Sunday, April 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஆடிட்டர் குருமூர்த்தி இப்படி பேசலாமா?

பாஜக ஆதரவாளரும், துக்ளக் பத்திரிகை ஆசிரியருமான ஆடிட்டர் குருமூர்த்தி, பொருளாதார அறிவு இல்லாதவர்கள்தான் பக்கோடா விற்பனை செய்வதை விமர்சிப்பார்கள் என்ற கருத்துக்கு, சமூகவலைத்தளத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ, மரணம் அடைந்த பிறகு அதன் செய்தி ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்டார் ஆடிட்டர் குருமூர்த்தி. இவர் பாஜகவின் ஊதுகுழலாக அறியப்பட்டவர். ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி.

கடந்த ஜனவரி இறுதியில் வானொலியில் ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ”நாட்டில் பக்கோடா விற்பவர்கள்கூட தினமும் 200 ரூபாய் சம்பாதிக்கின்றனர். அதுவும் வேலைவாய்ப்புதானே?” என்றார்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கடந்த மக்களவை தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், தவறான பொருளாதார கொள்கைகள், பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவற்றால் வேலைவாய்ப்புகள் அதிகளவில் பறிபோயின.

பிரதமரின் பேச்சு குறித்து, முன்னாள் நடுவண் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ”பிச்சை எடுப்பதுகூட ஒரு தொழில்தான். அதற்காக அவரை சுயதொழில்முனைவோர் என்று சொல்லி விடமுடியுமா? அரசாங்கம் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தது என்பதுதான் முக்கியம்,” என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில், பாஜக ஆதரவாளரான ஆடிட்டர் குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (பிப்ரவரி 5, 2018), ”தொழில்முனைவோர் என்பதை பலர் சரியாக புரிந்து கொள்ளவில்லை. ஐஐடியில் படித்த பல மாணவர்கள் சேர்ந்து இட்லி தயாரிக்கும் தொழிலை ஆரம்பித்துள்ளனர். அவர்களில் ஒருவர், தேர்தலில் போட்டியிடவும் செய்தார்.

எம்பிஏ முடித்த பல மாணவர்கள் சங்கிலித் தொடர் காபி கடைகளை திறந்துள்ளனர். பீட்ஸா விற்பதை உயர்வாக பார்ப்பவர்கள், பக்கோடா விற்பனை கேவலமாக கருதுகின்றனர். பொருளாதார அறிவில்லாதவர்கள்தான் இவ்வாறு விமர்சனம் செய்கின்றனர்,” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளதோடு, அவரையும் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து, ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

 

 

ஸ்ரீ என்பவர், ”நம் நாட்டைப் பற்றி சரியான புரிதலின்றி பேசுவது என்பது இதுதான். அவர்கள் ‘ஏ’ என்றால் இவரும் ‘ஏ’ என்பார். அவர்கள் ‘பி’ என்றால் இவரும் ‘பி’ என்பார். சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை,” என்று பதிவிட்டுள்ளார்.

 

 

விபுல் மோகன் என்பவர், ”பீட்ஸா என்பது வாடகை அல்லது சொந்த கட்டடத்தின் உள்பகுதியில் தயாரிக்கப்படுவது. ஆனால், பக்கோடா என்பது சாலையோர வியாபாரிகளால் தயாரித்து விற்கப்படுகிறது. இவை இரண்டையும் சமமாக ஒப்பிடுவதே தவறு,” என்று பதிவிட்டுள்ளார்.

 

 

 

”எந்த தொழிலை மதிக்க வேண்டும் என்பதைப் பற்றியல்ல விவாதம். பிரதமர் மோடி சொன்ன சுயவேலைவாய்ப்பு என்பது பக்கோடா விற்பதுதானா?,” என விவேக் சுரேந்திரன் என்பவர் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

 

 

 

தலால் மீடியா என்ற பதிவர், ”இட்லி தயாரிப்பு நிறுவனத்தைதான் ஸ்டார்ட்-அப் என்கிறீர்களா?. சாலையோர இட்லி கடைக்காரர்களின் வருமானத்தையும், வாழ்வாதாரத்தையும் தன் பாக்கெட்டில் போட்டு எடுத்துச்செல்வதைத்தான் ஐஐடி படிப்பு அவர்களுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது,” என்று பதிவிட்டுள்ளார்.

 

 

 

இவர்கள் இப்படி என்றால் சக்தி என்ற பதிவர் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார். அவர், ”டேய் மென்டல், பக்கோடா விற்கும் தொழிலை மோடி அரசாங்கம் ஒன்றும் உருவாக்கித் தரவில்லை,” என்று பொங்கியுள்ளார்.

 

 

 

ஆடிட்டர் குருமூர்த்தி இப்படியொரு கருத்தை பதிவிடுவார் என்று நாமும் எதிர்பார்க்கவில்லை. பக்கோடா விற்று தினமும் 200 ரூபாய் சம்பாதிக்கும் நபருக்கு, அந்த தொழில் நிரந்தர பாதுகாப்பை வழங்குமா? என்பதையும் குருமூர்த்தி யோசித்திருக்க வேண்டும். பாரம்பரியமான பத்திரிகையின் ஆசிரியருக்கு இத்தகைய சிந்தனை சற்றும் பொருந்தவில்லை.

இப்போதைக்கு மோடியின் பக்கோடா பேச்சு மீதான சர்ச்சை ஓயாது போலருக்கு.