Tuesday, December 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

பட்ஜெட் 2021-2022: விவசாயிகளுக்கு 16.50 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு; விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தொடரும்!

நடப்பு ஆண்டில் நெல்,
கோதுமை, கரும்பு உள்ளிட்ட
விளைபொருள்களுக்கு
குறைந்தபட்ச ஆதார விலை
உயர்த்தப்படும் என்றும்,
விவசாயிகளுக்கு 16.50 லட்சம்
கோடி ரூபாய் கடன் வழங்க
இலக்கு நிர்ணயிக்கப்பட்டு
உள்ளதாகவும் மத்திய
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
பட்ஜெட் உரையில்
தெரிவித்துள்ளார்.

நடப்பு 2021-2022ம்
நிதியாண்டுக்கான பட்ஜெட்டை
மத்திய நிதி அமைச்சர்
நிர்மலா சீதாராமன் இன்று (பிப். 1)
தாக்கல் செய்தார். முன்னதாக அவர்,
குடியரசுத்தலைவர்
ராம்நாத் கோவிந்த்தை
அவருடைய மாளிகையில்
சந்தித்துப் பேசினார்.

 

நாடாளுமன்றத்தில்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
தாக்கல் செய்யும் பட்ஜெட்டிற்கு
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அளித்துள்ளது. நாடு சுதந்திரம்
அடைந்தது முதல் முதன்முறையாக
காகிதம் இல்லா பட்ஜெட்
அறிக்கையை நிர்மலா சீதாராமன்
சமர்ப்பித்தார். இதன்மூலம்
140 கோடி ரூபாய் மிச்சமாகும்
என அவர் தெரிவித்தார்.

விரைவில் சட்டமன்ற
தேர்தலை சந்திக்க உள்ள
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம்
ஆகிய மாநிலங்களுக்கு
பட்ஜெட்டில் கூடுதல் முக்கியத்துவம்
இருக்கும் என எதிர்பார்ப்பு நிலவியது.
அதற்கேற்ப பட்ஜெட்டில்
சில அறிவிப்புகளும் இருந்தன.

 

நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

 

கொரோனா பெருந்தொற்றுக்கு
இடையே பட்ஜெட்
தயாரிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கால் பொருளாதாரம்
கடுமையாக பாதிக்கப்பட்டு
உள்ளது. கொரோனா காலத்தில்
ஏழைகள் பாதிக்கப்படாமல்
இருக்க, ஏழைகள் நல்வாழ்வு
நிதி உதவித்திட்டத்தை
பிரதமர் துவக்கினார்.

 

பொது விநியோகத்
திட்டத்தின் கீழ் தானியங்கள்
இலவசமாக வழங்கப்பட்டன.
ஊரடங்கை அமல்படுத்தாமல்
இருந்திருந்தால்,
கொரோனாவால் மிகப்பெரிய
சேதத்தை சந்திக்க
நேர்ந்திருக்கும்.

 

உலகில் கொரோனா
இறப்பு மிகவும் குறைவாக
இருக்கும் நாடுகளில்
இந்தியாவும் ஒன்று.
கொரோனா காலத்தில்
பணியாற்றிய முன்கள
பணியாளர்களுக்கு நன்றி.

கொரோனா காலத்தில்
கடினமான சூழலை எதிர்கொள்ள
சுயசார்பு திட்டத்தை பிரதமர்
அறிவித்தார். கொரோனாவுக்கு
எதிராக இந்தியா மட்டுமே
இரண்டு தடுப்பூசிகளை
விரைவாக கொண்டு வந்தது.
இன்னும் இரண்டு அல்லது
மூன்று தடுப்பூசிகள் வர உள்ளது.
பொருளாதாரத்தை நிலைநிறுத்த,
5 மினி பட்ஜெட் தாக்கல்
செய்யப்பட்டு உள்ளது.

 

சுய சார்பு இந்தியா திட்டம்,
சரிவில் இருந்து மீள உதவும்.
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்
வெளிமாநில தொழிலாளர்களுக்கு
மிகப்பெரிய அளவில்
கைகொடுத்துள்ளது. கொரோனா
காலத்தில் 80 கோடி பேருக்கு
இலவச உணவு தானியம்
வழங்கப்பட்டு உள்ளது.
2021ம் ஆண்டிலும் கொரோனாவுக்கு
எதிரான போர் தொடரும்.
புதிய தடுப்பூசிகள் விரைவில்
பயன்பாட்டிற்கு வரும்.

 

சுயசார்பு இந்தியா திட்டம்:

 

சுயசார்பு இந்தியா திட்டம்
5 மினி பட்ஜெட்டுகளுக்கு சமமானது.
இந்த திட்டம் மூலம் எடுக்கப்பட்ட
நடவடிக்கைகளால்
பொருளாதாரம் மீண்டு வருகிறது.
பொருளாதாரம் வளர்வதற்கான
வாய்ப்புகள் அனைத்தையும்
அரசு பயன்படுத்தி வருகிறது.
சுயசார்பு இந்தியா திட்டத்தின்
கீழ், 27.1 லட்சம் கோடி ரூபாய்
அளவுக்கு திட்டங்கள்
அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

சுயசார்பு இந்தியா திட்டம்
என்பது இந்தியாவிற்கு புதிதல்ல.
பழங்காலத்தில் இந்தியா சுயசார்பு
பெற்ற நாடாக இருந்தது.
சுயசார்பு இந்தியா திட்டத்தை
அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு
செல்வதற்கான அம்சங்கள்
இந்த பட்ஜெட்டில் உள்ளன.
இவ்வாறு நிர்மலா சீதாராமன்
கூறினார்.

 

திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு:

 

சுய சார்பு ஆரோக்கிய
திட்டத்திற்கு 64180 கோடி
ரூபாய் ஒதுக்கீடு.

நகர்ப்புற தூய்மை இந்தியா
திட்டத்திற்கு 1.41 லட்சம் கோடி
ரூபாய் ஒதுக்கீடு.

உற்பத்தி துறைக்கு 1.10 லட்சம்
கோடி ரூபாய் ஒதுக்கீடு.

கொரோனா தடுப்பூசிக்கு
மத்திய பட்ஜெட்டில் 35 ஆயிரம்
கோடி ரூபாய் கூடுதல்
நிதி ஒதுக்கீடு.

உள்கட்டமைப்பு வசதிகளுக்கு
நடப்பு ஆண்டுக்கு 20 ஆயிரம்
கோடி ரூபாய் ஒதுக்கீடு.

மூலதன செலவினங்களுக்கு
5.45 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

மூலதன செலவினங்களுக்கு
மாநில அரசுகள், அதிகார
அமைப்புகளுக்கு 2 லட்சம்
கோடி ரூபாய் ஒதுக்கீடு.

சுகாதாரத்துறைக்கு 2.23 லட்சம்
கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
இது கடந்த ஆண்டைக் காட்டிலும்
137 சதவீதம் அதிகமாகும்.

காற்று மாசுவை
கட்டுப்படுத்துவதற்காக
2217 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

ரயில்வே துறை
மேம்பாட்டுப் பணிகளுக்கு
1.10 லட்சம் கோடி ரூபாய்
ஒதுக்கீடு.

பேருந்து வசதிகள்
மேம்பாட்டிற்கு 18 கோடி ரூபாய்.

வங்கியின் டெபாசிட்
கணக்குகளுக்கு காப்பீடு
ஒரு லட்சம் ரூபாயில் இருந்து
5 லட்சம் ரூபாயாக உயர்வு.

அரசு வங்கிகளுக்கு மத்திய
பட்ஜெட்டில் கூடுதல் முதலீடாக
20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.

மின்னணு பரிவர்த்தனையை
ஊக்குவிக்க 1500 கோடி ரூபாய்.

கல்வித்துறையில் ஆராய்ச்சிக்கு
50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
மேம்பாட்டுக்கு 1500 கோடி ரூபாய்.

சூரிய ஆற்றல் கழகத்திற்கு
1000 கோடி ரூபாய்.

டிஜிட்டல் முறையில் மக்கள்
தொகை கணக்கெடுப்பிற்கு
3768 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

 

வரி விலக்கில் மாற்றமில்லை:

 

இதுவரை இல்லாத அளவாக 6.48 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். வட்டி வருமானத்தை நம்பியுள்ள மூத்த குடிமக்களுக்கு வரி தாக்கலில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இனி, 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை. வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை.

 

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்பும்போது, இரட்டை வரி விதிப்பு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சிறிய அளவிலான வருமான வரி சச்சரவுகளை தீர்த்து வைக்க புதிய குழு அமைக்கப்படும்.

 

வீட்டுக்கடனில் வட்டிக்கான வருமான வரி சலுகை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டு உள்ளது. 1.50 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர்த்தப்பட்ட வீட்டுக்கடன் வட்டி சலுகை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படுகிறது. குறைந்த விலை வீடுகளை வாங்குபவர்களுக்கான வரிச்சலுகை 2022ம் ஆண்டு வரை நீட்டிக்கப்படும்.

 

16.50 லட்சம் கோடி ரூபாய் விவசாய கடன்:

 

விவசாய நலனில் அரசு உறுதி பூண்டுள்ளது. விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை தொடரும். நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ஒன்றரை மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது. நடப்பு ஆண்டில் 1.72 லட்சம் கோடி மதிப்பிற்கு விவசாய பொருள்கள் கொள்முதல் செய்யப்படும். விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்.

 

அரசின் தானிய கொள்முதல் மூலம் கடந்த ஓராண்டில் கூடுதலாக ஒன்றரை கோடி விவசாயிகள் பயனடைந்து உள்ளனர். நடப்பு ஆண்டில், 16.50 லட்சம் கோடி ரூபாய் விவசாய கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

 

விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை:

 

நெல் விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு 72752 கோடி ரூபாயும், கோதுமை விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு 75060 கோடி ரூபாயும், பருத்தி விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு 27975 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

 

அந்நிய நேரடி முதலீடு உயர்வு:

 

இன்சூரன்ஸ் துறையில்

 

அந்நிய நேரடி முதலீடு தற்போதுள்ள 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக உயர்த்தப்படும்.

 

தமிழகத்திற்கான திட்டங்கள்:

 

மதுரை முதல் கேரளா மாநிலம் கொல்லம் வரை நவீன வசதிகளுடன் கூடிய நெடுஞ்சாலை அமைக்க ஒப்புதல்.

கன்னியாகுமரி முதல் கேரளாவின் பல பகுதிகளை இணைக்கும் வகையில் நவீன சாலை அமைக்கப்படும்.

தமிழகத்தில் 1.03 லட்சம் கோடி ரூபாயில் சாலைத் திட்டங்கள் அமைக்கப்படும்.

சென்னையில் 119 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு 63246 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

சென்னை உள்ளிட்ட 5 இடங்களில் மீன்பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும்.

தமிழகத்தில் ஒருங்கிணைந்த பல்நோக்கு கடல் பூங்கா நிறுவப்படும்.

தமிழகத்தில் கடல் பாசியை பதப்படுத்த புதிய வசதி தொடங்கப்படும்.

 

பட்ஜெட் துளிகள்…:

 

* பட்ஜெட் உரையின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன், இரண்டு இடங்களில் திருக்குறளை மேற்கோளிட்டு பேசினார்.

”பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து”

என்ற திருக்குறளை மேற்கோள் காட்டினார். நோயில்லாதிருத்தல், செல்வம், விளைபொருள் வளம், இன்ப வாழ்வு, நல்ல காவல் ஆகிய ஐந்தும் நாட்டிற்கு அழகு என்பது இந்த குறளின் பொருளாகும். கடந்த முறை புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டிய நிர்மலா, இந்தமுறை திருக்குறளை மேற்கோளிட்டு பேசியது கவனம் ஈர்த்தது.

அதேபோல், வரி குறித்த அறிக்கையின்போது,

”இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு”

என்ற திருக்குறளை மேற்கோள் காட்டினார். ‘பொருள் வரும் வழிகளை மென்மேலும் இயற்றலும், வந்த பொருள்களை சேர்த்தலும், காத்தலும், காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் நல்ல அரசு ஆகும் என்பது இதன் பொருளாகும்.

 

* நாடாளுமன்றத்தில் இன்று
தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்,
நிர்மலா சீதாராமனுக்கு
3வது பட்ஜெட் ஆகும்.

* பிரதமர் நரேந்திர மோடி
தலைமையிலான மத்திய
அரசுக்கு இது தொடர்ச்சியான
8வது பட்ஜெட்.

* நாடு சுதந்திரம் பெற்ற
பின்னர் முதன்முதலாக காகிதம்
இல்லாத பட்ஜெட் தாக்கல்
செய்யப்பட்டது.

* மொபைல் செயலி மூலம்
பட்ஜெட் உரை வாசிக்கப்பட்டது.

* டிஜிட்டல் முறையில் unionbudget
என்ற மொபைல் செயலி
வழியாகவே தாக்கல்
செய்யப்பட்டது.

* இந்த யூனியன் பட்ஜெட் செயலியை
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
அறிமுகம் செய்து வைத்தார்.

* மக்களும் இந்த மொபைல்
செயலி வழியாகவோ, indiabuget.gov.in
என்ற வலைதளத்தின் வழியாகவோ
பட்ஜெட் விவரங்களை
தெரிந்து கொள்ளலாம்.

* வழக்கமாக பட்ஜெட் குறித்த
முக்கிய தகவல்கள் அடங்கிய
கோப்புகளை சூட்கேஸில் எடுத்து
வருவதே வழக்கம்.
ஆனால் நிதியமைச்சர்
நிர்மலா சீதாராமன்,
இதுவரை தாக்கல் செய்த
2 பட்ஜெட்களின்போது
சிவப்பு நிற வெல்வெட் துணியில்
தைத்து லெட்ஜராக எடுத்து
வந்துள்ளார். அதேபோல்
இந்தமுறையும் சிவப்பு நிற
வெல்வெட் துணியால் ஆன
பையில் பட்ஜெட் ஆவணங்களை
எடுத்து வந்துள்ளார்.

Leave a Reply