Sunday, October 6மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

துணை முதல்வரானார் ஓபிஎஸ்; செம்மலைக்கு இடமில்லை!

அதிமுகவில் இரு அணிகளும் இணைந்ததை அடுத்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அவருடைய அணியைச் சேர்ந்த ‘மாஃபாய்’ க.பாண்டியராஜனுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. செம்மலைக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்தார். அதையடுத்து, நிதி அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார். அதிமுகவுக்குள் சசிகலா குடும்பத்தினரின் தலையீடு காரணமாக அக்கட்சி பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஓர் அணி என இரண்டு அணிகளாக உடைந்தன.

இதற்கிடையே, டிடிவி தினகரன் சில எம்எல்ஏக்ளை வளைத்துப் போட்டுக்கொண்டு தனி அணியாக செயல்பட்டார். அவருடைய குடைச்சல் நாளுக்குநாள் அதிகரித்ததை அடுத்து, ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள் இணைவது குறித்த பேச்சுவார்த்தை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.

சசிகலா மற்றும் தினகரை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்க வேண்டும், மாஃபா க.பாண்டியராஜன், செம்மலை ஆகியோருக்கு அமைச்சர் பதவி, ஓ.பன்னீர்செல்வத்திற்கு மீண்டும் முதல்வர் பதவி அல்லது துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று மூன்று முக்கிய நிபந்தனைகள் ஓபிஎஸ் அணி தரப்பில் முன்வைக்கப்பட்டன.
இருதரப்பிலும் பேச்சுவார்த்தைகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்து வந்தன. இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள் இன்று மாலை ஒன்றாக இணைந்தன.

செம்மலை?: இதையடுத்து அமைச்சரவையிலும் உடனடியாக மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி ஓ.பன்னீர்செல்வத்திற்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. அத்துடன், அவர் முன்பு வகித்து வந்த நிதித்துறையுடன் கூடுதலாக வீட்டுவசதித்துறைகளும் ஒதுக்கப்பட்டன. மாஃபா க.பாண்டியராஜனுக்கு மீண்டும் பள்ளிக்கல்வித்துறை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு தொல்லியல் துறையும், தமிழ் வளர்ச்சித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆரம்பம் முதலே செம்மலைக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் தரப்பில் கூறப்பட்டு வந்த போதிலும் அவருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இதையடுத்து, ஓபிஎஸ் துணை முதல்வராகவும், க.பாண்டியராஜன் அமைச்சராகவும் இன்று மாலை (21/8/17) 4.45 மணியளவில் ஆளுநர் (பொ) வித்யாசாகர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். இதன்மூலம் தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை முதல்வருடன் சேர்த்து 33 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வர் பொறுப்பேற்றதில் இருந்து இன்று நடந்த அமைச்சரவை மாற்றத்துடன் சேர்த்து இதுவரை ஐந்து முறை அமைச்சரவை மாற்றம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமைச்சரவை கூட்டம்: இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று மாலை 6 மணியளவில் புதிய அமைச்சரவை கூட்டம் அவசரமாக கூடுகிறது.