Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

அல்லி மலர்ந்தது நிலவு வந்ததாலா? அவள் வந்ததாலா?

‘இலக்கியம் பேசுவோம்’
பகுதியில் இன்று, மற்றுமொரு
குறுந்தொகை பாடலைப் பற்றி
பார்க்கலாம். ஒரு கவிஞன்
என்பவன், எப்போதும்
சொற்களால் சரம் தொடுப்பவன்.
அவன் யாவற்றையும்
அகக்கண்களால் காட்சி
மொழியாகப் பார்த்து, ரசித்து,
முழுமையாக உள்வாங்கிக்
கொண்டவன். அதன்பிறகே,
கவிஞனிடம் இருந்து சொற்கள்
அருவியாக வந்து விழுகின்றன.
கவிஞனின் சொற்கள் என்பது
சூழலுக்கு ஏற்ப, கணைகளாகவும்
சீறும்; பூமாலையாகவும்
வந்து விழும்.

நாம் முன்பே ஒரு தொடரில் குறிப்பிட்டதுபோல், சங்க இலக்கியங்களில் பெண்ணை… பெண்களின் முகத்தை, கூந்தலை, கொங்கைகளை பாடாத புலவர்களே இல்லை. அப்படி பாடாதவன் புலவனே இல்லை. சங்ககாலம் தொட்டே பெண்ணை மலரோடும், மதியோடும் ஒப்புநோக்கி வந்திருக்கிறார்கள். இதில், இப்போதுள்ள ‘பொயட்டு’களும் விதிவிலக்கு அல்ல.

 

புகழேந்தி புலவர், குறுந்தொகையின் கலித்தொடர் காண்டத்தில்,

 

”கொங்கை முகத்தணையக் கூட்டிக் கொடுங்கையால்
அங்கணைக்க வாய்நெகிழ்ந்த ஆம்பற்பூ – கொங்கவிழ்தேன்
வார்க்கின்ற கூந்தன் முகத்தை மதியென்று
பார்க்கின்ற தென்னலாம் பார்” (189)

 

எனப் பாடுகிறார்.
நளன், தன் ஏந்திழையாளான
தமயந்திக்குச் சொல்வது
போன்ற சூழல்.
இப்போது நாம் சொல்வதை,
அப்படியே காட்சிமொழியாக
கற்பனையில் விரித்துப் பாருங்கள்.
மேலே சொல்லப்பட்ட பாடலின்
பொருள் விளங்கும்.

 

இயற்கையின் உச்சபட்ச
கற்பனையைக் கொண்டு
சித்திரம்போல தீட்டப்பட்ட
பேரழகு கொண்ட பெண் ஒருத்தி;
வனத்தில் உள்ள ஒரு குளத்தில்,
ஆடைகளைத் துறந்து நீராடிக்
கொண்டிருக்கிறாள். அந்தக் குளத்தில்
அல்லி மலர்கள், இன்னும் மொட்டவிழாமல் இருப்பதைப் பார்க்கிறாள்.
அவற்றை அப்படியே தன் பருத்த
முலைகளின் முகங்களின்
மேல் படும்படி, கைகளால் வாரி
அணைத்துக் கொள்கிறாள்.

 

மணம் பரப்புகின்ற…
தேனை வார்க்கின்ற பூக்களை
சூடிக்கொண்டிருக்கின்ற கூந்தலை
உடைய அந்தப் பேரழகியின்
முகத்தை அல்லி மலர்கள்
பார்க்க நேரிடுகின்றது.
மீண்டும் ஒருமுறை அந்தக்
காட்சியை நினைவில் கொள்ளுங்கள்.
அல்லி பூக்களை,
அவள் தன் முலைகளின்
முகங்களில் படும்படி அணைத்துப்
பிடித்திருக்கிறாள். அந்தப்
பெண்ணின் முகம், நிலவைப்
போன்று காட்சி அளித்ததாம்.
நிலவைப் பார்த்ததும் அல்லி மலர்கள் மொட்டவிழ்த்தன என்கிறான்
புகழேந்தி புலவன்.

 

சூரியன் வந்தால் தாமரை மலர்வது இயல்புதானே? நான் அரசியல் பேசவில்லை. பிரபஞ்சத்தில் உள்ள சூரியக்கோளைத்தான் சொன்னேன். சூரியன், தாமரை என்றதும் நமக்கும் காவிச்சாயம் பூசிவிடப் போகிறார்கள். அப்புறம் ஒரு தரப்பு, ”தமிழ்நாட்டில், தாமரை ‘டேஷ்’-ல் கூட மலராது” என்று கதறும். இன்னொரு தரப்போ, ‘ஆன்டி இண்டியன்’ பட்டம் கட்டும். சூரியன் வந்தால் தாமரை எப்படி மலர்கிறதோ, சந்திரன் வந்தால் அல்லி மலர்வதும் அவற்றுக்கான இயற்கையான கூட்டணி.

 

பொய்கையில் நீராட வந்தவள்,
தன் கொங்கைகளில் படும்படி
அல்லி பூக்களை வாரி அணைத்துப்
பிடித்ததால்தான் அவை மலர்ந்தன.
அந்த ஒரு பொருளில் மட்டும்
கொள்ளாமல், அவளின் முகமாகிய
நிலவையும் பார்த்துதான்
அல்லி பூக்கள் இதழ்களை
விரித்தன என்கிறான்
புகழேந்தி புலவன்.

 

புகழேந்தி மட்டுமா
பெண்ணின் முகத்தை நிலவுடன்
ஒப்பிடுகிறான்? வள்ளுவன்,
பெண்ணின் முகத்தை இன்னும்
ஒரு படி மேலே சென்று
உவமைப்படுத்துகின்றான்.
எப்படியெனில், விண்மீன்கள்
எல்லாம் வானில் இருக்கும்
நிலவையும், பூமியில் இருக்கும்
பெண்ணையும் பார்த்துவிட்டு,
இருவரில் எது நிலவு என்று
அடையாளம் காண முடியாமல்
கலங்கித் தவிக்கின்றனவாம்.
இப்போது வரைக்கும்
அப்படித்தானே?

 

திரைப்படம்போல் நேரடியாக
காட்சிமொழியாக காட்டும்போது
பார்வையாளனின் சிந்தனை
ஒரு குறிப்பிட்ட சட்டகத்திற்குள்
மட்டுப்படுத்தப்பட்டு விடுகிறது.
அதுவே, சொற்களால் பாமாலைச்
சூட்டும்போது, கேட்பவன் தன்
கற்பனையை எல்லையற்று
நீட்டித்துக் கொள்ள முடிகிறது.
குறுந்தொகையில்,
புகழேந்தி புலவன் செய்திருக்கும்
மாயாஜாலமும் அதுதான்.

 

பேசுவோம்.

 

– செங்கழுநீர்