Friday, June 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலத்தில் நடுத்தெருவில் உருவான திடீர் கழிவு நீரோடை! மாநகராட்சி மனசு வைக்குமா?

சேலத்தில், பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியின் வழியாக கழிவு நீர் வெளியேறி, நடுத்தெருவில் ஓடையாக பாய்ந்தோடுவதால், சாலையும் சிதிலமடைந்துள்ளதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.

சேலம் சின்னத்திருப்பதி பாரதி நகர், உடையார் தெரு, மாரியம்மன் கோயில் எதிரில் இரண்டு சாலைகள் சந்திக்கும் இடத்தில், பாதாள சாக்கடைத் திட்டத்தின் கீழ் குழி தோண்டப்பட்டு உள்ளது. அதன்மீது சிமெண்ட் மூடி போட்டு மூடப்பட்டு உள்ளது. மாநகராட்சியின் 8 மற்றும் 7 ஆகிய இரு கோட்டங்களுக்கும் பொதுவாக உள்ள இந்த சாலை வழியாகத்தான் அஸ்தம்பட்டி – ஏற்காடு முதன்மைச் சாலைக்கு வந்தடைய வேண்டும். அதனால் எப்போதும் இந்த சாலையில் வாகன போக்குவரத்தும் அதிகம்.

 

கடந்த
மூன்று மாதங்களுக்கு முன்பு,
பாதாள சாக்கடைக் குழி மீது
போட்டப்பட்டிருந்த சிமெண்ட் மூடி
திடீரென்று உடைந்தது.
அன்று முதல், அந்தக் குழி
வழியாக கழிவு நீர் பெருக்கெடுத்து
சாலையில் சிற்றாறுபோல்
ஓடிக்கொண்டிருப்பதாகச்
சொல்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
மழைக்காலங்களில் அதிகளவில்
கழிவு நீர் வெளியேறுவதாகவும்
கூறுகின்றனர்.

இப்பிரச்னை குறித்து பாரதி நகரைச் சேர்ந்த சுப்ரமணி, இனாயத்பேகம், சரஸ்வதி, சுதா, சாந்தி, குணா, முரளி ஆகியோர் நம்மிடம் பேசினர்.

 

”கடந்த மூன்று மாதமாக இப்படித்தான் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆரம்பத்தில், குடிநீர்க் குழாய் உடைப்பால்தான் இவ்வாறு தண்ணீர் வெளியேறுவதாக நினைத்தோம். இன்னும் சிலர், சாக்கடைக் கால்வாயில் ஓடும் கழிவுநீர், அதிகப்படியான அழுத்தம் காரணமாக பாதாள சாக்கடைக் குழியைப் பிளந்து கொண்டு வெளியேறுவதாக சொல்கின்றனர். தண்ணீர் ஓடிக்கொண்டே இருப்பதால் இந்த சாலையும் கிட்டத்தட்ட ஒரு அடி ஆழத்திற்கு சிதிலமடைந்து விட்டது.

 

இரண்டு முக்கிய
சாலைகள் சந்திக்கும்
இடமாக இருப்பதால்,
வாகன ஓட்டிகள் பலர்
இந்த இடத்தில் வாகனங்களை
திருப்ப முடியாமல் தடுமாறி
விழுந்துள்ளனர். பள்ளிக்
குழந்தைகளை ஏற்றிக்கொண்டு
வரும் ஆட்டோக்கள்
இந்த சாலையில் செல்ல
முடியாமல் ரொம்பவே திணறி
வருகின்றன. கடந்த சில
நாள்களுக்கு முன்,
இந்த தெருவில் ஒரு வீட்டின்
விசேஷத்திற்கு வந்த ஒருவர்,
இந்த தண்ணீரை நல்ல தண்ணீர்
என நினைத்து முகம், கை,
கால்களை எல்லாம் கழுவிவிட்டு,
குடித்துவிட்டுப் போன
அவலமும் நடந்தது.

ஏற்கனவே சேலம் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தோம். அதையடுத்து, அதிகாரிகள் சிலர் இங்கு வந்து பார்த்துவிட்டுச் சென்று ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தண்ணீர் வெளியேறுவதை உடனடியாக சரி செய்ய வேண்டும். சாலையில் உள்ள குழிக்குள் இடறி விழுந்து உயிர்ச்சேதம் நடப்பதற்குள் சாலையையும் சரி செய்ய வேண்டும்,” என்றனர்.

 

நாம் சென்றபோதுகூட, ‘ஆமாம்… இப்படித்தான் பத்திரிகை, டி.வி.க்காரர்கள் எல்லாம் வந்து படம் பிடித்துவிட்டுச் செல்கிறார்கள். ஆனால் எங்கள் பிரச்னை மட்டும் இதுவரையிலும் தீர்ந்த பாடில்லை,’ என்று வெளிப்படையாக விரக்தியாக கூறினர்.

பள்ளிக் குழந்தைகளை
ஏற்றிச்செல்லும் பல
ஆட்டோ ஓட்டுநர்கள்
இந்த சாலையை முக்கிய
வழித்தடமாக பயன்படுத்தி
வருவதையும் காண முடிந்தது.
அனைத்து ஆட்டோ
ஓட்டுநர்களும்
கணக்கு வழக்கின்றி
எட்டு குழந்தைகள்,
பத்து குழந்தைகளை
ஏற்றிச் சென்றனர்.
பிரச்னைக்குரிய
இந்த இடத்தில்
வளையும்போது
ஆட்டோக்காரர்கள் ரொம்பவே
திணறிப் போவதையும் கண்டோம்.
கழிவு நீரோடையாக
மாறிக் கிடக்கும் இந்த
சாலையை விரைவில்
சீரமைக்காவிட்டால்,
எந்த நேரமும் பள்ளி
ஆட்டோக்களுக்கு எமனாக
மாறும் அபாயமும்
இருக்கிறது.

 

அசம்பாவிதங்கள் நடந்த பிறகு, போர்க்கால நடவடிக்கை எடுத்து என்ன பயனேதும் இல்லை. ஆகையால், சேலம் மாநகராட்சி நிர்வாகம், பாரதி நகரில் சாக்கடை கழிவுநீர் சாலை நடுவே பெருக்கெடுத்து ஓடுவதை சரி செய்து, சாலையையும் செப்பனிட வேண்டும். டெங்கு ஒழிப்பில் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் தீவிரமாக முனைப்பு காட்டி வரும் நிலையில், இதுபோன்ற பிரச்னைகளிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே பாரதி நகர் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

– பேனாக்காரன்