Friday, June 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

விடுதலை புலிகள் பெயரில் கோடிக்கணக்கில் வசூல்!; சீமானின் முகத்திரையை கிழித்த வைகோ!!

விடுதலைப்புலிகளின் பிரதிநிதி என்று கூறி உலக நாடுகளிடம் கோடிக்கணக்கில் வசூலிப்பதாகவும், அவர் பிரபாகரனுடன் இருப்பதுபோல் கிராஃபிக்ஸில் புகைப்படம் உருவாக்கிக் கொண்டதாகவும் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் குறித்து மதிமுக தலைவர் வைகோ இன்று (ஏப்ரல் 4, 2018) கடுமையாக விமர்சித்துள்ளார்.

சீமான் தலைமையிலான நாம் தமிழர் இயக்கம், மதிமுக தலைவர் வைகோவை ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து கேலிச்சித்திரங்களை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக வைகோவை தெலுங்கு நாயக்கர் என்று சாதி பெயரைச் சொல்லி சீமான் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், நியூட்ரினோ திட்டத்தைக் கண்டித்து நடைப்பயணம் மேற்கொண்டுள்ள வைகோ, பயணத்தின் இடையே இன்று (ஏப்ரல் 4, 2018) ஊடகத்தினரைச் சந்தித்தார். அப்போது சீமான் கட்சியினர் வைகோவை விமர்சித்து வருவது குறித்து அவரிடம் வினா எழுப்பப்பட்டது. அவர் கூறியது:

நானும் ஆறேழு ஆண்டுகளாக பொறுமையோடு இருந்து வருகிறேன். என்னைத் தமிழன் இல்லை என்றும், தெலுங்கன் என்றும் சீமான் கீழ்த்தரமாக பேசி வருகிறார். ஈரோடு ராமசாமி நாயக்க பயல் என்றும், அண்ணாத்துரைனு ஒரு முட்டாள் இந்த நாட்டைக் கெடுத்துப்புட்டான் என்றும் பேசி வருகிறார். பெரியார், அண்ணாவை ஏசினாலும் சகித்துக்கொண்டு இரு ந்தேன்.

சினிமா துறையில் உள்ள சிலர், பெரியாரை அட்டாக் பண்றது அவரோட நோக்கம் இல்லை. அதன்மூலமாக உங்களை அட்டாக் செய்கிறார். பெரியாரை காலி பண்ணிட்டால், அதன்மூலமாக தெலுங்கர்களை காலி பண்ணிடலாம் என்பதுதான் அவரோட நோக்கம் என்றனர்.

இன்று நீங்கள் கேட்டதால் சொல்கிறேன். நான் லேசா கண் அசைத்தால் போதும். உயிரைக் கொடுக்க ஒரு லட்சம் பேர் இருக்காங்க. என்ன வேணும்னாலும் பண்ணுவாங்க. ஆனால் நான் வன்முறைக்குப் போக மாட்டேன்.

உலக நாடுகள் எல்லாவற்றிலும் விடுதலைப்புலிகளின் பிரதிநிதி என்று சொல்லி கோடிக்கணக்கில் வசூல் பண்ணுகிறார் என்று அந்த அமைப்பில் இருக்கும் பலருக்கும் தெரிந்ததால், நல்லவர்கள் பலர் அந்த அமைப்பை விட்டு வெளியே வ ந்துவிட்டனர்.

நான் இவ்வளவு நாளும் இதைப்பற்றி வாயைத் திறக்கவில்லை. நான் பிரபாகரனோடு வேட்டைக்குப் போனேன். ஆமை கறி சாப்பிட்டேன் என்று பொய் சொல்கிறார் சீமான். அந்தப் பையன்களுக்கு ஒண்ணும் தெரியாது. நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு கூப்பாடு போட்டால் நம்பி விடுகிறார்கள்.

விடுதலைப் புலிகளின் சின்னத்தை… பிரபாகரன் உயிருடன் இல்லை என்று கருதிக்கொண்டு… உண்மை என்னவென்று அவருக்குத் தெரியாது.

புலிகளுடைய சின்னத்தையே தனது கொடியாக்கி, பிரபாகரனோடு தான் பல நாள் இருந்ததாகவும், வேட்டைக்குப் போனதாகவும், ஆமை கறி தின்னதாகவும் கோயபல்ஸ்கூட சொல்ல முடியாத பொய்யைச் சொன்னார்.

பிரபாகரன் தன்னைப் பார்க்க சீமானுக்கு மொத்தம் 8 நிமிடம்தான் அனுமதித்தார். புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. பிரபாகரனுடன் இருந்ததுபோல் கிராஃபிக்ஸில் படம் உருவாக்கிக் கொண்டனர்.

புலிகள் சீருடை அணிந்து உங்களுடன் ஃபோட்டோ எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டபோது, அதற்கு உங்களுக்கு அனுமதி கிடையாது என்று கூறிவிட்டனர்.

நான் புலிகள் சீருடையில் அந்தக் காட்டில் சென்று அவர்களுடன் ஒரு மாதம் இருந்தவன். உண்மையில், பிரபாகரனிடம் ஆயுதப் பயிற்சி பெற்றவன். மயிரிழையில் நான் உயிர் பிழைத்து வந்தவன்.

அண்ணன் வை.கோபால்சாமியின் தியாகத்தை நினைக்கும்போது நான் நூறு முறை இறக்கலாம் என்று கலைஞருக்கு எழுதிய நான்கு பக்கக் கடிதத்தில் பிரபாகரன் தன் கையெழுத்திட்டு எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தை 27 வருஷம் கழித்து, திருச்சி மாநாட்டில் வெளியிட்டேன். நான் விளம்பரப் படுத்திக் கொள்வதில்லை.

அது மட்டுமல்ல. அம்பலப்பர் மலையில் சென்று ஒரு 50 பேரை நிறுத்தி வைத்துக்கொண்டு, நாங்கள் போராட்டம் நடத்துகிறோம் என்கிறார். நான் புலி, வில், கயல் கொடி பிடித்துக்கொண்டு சென்றால், மறுநாள் அதே படத்தை கொஞ்சம் கலர் மாற்றி, முகநூலில் போட்டுக்கொண்டார்.

இவ்வளவு அக்கிரமங்களைச் செய்துவிட்டு, என்னைப் பற்றி மீம்ஸ் போடுவதில் கணக்கே கிடையாது. ஸ்டெர்லைட் பற்றிச்சொல்லி என்னை களங்கப்படுத்தி ஒரு மீம்ஸ் போட்டிருந்தனர். கடைசியாக இப்போது கொஞ்ச நாளாக என்னைப் பற்றி பதிவிடும் மீம்ஸ்கள் என்னை ரொம்பவே டேமேஜ் செய்யும் விதமாக இருக்கிறது.

‘ஸ்டெர்லைட் டீல் முடித்துவிட்டான் நாயக்க பய… அடுத்து நியூட்ரினோ டீலுக்கு கிளம்பிட்டான்’ என்று கடைசியாக மீம்ஸ் போட்டிருந்தனர். அதில், சீமான் தம்பி ஆறுமுகம் என்று குறிப்பிட்டிருந்தனர்.

இவ்வளவும் நான் சகித்துக் கொண்டேன். வாழ்நாள் பூராவும் பழிகளைச் சுமந்தே பழக்கப்பட்டவன். நான் மத யானைகளை மட்டுமே எதிர்த்துப் போராடுகிறேனே தவிர குள்ள நரிகளை எதிர்த்துப் போராடுவதில்லை.

இவ்வாறு வைகோ கூறினார்.

இந்த பேட்டியைத் தொடர்ந்து ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் மதிமுக, நாம் தமிழர் கட்சியினரிடையே மேலும் மோதல் வலுத்துள்ளது. இரு கட்சியினரும் ஒருவரையொருவர் தாக்கி கேலிச்சித்திரங்களையும், கிண்டலான பதிவுகளையும் வெளியிட்டு வருகின்றனர்.

நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் துப்பாக்கி சுட கற்றுக்கொடுத்தார் என்றும், அவருடைய வீட்டில் மதிவதனியின் கையால் உணவு உண்டதாகவும் பொது மேடைகளில் கூறி வருகிறார். இந்நிலையில், வைகோவின் குற்றச்சாட்டு நாம் தமிழர் இயக்கத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.