Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

இளையராஜாவை அவமதித்த நாளிதழை காறி துப்பிய நடிகை கஸ்தூரி!; ட்விட்டரில் குவியும் பாராட்டு

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது கிடைத்தது குறித்த செய்தியை, அவரின் சாதி பெயரைச் சேர்த்து தலைப்புச் செய்தியாக வெளியிட்ட நாளிதழை நடிகை கஸ்தூரி காறி உமிழும் வீடியோ பதிவுக்கு, ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்திய திரையுலகில் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் இசைஞானி இளையராஜா. அவருடைய பாடல்களுக்காகவே பல படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன.

இன்றுவரை பின்னணி இசையில் அவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. இளையராஜாவை, இசைக்கடவுளாகவே கருதும் வெறிபிடித்த ரசிகர்களும் உண்டு.

அவரின் திரையுலக சாதனையைக் கவுரவிக்கும் வகையில் நடுவண் அரசு, நாட்டின் உயரிய விருதான பத்ம விபூஷண் விருது வழங்கப்படும் என, கடந்த 25ம் தேதி அறிவித்தது. அடுத்த நாள் (ஜனவரி 26, 2018) காலை பத்திரிகைகளில் இதுதான் தலைப்பு செய்தி.

ஆனால், ‘தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளிதழ் மட்டும் இதே செய்தியை சற்று வித்தியாசமான தலைப்பிட்டு முதல் பக்கத்தில் பிரசுரித்திருந்தது.

முதல் பக்கத்தில், முகப்பு செய்தியாக வெளியிடும் அளவுக்கு இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது செய்தி முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், ‘தலித் சமூகத்தைச் சேர்ந்த இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது’ என்று தலைப்பிட்டு அந்த செய்தி பிரசுரம் ஆகியிருந்ததுதான் அவருடைய ரசிகர்கள் பலருக்கு வேதனையை ஏற்படுத்தியது.

மேலும், தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நாட்டின் உயரிய விருதை வழங்குவதன் மூலம் அந்த சமூகத்தினரின் ஆதரவைப் பெற பாஜக முயல்வதாக ஒரு யூகமான தகவலையும் அந்த நாளிதழ் பதிவு செய்திருந்தது.

விருதுகளின் மீது பெரிய அளவில் ஆர்வம் காட்டாத, அதுவும் தகுதி வாய்ந்த ஒருவருக்கு காலம் கடந்து பத்ம விபூஷண் விருது வழங்கப்படுவதற்கு வலுவான அரசியல் பின்னணி காரணம் ஏதோ ஒன்று இருக்கும்; முதலில் கங்கை அமரனை இழுத்தார்கள்; இளையராஜாவுக்கு விருது என்பதுகூட அவரையும் பாஜகவுக்குள் கொண்டு வருவதுதான் நோக்கமாக இரு க்கலாம்.

பத்திரிகையாளராக இப்படிப்பட்ட யூகங்களை முன்வைப்பதில் தவறில்லை என்பதுதான் என் அபிப்ராயமும்கூட. ஆனால், ‘தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்’ என தலைப்பில் குறிப்பிட வேண்டிய அவசியம் ஒருபோதும் தேவையே இல்லை. அது, ஊடக நாகரீகம் ஆகாது.

அண்மைக் காலங்களில் பத்திரிகைகளில் தலைப்புகள் அப்பட்டமாக சாதிகளைக் குறிப்பிடுவதும், அல்லது தலைப்புகளில் கொச்சையான சொற்களை பயன்படுத்தும் போக்கும், ஆபாசமான படங்களை வெளியிடும் போக்கும் அதிகரித்துள்ளது.

ஒருமுறை ‘தினமலர்’ நாளிதழ், ‘கற்பழிப்பு புகாரில் சிக்கிய நடிகை பாவனாவுக்கு விரைவில் திருமணம்’ என்று தலைப்பிட்டு முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டு இருந்தது. ‘கற்பழிப்பு புகாரில் சிக்கிய’ என்ற சொற்கள் தலைப்பில் தேவைதானா?

‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழ், லெக்கிங்ஸ் அணியும் இளம்பெண்கள் பற்றிய முகப்புக் கட்டுரையை ஒருமுறை பிரசுரம் செய்திருந்தது. அந்த இதழின் போஸ்டரிலும் அந்த முகப்புக் கட்டுரை குறித்த விளம்பரம் வெளியாகி இருந்தது. போஸ்டர் படங்களில், லெங்கிங்ஸ் அணிந்த பெண்களின் ‘பின்புறம்’ ஆபாசமாக தெரியும் வகையில் பிரசுரிக்கப்பட்டு இருந்தது.

லெக்கிங்ஸ் அணிவதால் ஏற்படும் ஆபாசம்தான் கட்டுரையின் மைய நோக்கம் என்ற அளவில் அந்தப் படங்கள் சரியான கோணத்தில்தான் இருந்தன. ஆனால், அந்தப் படங்களை போஸ்டர்களில் கட்டாயம் அச்சிட்டே ஆக வேண்டுமா? என்பதுதான் கேள்வி.

ஊடகர்கள் மீதும், ஊடகங்கள் மீதும் இன்றும் கொஞ்சமாவது மக்கள் மத்தியில் மரியாதையும், நம்பிக்கையும் இருக்கிறது என்றால் அது அச்சு ஊடகங்களால்தான் என்பது என் தனிப்பட்ட கருத்து. ஆனால், அண்மைக் காலமாக அச்சு ஊடகங்களின் மீதும் மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில்தான், ‘தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் இளையராஜாவை சாதி குறியீடுடன் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டதை பொறுக்க முடியாமல், நடிகை கஸ்தூரி அந்த நாளிதழ் மீது காறி உமிழ்ந்தார். அத்துடன் அவர் விட் டுவிடவில்லை. இந்தக் காட்சியை வீடியோவாக பதிவு செய்து, அதை ட்விட்டர் சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டார்.

மேலும், இளையராஜா இந்தியாவின் சொத்து. ‘கடவுளுக்கு சாதியே கிடையாது. இசைக்கு எல்லைகளே இல்லை என்று அதற்குத் தெரியும்’ என்றும் பதிவிட்டிருந்தார். கஸ்தூரியின் செயலுக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன. ட்விட்டரில் இரண்டே நாளில், அவருடைய வீடியோ பதிவுக்கு 12000 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஒருவர், ”சூப்பர் மேம். ஊடகத்தினரை பார்த்து விஜயகாந்த் துப்பினார். பத்திரிகை மீது நீங்கள் துப்பி இருக்கிறீர்கள். இனியேனும் திருந்தினால் நல்லது,” என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர், ”அந்த பத்திரிகை மீது இளையராஜா வழக்கு போடலாமே,” என்றும் யோசனை தெரிவித்துள்ளார். இன்னொருவர், ”நாங்கள் நினைத்தோம். நீங்கள் செய்துவிட்டீர்கள்,” என்று தெரிவித்துள்ளார்.

கஸ்தூரியின் பேட்டி ஒளிபரப்பான ‘யூ டியூப்’ சேனலை 1.20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். அந்த நாளிதழ் நிறுவனத்திற்கும் இது தொடர்பாக புகார்கள் சென்றதாகத் தெரிகிறது.

மறுநாளே ‘தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ், இளையராஜா குறித்து சர்ச்சைக்குரிய தலைப்பு வைத்ததற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டது. அதில் உள்நோக்கம் ஏதுமில்லை என்றும் விளக்கம் அளித்திருந்தது.

அண்மையில், ‘தமிழை ஆண்டாள்’ கட்டுரை குறித்த சர்ச்சையின்போதுகூட (என்னளவில் கவிஞர் வைரமுத்துவின் கட்டுரையில் சர்ச்சைக்குரியது ஒன்றுமே இல்லை) ‘தினமணி’ நாளேடு, பகிரங்கமாக மன்னிப்பு கேட்டது.

இவற்றின் மூலமாக ‘தினமணி’ மற்றும் ‘தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடுகள், மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பது ஊடக உலகில் ஆரோக்கியமான போக்காகவே கருதுகிறேன்.

இத்தகைய மேலான பண்பு, ‘தி இந்து’ தமிழ் நாளிதழிலும் அடிக்கடி காண முடியும். நடுப்பக்க கட்டுரையில் ஏதேனும் பிழைகள் இருப்பதைச் சுட்டிக்காட்டினால், அடுத்த நாளே அதற்கு வருத்தம் தெரிவித்து, சரியான தகவலையும் பதிவிடும் ஆசிரியர் குழுவை பாராட்டாமல் இருக்க முடியாது.

நக்கீரனே ஆயினும் தவறு செய்வது மனிதர்க்கு இயல்பே. ஊடகமே பிடித்திருந்தாலும் முயலுக்கு மூன்று கால்கள் ஆகுமா?. ‘விருமாண்டி’ கமல் பாணியில் சொல்வதெனில், ‘மன்னிப்பு கேட்பவன், பெரிய மனிதன்!’.

 

– பேனாக்காரன்.