காவல்துறையினரும் இந்த நிகழ்வின்போது வரவழைக்கப்பட்டு இருந்தனர். திங்கள் கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம் மற்றும் முதல்வர், ஆளுநர் உள்ளிட்ட முக்கிய விஐபிக்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் மட்டும்தான் வெடிகுண்டு தடுப்புப்பிரிவினரும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவது நடைமுறை.

 

ஆனால், வெகுசாதாரணமாக விவசாயிகள் கலந்து கொள்ள வந்த விசாரணைக் கூட்டத்திற்கும், வெடிகுண்டு தடுப்புப்பிரிவினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இவர்கள் மட்டுமின்றி, கியூ பிரிவு ஆய்வாளர் கோகிலா மற்றும் அப்பிரிவு காவலர்கள் சிலரும் விவசாயிகளின் கருத்துகளை செல்போனில் ரகசியமாக பதிவு செய்தனர். வழக்கமாக அந்தந்த எல்லைக்குட்பட்ட நுண்ணறிவுப்பிரிவு காவலர்கள், எஸ்பிசிஐடி காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபடுவது நடைமுறைதான்.

 

கியூ பிரிவு போன்ற ரகசிய உளவுப்பிரிவு முகமைகள், ஆர்கனைஸ்டு கிரிமினல்கள், நக்சல்கள், மாவோக்களை மட்டுமே கண்காணிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வரும். அண்மைக் காலங்களில், நிராயுதபாணிகளான விவசாயிகளைக் கூட பயங்கரவாதிகள்போல தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, ”எல்லாமே முன்னெச்சரிக்கை நடவடிக்கைதானே சார்…” என சிரித்துக்கொண்டே கூறினர். உளவியல் ரீதியாக அவர்களை ஒடுக்க முயல்கின்றனர்.

 

ஆரம்பத்தில் நிலம் அளக்கும் பணிகளின்போதே ஆச்சாங்குட்டப்பட்டி, வெள்ளியம்பாளையம் கிராமங்களில் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போதே விளை நிலத்திற்குள் பூட்ஸ் கால்களுடன் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினரை இறக்கிவிட்டு நிலம் அளக்கும் பணிகள் நடந்தன. இதெல்லாமே ஏதுமறியாத விவசாயிகளை உளவியல் ரீதியாக அச்சுறுத்த மட்டுமே பயன்படுமேயன்றி, ஒத்திசைவு பெறுவதற்கான வழிகள் ஆகாது.

 

அரசு அறிவித்த இழப்பீடு
போதுமானதாக இல்லை?,
இத்திட்டம் யாருக்காக?,
எட்டுவழிச்சாலைக்கான உடனடி
தேவை என்ன? விவசாயத்தை அழித்து
பசுமைவழிச்சாலை தேவையா?
என்பன உள்ளிட்ட கேள்விகள் இன்னும்
அவர்களிடம் அப்படியேதான் இருக்கின்றன.
விவசாயிகளுக்கான இழப்பீட்டை பற்றி
மட்டுமே பேசும் மத்திய, மாநில அரசுகள்,
விவசாயக்கூலிகளைப் பற்றி கொஞ்சமும்
சிந்தித்ததாக தெரியவில்லை.

 

காலங்காலமாக களை பறித்தல்,
நாற்று நடவு, மரமேறுதல் என
விவசாய நில உடைமையாளர்களை மட்டுமே
வாழ்வாதாரத்திற்காக நம்பி இருந்த
கூலிகளுக்கு என்ன இழப்பீட்டைக்
கொடுத்து ஈடுகட்டப்போகிறது
எடப்பாடி பழனிசாமி அரசு?
என்பதும் ஆகப்பெரிய
கேள்விகளுள் ஒன்றுதான்.

 

– பேனாக்காரன்.