Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சாதிய வர்க்கவாதிகளின் எலும்பை முறிக்கும் அசுரன்! சினிமா விமர்சனம்

உலகம் முழுமைக்கும் வர்க்க முரண் என்பது, இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும் இடையிலான வேறுபாடாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், இந்திய பெருநிலத்தைப் பொருத்தவரை வர்க்கப்பிரிவினை என்பதில் சாதிய பாகுபாடும் உள்ளடங்கும். அதிலும் தமிழ்நாடு போன்ற ஆதிகுடிகளின் மண்ணில், வர்க்கப்பிரிவினை என்பது கண்டிப்பாக சாதியத்தையும் இணைத்தே வந்திருக்கின்றன. இப்போதும் இருக்கின்றன.

வல்லான் வகுத்ததே நீதி என்ற சூழலில், வலுத்தவர்களிடம் இருந்து எளியவர்கள் எப்படி எல்லாம் தப்பிப்பிழைக்க போராட வேண்டியதிருக்கிறது என்பதை குருதி தெறிக்க பேசி இருக்கிறது, அசுரன். இயக்குநர் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் அக்.4ல் வெளியாகி இருக்கும் அசுரன் திரைப்படம், ஒடுக்கப்பட்ட மக்கள் இருத்தலுக்காக கைகொள்ளும் போராட்டங்களை விவரிக்கிறது. படத்தின் மூலக்கதை, பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவல்தான் என்பதாலோ என்னவோ படம் முடியும் வரை பார்வையாளர்களின் உடலுக்குள்ளும் கதையின் போக்கு வெக்கையை ஏற்படுத்தி விடுகிறது.

 

திருநெல்வேலி ஜில்லாவில் வடக்கூர், தெக்கூர் என இரண்டு சிற்றூர்கள். இதில் வடக்கூரான் (‘ஆடுகளம்’ நரேன்) என்பவர் ஒரு சிமெண்ட் தொழிற்சாலை கட்டுவதற்காக அக்கம்பக்கத்தில் இருக்கும் சிறு, குறு விவசாயிகளின் நிலத்தை மிரட்டியும், அடிமாட்டு விலை கொடுத்தும் வளைத்துப் போடுகிறார். தெக்கூரைச் சேர்ந்த சிவசாமி (தனுஷ்) என்ற சிறு விவசாயி மட்டும் தனது மனைவி, மைத்துனர் பெயர்களில் இருக்கும் மூன்று ஏக்கர் நிலத்தை கொடுக்க மறுக்கிறார். அந்த நிலம் மட்டுமே அவர்களுக்கு இருக்கும் ஒரே வாழ்வாதாரம்; அத்தோடு, சிவசாமிக்குப் பிறகு பிள்ளைகளுக்கு இருக்கும் ஒரே சொத்தும்கூட. அதனால் தர முடியாது என்கிறார்.

 

அப்போதிலிருந்தே அந்த நிலத்தின் மீது வடக்கூரான் குடும்பத்தினருக்கு ஒரு கண் இருந்து வருகிறது. இந்த நிலத்தைக் கைப்பற்ற வடக்கூரான் குடும்பம் செய்த சதியில், சிவசாமியின் மூத்த மகன் முருகன் (டீஜே அருணாச்சலம்) தலை துண்டித்துக் கொல்லப்படுகிறார். இதற்கு எதிர்வினையாக சிவசாமியின் இளைய மகன் சிதம்பரம் (கென் கருணாஸ்) வடக்கூரானை வெட்டி சாய்க்கிறார். இந்த சம்பவங்களுக்குப் பிறகு, சிவசாமியின் குடும்பம் தனித்தனியாக திக்குத்தெரியாத திசையில் பிரிந்து செல்ல நேரிடுகிறது. அந்தக் குடும்பம் ஒன்றிணைந்ததா? வடக்கூரானை இழந்த குடும்பத்தினர் அடுத்து என்ன செய்தார்கள்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

அசுரன் படம், வழக்கமான பழிவாங்கல் கதைதான். என்றாலும், உள்ளடக்கத்திலும், நேர்த்தியான திரைமொழியிலும் தனித்து நிற்கிறது. காலங்காலமாக கல்வி, வேலைவாய்ப்பு, நிலம் என எல்லாவற்றிலும் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் விளிம்புநிலை மக்கள், சாதி ஆதிக்கவாதிகளாலும், நில உடைமையாளர்களாலும் தங்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்குமுறைகள் குறித்து சூடு குறையாமல் பேசியிருக்கிறது.

 

உலகம் முழுமைக்கும் நிலம் என்பது பொது உடைமையாக இருந்த வரையில் எந்த பிரச்னைகளும் எழவில்லை. எப்போது நிலம், தனி உடைமையாக மாறிப்போனதோ அங்குதான் வர்க்கபேதம் தலையெடுக்கத் தொடங்கியது. சாதியமும் கலந்து விடும்போது, குருதி குடிக்காமல் விடாதுதானே? அதுதான் சிவசாமியின் குடும்பத்திற்கும் நடந்தது.

 

படத்தின் ஒரு காட்சியில்,
சிவசாமியின் ஒட்டுமொத்த
குடும்பத்தினரையும் ஓர்
ஓலைக்குடிசைக்குள்
அடைத்து வைத்து,
உள்ளூர் நிலச்சுவாந்தாரான
வெங்கடேஷ் தீக்கிரையாக்கி
விடுகிறார். இந்த காட்சி
அப்படியே, 1968ல்
கீழ்வெண்மணியில் நடந்த
ஆகப்பெரும் கொடூர
சம்பவத்தை பிரதிபலிப்பதாகவே
நம்மால் உணர முடிகிறது.
அப்போது தஞ்சை மண்ணில்,
நில உடைமையாளர்களிடம்
வேலை செய்து வந்த
ஒடுக்கப்பட்ட சமூகத்தைச்
சேர்ந்த கூலித்தொழிலாளர்களுக்கு,
ஒரு படி நெல்தான் கூலி.
அவர்கள் மேலும்
ஒரு படி நெல்லை
கூலியாக உயர்த்தி
வழங்குமாறு கேட்டதுதான்,
அப்போது அங்கிருந்த
நில உடைமையாளர்களுக்கு
பெரும் குற்றமாக
தெரிந்திருக்கிறது.

 

‘எதிர்ப்புக்குரலே
இருக்கக்கூடாது.
இருந்தால் அறுத்தெறி’
என்பதுதான் எல்லா
காலத்திலும், எல்லா
ஆதிக்கவாதிகளிடமும்
இருக்கும் ஒத்த
மூலக்கூறு பண்பு.
அதனால்தான்
கீழ்வெண்மணியிலும்
எதிர்ப்புக்குரல்களை
முற்றாக ஒடுக்க எண்ணிய
ஆதிக்க வர்க்கம்,
44 அப்பாவி ஏழைகளை
ஒரே குடிசைக்குள்
அடைத்து வைத்து
தீயிட்டு பொசுக்கியது.
தமிழ் மண்ணில் நிகழ்ந்த
மாபெரும்
வரலாற்றுத்துயரம் அது.
தீயில் கருகிய உடல்களில்
இருந்து வீசும் ஜூவாலையின்
வீச்சம், அசுரன் வரையிலும்
தொடர்வதுதான், சமூகக்கேடு.
விளிம்பு நிலை மக்களுக்கு
எங்கே ஒரு துயரம் நடந்தாலும்,
நாம் வளர்ந்த சமூகமா?
என்ற வினா எனக்குள்
எழாமல் இருந்ததில்லை.

சிவசாமியின் அண்ணன் (சுப்ரமணியசிவா) பட்டியலின மக்களுக்காக வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்கும் போராளியாக வந்து போகிறார். ஒரு கட்டத்தில், ஆதிக்க வர்க்கம் காவல்துறையை கைக்குள் போட்டுக்கொண்டு, அவரையும் தந்திரமாக கொன்று குருதி குடிக்கிறது. பஞ்சமி நில மீட்புக்கு போராடும் இடதுசாரி இயக்கத்தில், வழக்கறிஞர் சேஷாத்ரி பாத்திரத்தில் பரிமளிக்கிறார் பிரகாஷ்ராஜ். காவல்துறை கருப்பு ஆடாக வரும் பாலாஜி சக்திவேல், யதார்த்த சூழலை பிரதி எடுத்திருக்கிறார்.

 

பஞ்சமி நிலம் மீட்பு
குறித்து மேலோட்டமாகவே
பதிவு செய்திருக்கிறார்
வெற்றிமாறன்.
பஞ்சமி நிலம், பஞ்சமன்
என்றால் என்ன
என்பதையும் கொஞ்சம்
விவரிக்காமல் போனது
சற்று ஏமாற்றம்தான்.
ஆனால் நாம்
சொல்லாமல்
இருக்க முடியாதே.

 

மனுஸ்மிருதியின்படி பிராமணன், ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என நால்வகை வர்ணங்களாக மக்கள் பிளவு படுத்தப்பட்டனர். பிராமணன் பார்வையில் அவர்களைத் தவிர ஏனையோர் எல்லாருமே சூத்திரர்கள்தான். ஆனால் சூத்திரர்களுக்குள்ளும் ஏற்பட்ட தீண்டாமையால் பிளவு பட்டவர்கள்தான் பஞ்சமர்கள் எனும் பட்டியலினத்தவர்கள். அப்படியான பஞ்சமர்களை சமூக பொருளாதாரத்தில் உயர்த்தி விடுவதற்காக, ஆங்கிலேயர்கள் அவர்களையும் சிறு நில உடைமையாளர்களாக ஆக்கினர். அதற்காக வழங்கப்பட்டதுதான் பஞ்சமி நிலங்கள்.

 

அதன்பிறகு 1950களில் ஆச்சார்யா வினோபா பாவே, பூமிதான இயக்கத்தின் மூலம் பஞ்சமர்களுக்காக நிலங்களை தானமாக பெற்று வழங்கினார். சட்டப்படி பஞ்சமி நிலங்களை பத்து ஆண்டுகள் வரை யாருக்கும் விற்க முடியாது. அதன் பிறகு விற்க நேர்ந்தாலும், நிலத்தை இன்னொரு பஞ்சமனிடம்தான் விற்க முடியுமே அன்றி, மாற்று சாதியினருக்கு விற்க இயலாது. வாங்குவதும் குற்றம். தமிழ்நாட்டில் மட்டும் 2.50 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளதாக சொல்லப்பட்டாலும், இதுகுறித்த புள்ளிவிவரங்கள் அரசு பதிவேடுகளில் இல்லாததுதான் வேடிக்கை.

 

பஞ்சமி நில மீட்பின்
அவசியம் குறித்து
உணரும் சிவசாமியும்
போராட்டத்தில் பங்கெடுக்க,
நிலம் எங்கள் உரிமை
என்று எழுதி,
ஊர் முழுக்க தட்டிகளை
பொருத்துகிறார்.
இதனால் கொதித்து எழும்
நிலச்சுவாந்தார் வெங்கடேஷ்,
அவரை குடும்பத்தோடு
கருவறுக்கிறார்.

 

சுகா – வெற்றிமாறன் ஆகியோரின் கூர்மையான வசனங்கள், பல இடங்களில் கைத்தட்டலைப் பெறுகின்றன. ‘நீ அவனுக்கு விசுவாசமான வேலைக்காரனா இருந்த வரைக்கும் உனக்கு வேண்டியதெல்லாம் செஞ்சான். எப்போ அவனை எதிர்க்க துணிஞ்சிட்டியோ இனி அவன் உன்ன ஒழிக்காம விடமாட்டான்,’ ‘நமக்குத் தேவையானத நாமதான் அடிச்சு வாங்கணும்,’ நம்மக்கிட்ட கூழகும்பிடு போட்டுக்கிட்டு இருந்த பயலுவளுக்கு எங்கிருந்துடா இத்தன தைரியம் வந்துச்சு…’ என விளிம்பு நிலை மக்கள் மீதான ஒடுக்குதலையும், அவன் வெடித்துக் கிளம்புவதையும் வசனங்கள் பிரதிபலிக்கின்றன. நெல்லை வட்டார வழக்கும் ரசிக்கும்படி இருக்கிறது.

 

நிலமற்ற கூலிகளான ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினர், காலணிகள் அணியக்கூட அனுமதி மறுக்கப்பட்ட ஊரில், தன்னை நேசிக்கும் முறைப்பெண் மாரியம்மாளுக்காக (அம்மு அபிராமி) முதன்முதலில் ஆசையாக செருப்பு தைத்துக் கொடுக்கிறான் சிவசாமி. அதை அணிந்தவுடன் பட்டத்து இளவரசி போல மிடுக்காக பள்ளிக்குச் செல்கிறாள் மாரியம்மாள். அதைக்கூட சகித்துக்கொள்ள முடியாத ஆதிக்க வர்க்கம், செருப்பை கழற்றி அவளது தலையில் வைத்தபடியே தெருவில் நடந்து செல்ல பணிக்கிறது. நடக்க நடக்க எட்டி உதைக்கிறது.

 

தனக்கு நேர்ந்த அவமானத்தை வீட்டில் மனம் புழுங்கிச் சொல்லும் மாரியம்மாள், ‘மாமா… அவனுங்க என்னை அடிச்சதுகூட பரவாயில்லா மாமா… என்னால தாங்கிக்க முடியுது… ஆனா இந்த ஊரு சனம் ஒத்த வார்த்தகூட பேசாம ஓரமா கைகட்டி நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருந்தததான் என்னால தாங்கிக்க முடியல…’ என்று சொல்லும்போது, எல்லா காலத்திலும் நம்ம சனங்கள் வேடிக்கை மனிதர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள் எனும்போது நெஞ்சம் கொதிக்கிறது. அதனால்தான் மனம் நொந்து, ‘கொடுங்கூற்றுக்கு இரையெனப் பின்மாயும் பல வேடிக்கை மனிதரைப்போலே நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ என பாடுகிறான் மகாகவி.

 

வெற்றிமாறன்,
சினிமாவை வணிக ரீதியில்
மட்டுமின்றி புதிய சமூகத்தை
கட்டமைக்கும் களமாகவும்
பார்க்கிறார். கடைசி
காட்சியில்,
சிறைக்குச் செல்வதற்கு முன்,
சிவசாமி தன் மகன்
சிதம்பரத்திடம்,
‘நம்மகிட்ட காடு இருந்தா
எடுத்துக்கிடுவானுவ.
ரூபா இருந்தா
புடுங்கிக்கிடுவானுவ.
படிப்ப மட்டும் நம்மக்கிட்ட
இருந்து எடுத்துக்கிடவே
முடியாது செதம்பரம்…
நீ நல்லா படிச்சு
அதிகாரத்துக்கு வரணும்.
அப்ப அவனுங்க
நமக்கு செஞ்சத
நீ யாருக்கும் நடக்காம
பாத்துக்க…’
என்று புதிய உரையாடலுக்கு
நம்மை அழைத்திருக்கிறார்
வெற்றிமாறன்.

 

அது சிதம்பரத்திற்கு சொன்ன சங்கதி அல்ல; மாறாக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகச் சொல்லப்பட்ட ஆலோசனையாகவே பார்க்கிறேன். இந்த அறைகூவல், பரியேறும் பெருமாளை நினைவூட்டுகிறது என்றாலும், நல்லதை நாற்பது தடவைக்கூட சொல்லலாம். வள்ளுவன் கூட அறத்தை அதிகாரமாகத்தானே சொல்கிறான்.

 

அசுரனில் எந்த ஒரு பாத்திரமும் வீணடிக்கப்படாமல் கச்சிதமாக செதுக்கப்பட்டு இருக்கிறது. ஓரிரு காட்சிகளில் வந்துபோகும் பாத்திரங்களும் அதற்குரிய பங்களிப்பை நிறைவாகவே செய்திருக்கிறார்கள். குறிப்பாக, தனுஷின் மகன்களான டீஜே அருணாச்சலமும், கென் கருணாஸூம் கவனிக்க வைத்திருக்கின்றனர். முருகேசன் பாத்திரத்தில் பசுபதி கச்சிதம். இனி தொடர்ச்சியாக அவரை படங்களில் பார்க்கலாம்.

 

மூத்த மகனை பறிகொடுத்த பிறகும்கூட தனது தந்தை கொதிக்காமல் மொன்னையாகவே இருக்கிறாரே என மீசை அரும்பிய பதின்பருவத்தில் இருக்கும் சிதரம்பரம் வெடித்துக் கிளம்புகையிலும்கூட அவனை கண்டிக்கிறார் சிவசாமி. ஆனாலும் தந்தை, தாய்க்குத் தெரியாமல் அண்ணனைக் கொன்ற வடக்கூரானை போட்டுத்தள்ளும் பாத்திரத்தில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் சிதம்பரமாக வரும் கென் கருணாஸ். அப்பா கருணாஸை விட சிறப்பான எதிர்காலம் திரையில் கென் கருணாஸூக்கு காத்திருக்கிறது.

 

எதற்குமே லாயக்கற்றவர்
என்று பார்வையிலேயே
எள்ளல் செய்யப்பட்டு
வந்த தந்தை, திடீரென்று
பொங்கி எழுந்து,
எதிரிகளை பொடி
பொடியாக்கும்போது
மருண்டுபோய் வாயடைத்து
நிற்கிறான் சிறுவன் சிதம்பரம்.
இடைவேளைக்கு முன்பான
அந்த சண்டைக்காட்சியை
அத்தனை சிறப்பாக
வடிவமைத்திருக்கிறார்
பீட்டர் ஹெய்ன்.
பார்வையாளர்களை
இருக்கையின் நுனிக்குக்
கொண்டு வந்து விடுகிறார்.
அந்தக் காட்சியில்
ரசிகர்களின் ஆரவாரம்
அடங்க வெகு நேரமாகிறது.
பரந்த மணல் வெளியில்
நடக்கும் அந்த
சண்டைக் காட்சியில்
சரேலென பாய்ந்து வரும்
குத்தீட்டிகள், எங்கே
பார்வையாளர்களையும்
பதம் பார்த்துவிடுமோ
என்ற ‘த்ரில்’ அனுபவத்தை
ஏற்படுத்தி விடுகிறது.

 

சிவசாமியின் மனைவி பச்சையம்மாள் பாத்திரத்தில் மஞ்சு வாரியர் கச்சிதமாக பொருந்திப் போகிறார். ‘தலையை தனியா எடுத்துட்டு வந்திருந்தான்னா இன்னும் சந்தோஷப்பட்டிருப்பேன்’ எனும்போதும், கிணற்றில் மோட்டார் வைத்து உறிஞ்சும் வடக்கூரானின் கையாளின் கழுத்தில் தொரட்டியால் வளைக்கும்போதும், முண்டமாக கிடக்கும் மகனின் உடலைப் பார்த்து கதறி அழும் காட்சியிலும் கவனம் பெறுகிறார் மஞ்சு.

 

இப்படி உடன் பயணிக்கும் எல்லோருக்கும் சம அளவில் நடிப்பதற்கு இடம் கொடுத்திருந்தாலும், தனுஷ் தன்னை ஒரு தேர்ந்த கலைஞன் என்பதை இப்படத்திலும் தீர்க்கமாக மெய்ப்பித்திருக்கிறார். தமிழில் கமலுக்குப் பிறகு அவரின் இடத்தை நெருங்கி வருவதில் விக்ரம், தனுஷ் ஆகியோரிடையேதான் போட்டி இருக்கக்கூடும். வெற்றிமாறன் + தனுஷ் + ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோரின் கூட்டணியில் இன்னும் ஐம்பது படங்கள் வந்தாலும் அலுக்காது. இந்தக்கூட்டணி ஒருபோதும் சிதையாமல் இருக்க வேண்டும் என்பதே நமது உள்ளக்கிடக்கை. கதைக்குப் பொருத்தமான நடிகர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் தேர்வு செய்வதில் வெற்றிமாறனிடம் ஏதோ ஒரு புத்திசாலித்தனம் தெரிகிறது. அவருடைய படைப்புகள் வெற்றி பெற அதுவும் முக்கிய காரணங்களுள் ஒன்று.

பரந்த காடு, சண்டைக்காட்சிகள், வாழைத்தோப்புக்குள் புகுந்த பன்றியை வேட்டையாடும் காட்சி என ஒவ்வொன்றிலும் நுட்பமாக படம் பிடித்திருக்கிறது வேல்ராஜின் கேமரா. கதைக்களம் மட்டுமின்றி கேமராவின் கோணங்களும், பார்வையாளர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. ஜி.வி.பிரகாஷ்குமாரின் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம். கதையின் தீவிரத்தன்மை குறையாமல் பார்த்துக்கொள்கிறது பின்னணி இசை. பாடல்களையும் ரசிக்கும்படி தந்திருக்கிறார்.

 

‘கத்தரி பூவழகி கரையா பொட்டழகி’ என்ற பாடல், ஆடுகளம் படத்தில் வரும் ‘ஒத்த சொல்லால…’ என்ற பாடல் மெட்டமைப்பில் இருப்பதுபோல் தெரிகிறது. ஏகாதசி எழுதிய அந்தப் பாடலில்,

 

‘கழுத போலத்தான்
அழக சுமக்காத
எனக்குத் தாயேண்டீ
கொஞ்ச வேணும் நானும்’

 

என்று புதிய வார்ப்பாக சொற்களை கோத்திருப்பது ரசனை. வரப்பு மீசக்காரா, வத்தாத ஆத்துக்காரா என ரசித்து எழுதியிருக்கிறார் ஏகாதசி.

 

அருண்ராஜா காமராஜ் எழுத்திலும், குரலிலும் வரும், ‘வா… எழுந்து வா…’ பாடல் ரசிகர்களை மட்டுமின்றி, ஒடுக்கப்படும் மக்களை ஒட்டுமொத்தமாக உசுப்பி விடும் வகையில் அமைந்திருப்பது சிறப்பு. மெட்டும், கிளர்ச்சி ஊட்டும் வகையில் இருக்கிறது.

 

‘ஏற்க மறுத்திடு
துரோக தீயை அறிந்திடு
வா எதிரில் வா
எதிர்ப்படும் நொடியில்
தலைகள் சிதற வா
விரட்ட வா
விரட்டும் விரட்டில்
பகைகள் கதற வா
அழிக்க வா
ஒழிக்க வா
தீயவர் குலைகள்
நடுங்க வா…’

 

என்று நீளும் அந்தப்பாடல், புரட்சிப்பாவலனின் ‘கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே… குகை வாழ் ஒரு புலியே உயர்குணமேவிய தமிழா…’ பாடலின் நவீன வடிவமாகவே பார்க்கிறேன்.

 

ஒட்டுமொத்தமாக சிறப்பான கலைப்படைப்பாக இருந்தாலும், ஆங்காங்கே தெறித்து ஓடும் குருதி குளியல் காட்சிகளும், தலை துண்டிப்பும், கை துண்டிப்பும் தவிர்க்கப்பட்டிருக்கலாம். கண்டிப்பாக இந்தப்படம், சிறார்களுடன் பார்க்கக்கூடிய படம் அல்ல. வயது வந்தவர்களாக இருந்தாலும், சமூக புரிதல் உள்ளவர்கள் மட்டுமே பார்க்க வேண்டியது. என்றாலும், அற்புதமான திரைமொழி, தொழில்நுட்பம், நடிப்பு என ஆடுகளம் படத்தைப்போல் பல பிரிவுகளிலும் விருதுகளை வெல்லவும் வாய்ப்புள்ள படம். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கிறான் இந்த, அசுரன்.

 

– வெண்திரையான்

கருத்துகளுக்கு: 9840961947 / selaya80@gmail.com