Tuesday, February 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பாஜக: எலி ஏன் 8 முழ வேட்டி கட்டிக்கிட்டு ஓடுது? #MannKiBaat #NarendraModi

உலகிலேயே பழமையான மொழியாக தமிழ் மொழி இருப்பதால் இந்தியாவே பெருமை கொள்கிறது என்று திடீரென்று தமிழின் மீது பாசமழை பொழிந்திருக்கிறார், பிரதமர் நரேந்திர மோடி. இதுதான் சமூக ஊடகங்களில் அண்மைய விவாதங்களில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

 

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நரேந்திர மோடி, வானொலியில் ‘மனதில் இருந்து பேசுகிறேன்’ (மன் கீ பாத்) உரையாற்றி வருகிறார். கடந்த 25.8.2018ம் தேதி நடந்த ஓர் உரையாடலில்தான் தமிழை வானளாவப் புகழ்ந்திருக்கிறார்.

 

 

இப்படி அவர் உயர்தனிச் செம்மொழியாம் தமிழைப் புகழ்வது முதல் முறையல்ல. நடப்பு ஆண்டில் பிப்ரவரி மாதம் டெல்லி டால்கோட்ராவில் நடந்த ஒரு விவாதத்தின்போதும்கூட, ‘சமஸ்கிருதத்தைவிட அழகான தமிழ்மொழியை கற்காமல் விட்டது வருத்தம் அளிக்கிறது,’ என்று கூறியிருக்கிறார்.

 

 

மேடைகளில் தமிழில் சில வாக்கியங்களை பேச முயற்சிப்பதும், திருக்குறளையும், தேமதுரத் தமிழோசைன எனப் பாடிய பாரதியின் வரிகளை மேற்கோள் காட்டவும் மோடி தவறுவதில்லை. ஆயினும், சங்கிகளின் இத்தகைய பாசம் எங்கோ இடறுகிறது.

 

 

இதையெல்லாம் அவர் தமிழ் மொழியின் ஆளுமையை உணர்ந்துதான் பேசினாரா என்ற அய்யம் இன்னும் நம்மை விட்டு அகலவில்லை. அப்படிச் சொல்ல காரணம் இருக்கிறது.

 

 

பல தேசங்களின் கூட்டமைப்பே இந்திய ஒன்றியம்; இந்தியா என்பது ஒரே நாடு அல்ல என்ற கூற்றையே ஏற்க மறுத்து, ‘ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே வரி’ என்ற முழக்கங்களை முன்வைக்கும் காவி கும்பலின் தலைவனிடம் இருந்து தமிழைப் புகழ்ந்து வரும் வார்த்தைகளை மட்டும் எப்படி நம்புவது?

 

 

என்னதான் வடக்கில் இருந்து வந்த தருண்விஜய், அய்யன் வள்ளுவனுக்கு சிலை எடுத்துச் சிறப்பித்தாலும் சங்கிகளின் நிறம் காவியன்றோ? அதனால்தான், கடந்த 2014ல் மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து சமஸ்கிருதத்தை எல்லா வழிகளிலும் திணிக்க பார்த்தது. ஹிந்தி மட்டுமே நாட்டின் ஒப்பற்ற அதிகாரமிக்க மொழி என நிருவ முயற்சித்துக் கொண்டே இருக்கின்றன, சங்க பரிவாரங்கள்.

 

 

இத்தனைக்கும் தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் மருந்துக்குக்கூட கடித போக்குவரத்தில் தமிழ்ப்பயன்பாடு இல்லை. ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழியிலேயே அலுவலக நடைமுறைகள் இருக்கின்றன.

 

 

இந்திய அலுவலர் மொழிச்சட்டத்தின்படி தமிழ்நாட்டில் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். அதைக்கூட நிறைவேற்ற முனையாத நடுவண் அரசின் தலைவனிடமிருந்து இத்தகைய சொற்கள் உதிரும்போது கொண்டாட மனம் மறுக்கிறது.

 

 

அய்.நா.வில் அலுவல் மொழியாக ஹிந்தியை அங்கீகரித்தால் அதற்காக ஆகும் 270 கோடி ரூபாயை இந்தியா ஏற்கத் தயார் என அறிவித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். ஹார்வர்டு பல்கலையில் தமிழுக்கு இருக்கை அமைக்க நாடு நாடாக நன்கொடை கேட்டு அலைமோதும் தமிழர்கள் ஒருபுறம்; ஆனால் நடுவண் அரசோ, ஐஐடிகளில் சமஸ்கிருத மொழிக்கென ஓர் இருக்கையை ஓசையின்றி அமைத்திருக்கிறது.

 

 

போதாக்குறைக்கு கேந்திரிய வித்யாலயா, சிபிஎஸ்இ பள்ளிகளில் பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடவும் உத்தரவு. இப்படி கடந்த காலங்களில் மொழித் திணிப்பில் தீவிரம் காட்டி வந்த பாஜகவினர் தமிழின் புகழ் பாடுவதை நாம் அய்யுறாமல் இருக்க இயலுமா?

 

 

இதில் இன்னொரு வேடிக்கை என்னவெனில், 1991ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 49736 பேரும், 2001ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 14135 பேரும் மட்டுமே சமஸ்கிருதத்தைப் பேசி வருவதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ஆக, மரித்துப்போன மொழிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் செவ்வியல் மொழியான தமிழுக்குத் தரக்கூடாது? உலகிலேயே ப-ழமையான மொழி, கற்காமல் விட்டதில் வருத்தம் என நரேந்திர மோடி மற்றும் சங்கிகள் இன்னும் எத்தனை நாள்களுக்குதான் வாயாலாயே வடை சுடுவர்?

 

 

அதனால்தான், ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில், தமிழ் மொழியை மோடி புகழ்ந்தாலும் அதை தமி-ழர்கள் நம்பத் தயாராக இல்லை என்பதை ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கழுவி கழுவி ஊற்றினர். தமிழ்நாட்டில் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால் மொழி அரசியல்தான் ஆகச்சிறந்த உபாயம் என்பதை தெரிந்தே, இப்படி தமிழை புகழ்கிறார் மோடி என்பதை சிறு குழந்தையும் அறியுமே.

 

‘ஏன் எலி எட்டு முழ வேட்டி கட்டிக்கிட்டு ஓடுது?’ என்று ஒருவர் கிண்டலாக கேட்கும் அளவுக்குதான் மோடியின் தமிழ் மீதான புகழாரம் இருக்கிறது என்றால் பாருங்களேன். உன் பெயரை திருவள்ளுவர் என்று மாற்றி வைத்துக்கொண்டாலும் தமிழ்நாட்டில் நோட்டாவுக்குக் கீழ்தான் பாஜக என்றும் ஒருவர் கிண்டலாக மீம்ஸ் பதிவிட்டுள்ளார்.

 

 

ஒரே தேசம்; ஒரே வரி என்பதுபோல் ஒரே தமிழ் என்று நாடு முழுவதும் தமிழ் மொழியை பயிற்றுவிக்கத் தயாரா? என்றும், உடனடியாக இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேணடும் என்றும் பொட்டில் அடித்தாற்போல கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

 

என்னதான் திருக்குறளை நாம் உலகப்பொதுமறை எனக் கொண்டாடினாலும் இந்தியாவில் அதை தேசிய நூல் என்று கூட அறிவிக்கப்படவில்லை என்பதுதான் வேதனையான ஒன்று. ட்விட்டரில், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கும்படியும் மோடியை வலியுறுத்தி உள்ளனர். உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக்கக் கோரி இன்னும் போராடிக் கொண்டுதானே இருக்கிறோம்?

 

 

இபிஎஸ், ஓபிஎஸ் போன்ற அடிமைக் கூட்டத்தை ஆட்டிப்படைத்து அதன்மூலம் நி-ழல் ராஜ்ஜியத்தை நடத்தி வரும் பாஜக, இப்போது திராவிடக் கட்சிகளின் பாணியில் மொழி அரசியலைக் கையில் எடுத்துள்ளது. சங்கிகளுக்குப் புரியும் வகையில் சொல்வதெனில், சீதையாக வேடம் தரித்தாலும், வந்திருப்பது சூர்ப்பனகை என்பதை தமிழக ராமர்கள் அறிவர். #GoBackModi என்ற ஹேஷ்டேக்கின் சூடு இன்னும் தணியவில்லை.

 

– பேனாக்காரன்.