Wednesday, December 6மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பொய் செய்தி விவகாரம்: பணிந்தார் நரேந்திர மோடி!; ஸ்மிருதிக்கு மூக்குடைப்பு!!

பொய் செய்திகள் வெளியிடும் ஊடகத்தினரின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்ற நடுவண் அமைச்சர் ஸ்மிருதி இராணியின் உத்தரவுக்கு கடும் எதிர்ப்புகள் வலுத்ததை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக தலையிட்டு, அந்த உத்தரவுக்கு அதிரடியாக தடை விதித்தார்.

நடுவண் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சரான ஸ்மிருதி இராணி, பொய் செய்திகள் வெளியிடும் பத்திரிகை, செய்தி தொலைக்காட்சிகள் உள்ளிட்ட ஊடக செய்தியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்று (ஏப்ரல் 2, 2018) திடீரென்று ஓர் உத்தரவை பிறப்பித்தார்.

போலி செய்திகள் வழங்கிய குற்றம் முதல்முறையாக நடந்திருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட செய்தியாளரின் தேசிய அங்கீகாரம் (National Accreditation) 6 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும் என்றும், இரண்டாவது முறையாக அதே குற்றம் நடந்திருப்பது தெரிய வந்தால் ஓராண்டுக்கு ரத்து செய்யப்படும் என்றும் உத்தரவிட்டார். மூன்றாவது முறையாகவும் தவறான செய்திகள் வெளியிட்டிருந்தால் நிரந்தரமாக அவர்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அமைச்சர் ஸ்மிருதி இராணியின் இத்தகைய தன்னிச்சையான முடிவுக்கு வட இந்திய பத்திரிகைகள், டிவி சேனல்கள் உள்ளிட்ட ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நடுவண் அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். பிரதமர் நரேந்திர மோடி, ஸ்மிருதி இராணி ஆகியோரை விமர்சித்து, ட்விட்டர் பக்கங்களில் தொடர்ந்து காட்டமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இதற்காக ட்விட்டர் பக்கத்தில், #FakeNews என்று ஹேஷ்டேக் செய்துள்ளனர். இந்த ஹேஷ்டேக்தான் இன்று (ஏப்ரல் 3, 2018) இந்தியா முழுவதும் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது.

ஊடகங்களில் வெளியாவதில் எது போலி செய்திகள் என்பது குறித்து இந்திய பிரஸ் கவுன்சிலும் (Press Council of India – PCI), தேசிய ஒளிபரப்பாளர்கள் சங்கமும் (India Broadcasters Association – IBA) விசாரித்து அறிக்கை அளிக்கும் என்றும் ஸ்மிருதி இராணி தெரிவித்து இருந்தார்.

கடந்த 2015ம் ஆண்டு சென்னை பெருநகரமே, புயல் மற்றும் வெள்ளத்தால் சிக்கி உருக்குலைந்து கிடந்தது. இந்த பாதிப்புகளை அப்போது பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாட்பரில் இருந்தவாறு பார்வையிட்டார்.

ஆனால், இந்தக்காட்சியை ஃபோட்டோஷாப் மென்பொருள் மூலம் இருவேறு படங்களை இணைத்து, ஊடகங்களுக்கு தவறான படத்தை அனுப்பி வைத்தது பிரஸ் இன்பர்மேஷன் பீரோ (பிஐபி) (Press Information Bureau – PIB).

அதாவது, இந்த பிஐபிதான் ஊடகர்களுக்கு தேசிய அங்கீகார அடையாள அட்டையை வழங்குகிறது. இந்த அங்கீகார அட்டையைத்தான் பறித்து விடுவேன் என குழந்தைத்தனமாக மிரட்டியிருக்கிறார் ஸ்மிரிதி இராணி. அவர் நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் முதலில் பிஐபி மீதுதான் பாய வேண்டும்.

இருவேறு படங்களை இணைத்து, ஊடகங்களுக்கு தவறான படத்தை அனுப்பி வைத்த பிரஸ் இன்பர்மேஷன் பீரோ.

உலகளவில் பொய் செய்திகளை வாரி வழங்குபவர் என்றால் அது அமெரிக்க அதிபர் டிரம்ப்தான் என்பது வேடிக்கையாக சொல்லப்படுவதுண்டு. அவருக்கு அடுத்த இடத்தில் இந்தியாவின் 56 அங்குல மார்பு கொண்டவர்தான் உள்ளார் என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

பணமதிப்பிழப்பு செய்த பிறகு புழக்கத்தில் விடப்பட்ட புதிய 2000 ரூபாய் தாளில் ஜிபிஎஸ் ‘சிப்’ பொருத்தப்பட்டு உள்ளதாகவும், 150 மீட்டர் ஆழத்தில் புதைத்து வைத்திருந்தாலும் அவற்றை கண்டுபிடித்து விட முடியும் என்றெல்லாம் அப்போது மோடியின் ஆதரவாளர்களும், ஆதரவு சேனல்காரர்களும் கூச்சநாச்சமே இல்லாமல் கரடி விட்டார்கள்.

ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றதும், ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என்றதும், கருப்புப் பணத்தையும், ஊழலையும் ஒழிப்பேன் என்றதெல்லாமே பொய் செய்திகளின் வகையறாக்கள்தானே?

நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஆட்சியில் இருப்போரே புளுகு மூட்டைகளைக் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கும் நிலையில் ஸ்மிருதி இராணிகள் ஊடகங்கள் மீது பாய்வது ஏனோ?.

தான்தோன்றித்தனமாக சர்வாதிகாரத்துடன் நடந்து கொண்டதால்தான் மனிதவளத்துறையில் இருந்து ஜவுளி மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறைக்கு மாற்றப்பட்டார். இங்கும் அவர் அதே சர்வாதிகாரத்துடன், அகில இந்திய பிரச்சார் பாரதியை முடக்கினார். ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தைக்கூட நிறுத்தி வைத்தார்.

அரசு நிறுவனத்தை முடக்குவதிலும், அதே நேரத்தில் பாஜகவுக்கு முட்டுக்கொடுக்கும் தனியார் ஊடகங்களுக்கு ரத்தினக் கம்பளங்கள் விரிக்கவும் ஸ்மிருதியோ, மோடியோ ஒருபோதும் தயங்குவதில்லை. ஒட்டுமொத்த சங்கப் பரிவாரங்களின் நோக்கமும் அததான்.

அதற்காக, ஊடகங்கள் பொய் செய்திகளே வெளியிடவில்லை என்றோ, அவை கூறுவது எல்லாமே 100 விழுக்காடு நேர்மையான செய்திகள் என்றோ நாம் முட்டுக்கொடுத்துப் பேசவில்லை. செய்தியாளர்கள் வெறும் அம்புகளே. ஒவ்வொரு ஊடகத்திற்கும் தனித்தனி கொள்கை முடிவுகள் இருக்கின்றன. அந்தந்த ஊடக முதலாளிகள், தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் அவற்றை தீர்மானிக்கின்றனர்.

இங்கு மக்களுக்கான ஊடகங்களே இல்லை. அனைத்துமே பெரு முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடியவை. சில ஊடகங்கள், சில சமரசங்களை செய்து கொண்டு, கிடைக்கின்ற இடைவெளியில் மக்கள் மனவோட்டங்களை வெளியிடுகின்றன.

ஆனால், அரசிடம் இருந்தும் ஊடக நிர்வாகத்திடம் இருந்தும் நேரடியாக பலிகடா ஆக்கப்படுவது களத்தில் இயங்கும் ஊடகர்களேயன்றி வேறு யாரும் இல்லை. இந்த நிலையில், நடுவண் அரசும் செய்தியாளர்களை நசுக்கப் பார்ப்பது, இன்னொரு ஃபாசிஸம்தானே?

ஸ்மிருதி இராணியின் உத்தரவுக்குக் கடும் எதிர்ப்பு வலுத்ததால், பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக தலையிட்டு அவசர அவசரமாக அந்த உத்தரவுக்கு இன்று தடை விதித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஸ்மிருதி இராணியை கடிந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒருவேளை, ஸ்மிருதியின் உத்தரவு நடைமுறைக்கு வந்திருந்தாலுமேகூட தேசிய அங்கீகார அட்டை இல்லாமலேயே கூட நாம் தொடர்ந்து களப்பணியாற்றியிருக்க முடியும். அந்த அங்கீகாரம் என்பதெல்லாம் ரயில், விமானங்களில் சலுகைக் கட்டணங்களில் பயணிக்கவும், அரசு விழாக்களில் கலந்து கொள்ளவும் மட்டுமே பயன்படும். மக்களின் மனதை அறிய அத்தகைய அங்கீகாரம் தேவையே இல்லை.

ஆனால், அரசுக்கு எதிராகக் களமாடும் சில செய்தியாளர்களை, சில செய்தி நிறுவனங்களை ஓரங்கட்டி வைக்க முடியும். அதைத்தானா விரும்புகிறது மோடி அரசு?

அதுவும் இப்போதுள்ள டிஜிட்டல் யுகத்தில், வாட்ஸ் அப், ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள்தான் முதன்மை ஊடகங்கள். தவிர, ஆன்லைன் ஊடகங்களும் பெருகிவிட்டன. இங்கெல்லாம் மக்களே முதன்மை செய்தியாளர்கள். அவர்களுக்கு கடிவாளமிட பாஜக அல்ல, சங்க பரிவாரங்களே முயன்றாலும் முடியாத காரியம்.

 

– பேனாக்காரன்.
பேச: 98409 61947.