Monday, June 17மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

‘நச்’ கேள்விகள்; ‘பன்ச்’ பதில்கள்!; டெல்லியில் தெறிக்கவிட்ட மு.க.ஸ்டாலின்!

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று 42 நாள்கள் ஆன நிலையில், பிரதமர் நரேந்திரமோடியை மரியாதை நிமித்தமாக டெல்லியில் வியாழனன்று (ஜூன் 17) நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்கக் கூடியவர்கள் பெரும்பாலும் முப்பது நாள்களுக்குள்ளாகவே பிரதமருடனான சம்பிரதாயமான சந்திப்பை முடித்து விடுவார்கள். ஆனால் கொரோனா பெருந்தொற்றால் தமிழகமே ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத்திணறிய வேளையில் பொறுப்பேற்றதால் இந்த சந்திப்புக்கு 42 நாள்கள் ஆகியிருக்கின்றன.

 

டெல்லி சென்ற ஸ்டாலினுக்கு திமுக எம்பிக்கள் அளித்த உற்சாக வரவேற்பு லோக்கல் மீடியாக்களையும், வடக்கத்திய அரசியல் தலைவர்களையும் கவனிக்க வைத்திருக்கிறது.

 

பிரதமரிடம் அதிமுக முன்னாள் முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் மீதான ஊழல்கள் பற்றியும் ஸ்டாலின் புகார் புஸ்தகம் வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படியான புகார்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை என்கிறார்கள் இந்த சந்திப்பின் உள்விவரம் அறிந்தவர்கள்.

 

இந்திய அரசுக்கு அதிகளவில் ஜிஎஸ்டி வசூலித்துக் கொடுப்பதில் மஹாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழகம்தான் முக்கிய இடம் வகிக்கிறது. தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய ஜிஎஸ்டி பங்குத்தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தளபதியார் ரொம்பவே அழுத்தம் கொடுத்திருக்கிறார் என்றனர் மூத்த உடன்பிறப்புகள். கடன் சுமை மற்றும் நிதிப்பற்றாக்குறையால் ஃபைனான்சியலாக தமிழகம் மூச்சுத்திணறிக் கொண்டுதான் இருக்கிறது என்றும், தமிழகத்திற்குச் சேரவேண்டிய ஜிஎஸ்டி பங்குத்தொகை பாக்கி 60 ஆயிரம் கோடியை ஒரே தவணையில் விடுவிக்க வேண்டும் என்றும் இந்த சந்திப்பின்போது திரும்பத் திரும்ப பேசப்பட்டு உள்ளது.

 

அதன்பிறகுதான் தமிழகத்திற்கு போதுமான கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி வழங்க வேண்டும் என்றும், நீட் தேர்வு ரத்து, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றெல்லாம் கேட்டிருக்கிறார்.

 

பிரதமரும் ஸ்டாலின் கோரிக்கைகள் மீது உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னதாகவும் உ.பிக்கள் பேசுகிறார்கள்.

 

மொத்தத்தில் இந்த சந்திப்பு கசப்புமில்லை; இனிப்புமில்லை என்ற ரகத்தில்தான் இருந்திருக்கிறதாம்.

 

அதன்பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், கேள்வி கேட்ட ஊடகத்தினரை ‘பன்ச்’ பதில்களால் தெறிவிக்கவிட்டிருக்கிறார் என்கிறார்கள். கலைஞர் பாணியில் இல்லாவிட்டாலும், சுருக்கமாகவும், ரசிக்கும்படியும் பதில்கள் சொல்லியிருக்கிறார்.

 

சில கேள்விகளை எதிர்பார்த்து அவரும் வழக்கம்போல் புள்ளி விவரங்கள் அடங்கிய துண்டு சீட்டுகளை வைத்திருந்தாலும்கூட, அவற்றின் உதவி இல்லாமலேயே சமயோசிதமாக பதில் சொல்லி கவனத்தை ஈர்த்து இருக்கிறார் ஸ்டாலின்.

 

மத்திய அரசுடன் இணக்கமாக போவீர்களா? என ஒருவர் கேட்க, அதற்கு ஸ்டாலின், ‘உறவுக்குக் கைகொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்’ என தன் தந்தை கலைஞர், முன்பு சொன்ன அதே பதிலை சமயோசிதமாக சொல்லி வியக்க வைத்தார்.

 

இன்னொரு செய்தியாளரோ, நீங்கள் எல்லாம் முதல்வர் ஆகமாட்டீங்க. அப்படியே ஆனாலும் திறமையாக செயல்பட தெரியாது என்றார்கள். இப்போது முதல்வர் ஆகிவிட்டீர்கள். தினமும் பல இடங்களுக்குச் செல்கிறீர்கள். இப்போது டெல்லிக்கும் வந்துட்டீங்க. இதையெல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டுதான் வைத்திருந்தீர்களா… என்று எதையோ சொல்ல வந்து, கடைசியில் எதையோ கேட்டுவிட்டு அமர்ந்தார்.

 

அதற்கும் ஸ்டாலின் கொஞ்சமும் கோபமோ, புளகாங்கிதமோ அடையாமல், ”ஒரே ஒரு வரியில் சொல்கிறேன்… எங்களுக்கு ஓட்டுப்போட்டவர்கள் மகிழ்ச்சி அடையணும். ஓட்டுப் போடாதவர்கள், இவர்களுக்கு ஓட்டுப் போடாமல் விட்டுட்டோமேனு வருத்தப்படணும். அந்தளவுக்கு எங்கள் பணிகள் இருக்கும்,” என நச்சென்று சொல்லி தெறிக்கவிட்டார்.

 

டாஸ்மாக் மூடப்படுமா? என்ற கேள்விக்கு, ”டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்படும். முந்தைய அரசு என்ன செய்ததோ அதே பாணியில் செய்வோம்,” என கொஞ்சம் இரட்டுறமொழிந்தும் பேசினார்.

 

டாஸ்மாக் விவகாரத்தில் மட்டும் ஸ்டாலின் பதிலில் கொஞ்சம் தள்ளாட்டம் தெரிந்தது.

 

மொத்தத்தில், பிரதமருடனான சந்திப்பின் மூலம் மு.க.ஸ்டாலின் டெல்லி அரசியல் வட்டாரத்தை பெரிய அளவில் கவனிக்க வைத்திருக்கிறார். டெல்லி வட்டாரமும் இப்போதைக்கு கொஞ்சம் விட்டுப்பிடிப்போம் என்கிற மனநிலையில் திமுகவுடன் இணக்கமாக இருக்கவே விரும்புவதாகவும் சொல்லப்படுகிறது.

 

– பேனாக்காரன்