Monday, April 22மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

மீண்டும் மொழி அரசியலில் பாஜக அரசு!; தமிழை தகர்க்க முயற்சி?

ஐ.நா. மன்றத்தில் ஹிந்தி மொழியை அலுவல் மொழியாக கொண்டு வருவதில் முனைப்பு காட்டும் பாஜக அரசு, தமிழ் மொழியின் வளர்ச்சியை முடக்குவதிலும், மாநில உரிமைகளை பறிப்பதிலும் தீவிரம் காட்டி வருகிறது.

இந்திய அளவில் மொழிக்காக புரட்சி வெடித்தது என்றால், அந்த பெருமை தமிழ் மொழிக்கு மட்டுமே பொருந்தும். அத்தகைய போராட்டத்தை முன்னெடுத்ததில் திராவிட இயக்கங்களுக்கு பெரும்பங்கு உண்டு. 1963 மற்றும் 1965களில் உலகமே ஆச்சர்யப்படத்தக்க வகையில் ஹிந்தி மொழித் திணிப்புக்கு எதிரான போராட்டம் நடந்தது.

சுஷ்மா ஸ்வராஜ்

ஆயினும், இந்தப் போராட்டம் திடீரென்று உருவெடுத்து இல்லை. இப்போராட்டங்களுக்கான விதை 1937லேயே விதைக்கப்பட்டு விட்டது. ஹிந்திக்கு எதிராக அப்போது துவங்கியதுதான் முதல் போராட்டம்.

தற்போது, மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜக, தொடக்கத்தில் இருந்தே மாநில அரசுகளின் அடிப்படை உரிமைகளை பறிப்பதிலேயே கவனம் செலுத்தி வருகிறது. பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிய இந்திய தேசத்தை, ஒரே நாடாக எல்லை வகுக்க முயற்சிக்கிறது; அத்துடன், ஹிந்தி மொழியை முதன்மையான ஆட்சி மொழியாக பிரகடனப்படுத்தவில்லையே தவிர அதை நோக்கித்தான் நகர்ந்து கொணடிருக்கிறது.

பாஜகவை எதிர்க்கத் திராணியற்ற எடுபிடி அரசுகள் மொழித் திணிப்பு என்ற ஒன்று இருப்பதையே மறந்து விடுகின்றன. இந்நிலையில்தான், ஐ.நா., மன்றத்தில் ஹிந்தியை அலுவல் மொழியாக கொண்டு வருவோம் என்றதன் மூலம் மக்களவையில் மீண்டும் சூடான விவாதத்தைக் கிளப்பியிருக்கிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.

சஷி தரூர்

தமிழகத்தில் இருந்தோ, மேற்கு வங்கத்தில் இருந்தோ யாரேனும் பிரதமர் ஆகும்பட்சத்தில் அவர்களை ஹிந்தியில் பேசச் சொல்லி நிர்ப்ப ந்திப்பது சரியாகுமா? என காங்கிரஸ் எம்.பி. சஷி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், ஹிந்தியை திணிப்பதில் பாஜகவுக்கு எந்தளவுக்கு பங்கு இருக்கிறதோ அதே அளவு காங்கிரஸ் கட்சிக்கும் உண்டு என்பதை நாம் மறந்து விடக்கூடாது. ஆனாலும், தமிழக எம்.பி.க்களே பேசாதபோது சஷி தரூர் பேசியிருப்பது பாராட்டத்தக்கதுதான்.

கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பரிலும் இதேபோல் பேசித்தான் சுஷ்மா ஸ்வராஜ் வகையாக வாங்கிக் கட்டிக்கொண்டார். நேற்று (ஜனவரி 3, 2017) மீண்டும் அதே பல்லவி. எதற்காக ஐ.நா. வரை ஹிந்தியை கொண்டு செல்ல பாஜக போராடுகிறது என்கிறீர்களா? அப்படி அலுவல் மொழியாக்குவதும் அவ்வளவு சுலபம் இல்லை.

ஐ.நா.மன்றத்தில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. அதில் மூன்றில் இரண்டு பங்கு அதாவது 129 நாடுகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே அங்கே ஒரு மொழியை அலுவல் மொழியாக அங்கீகரிக்க முடியும். அதற்காக ஆகும் செலவுகளையும் உறுப்பு நாடுகள் பங்கிட்டு ஏற்க வேண்டியதிருக்கும். இப்போதைக்கு பல நாடுகள் ஹிந்தி மொழியை ஏற்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து முயற்சிக்கிறது பாஜக.

ஐ.நா.வில் அங்கீகாரம் பெற்று விடும்போது மொத்த இந்திய தேசத்திலும் ஒரே மொழி கொள்கையை எளிதில் பரப்பிவிடலாம் என கணக்குப் போடுகிறது பாஜக. இத்தனைக்கும் ஹிந்தி என்பது இந்தியாவின் தேசிய மொழிகூட கிடையாது. ஆனால், அப்படியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முனைகிறது காவி கும்பல்.

இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தில் எட்டாவது அட்டவணையில் தமிழ் உள்பட 22 மொழிகள் அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளன. ஆனாலும், இன்றைக்கும் தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் மொழி பயன்பாட்டில் இல்லை. கடித போக்குவரத்துகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் அல்லது ஹிந்தி மொழியில் மட்டுமே இருக்கின்றன. அரசியல் அமைப்பு சட்டத்தை மீறுவது என்பது பாஜகவுக்கு ஒன்றும் புதிது அல்லவே!

தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற திராவிட மொழிக்குடும்பத்திற்கு தமிழ் மொழிதான் தந்தை என்பதை பாஜகவினர் எப்படி மறந்து போனார்கள்?. 1967ல் திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே, அப்போதைய முதல்வர் அண்ணாதுரை மூன்று முக்கிய பணிகளைச் செய்தார். அதில் முக்கியமானது, தமிழக அரசின் முத்திரையில், ‘சத்யமேவ ஜெயதே’ என்று ஹிந்தியில் எழுதப்பட்டிருந்த வாசகத்தை ‘வாய்மையே வெல்லும்’ என்று மாற்றினார். அத்துடன், ‘மதராஸ் கவர்ன்மென்ட்’ என்றிருந்ததையும் ‘தமிழ்நாடு அரசு’ என்று மாற்றி உத்தரவிட்டார்.

அதன்பின், அரசு முத்திரையில்கூட ஹிந்தி மொழியின் ஊடுருவல் இல்லாத ஒரே மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. மொழி வளர்ச்சிக்கு திமுகவின் பங்கு அளப்பரியதுதான். அதற்காக, தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி ரத்து செய்ததையெல்லாம் மொழி வளர்ச்சிக்கானதாக நான் கருதவில்லை.

தமிழ்நாட்டில் 8 கோடி மக்களால் பேசப்படும் மொழியாக மட்டும் தமிழ் மொழியை சுருக்கி விட முடியாது. ஸ்ரீலங்கா, சிங்கப்பூர், மலேசியா உள்பட 5 நாடுகளில் தமிழ் மொழி ஆட்சி மொழியாக பயன்பாட்டில் உள்ளது. இந்த நாடுகள் உள்பட 12க்கும் மேற்பட்ட நாடுகளில் காலம்காலமாக பேசப்படும் மொழியாகவும் இருந்து வருகிறது. இத்தகைய பெருமையை ஹிந்தி உள்பட ஏனைய இந்திய மொழிகளுக்குச் சொல்லிவிட முடியாது.

1965-ல் நடந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்.

1965ல் ஹிந்தியை எதிர்த்து நடந்த மொழிப்போரில் ஏற்பட்ட கலவரத்தில் தமிழகம் முழுவதும் காவல்துறையின் தடியடியில் சிக்கி 70 பேர் (2 காவல்துறையினர் உள்பட) பலியாயினர். அத்தகைய மொழி உணர்வாளர்கள் இல்லாதும்கூட தமிழுக்கும் தமிழகத்திற்கும் ஆகப்பெரிய சாபக்கேடு. அதனால்தான் இன்று ஒருவரால், தொடக்கக் கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை தமிழ் படிக்காமலேயே படிப்பை முடித்து விட முடிகிறது.

தமிழ்ச் செம்மொழி என்ற பெருமையெல்லாம் பேசாவிட்டாலும்கூட, ஐ.நா. மன்றத்தில் அலுவல் மொழியாக ஆவதற்கான எல்லா தகுதிகளையும் ஒருங்கே பெற்றிருக்கிறது தமிழ். எனில், ஹிந்தி மொழிக்கு மட்டும் அங்கே அலுவல் அந்தஸ்து பெற்றுத்தர முயல்வானேன்?. தமிழர்களிடையே மொழி உணர்வு மங்கும்போது, மோடி மஸ்தான்கள் வித்தையைக் காட்டுவதும் இயல்புதானே?

 

– பேனாக்காரன்.