Wednesday, July 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சுர்ஜித் மீட்பு பணிகளும் சீனா குறித்த ஒப்பீடும்!

திருச்சி மாவட்டம்
நடுக்காட்டுப்பட்டியில்
பராமரிக்கப்படாத ஆழ்துளைக்
கிணற்றில் இரண்டு வயதே
ஆன சிறுவன் சுர்ஜித்,
தவறி விழுந்துவிட்டான்.
‘சுர்ஜித் மீண்டு வா!’ என்பதே
ஒட்டுமொத்த தமிழக
மக்களின் குரலாக
ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ஒருபுறம் சுர்ஜித்தை மீட்க அல்லும் பகலும் ஓயாது போராடி வரும் மீட்புப்படை; இன்னொருபுறம் தீபாவளி பண்டிகை… 425 கோடிக்கு மது விற்பனை… கைதி, பிகில் திரைப்படங்கள், நடிகர் விஜயின் கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம்… என தமிழகம் வேறு வகையான பொழுதுபோக்கு இத்யாதிகளையும் கைவிடவில்லை. பஞ்ச பூதங்களையும் அடக்கியதுதானே இந்த மனித உடல்? அதனால் மாறுபட்ட குணங்களையும் அப்படியே ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

இப்போது நாம் சொல்ல வருவது அதைப்பற்றி மட்டும் அல்ல.

ஓரிரு நாள்களாக
ஒரு காணொலி காட்சி,
வாட்ஸ்அப், ட்விட்டர்,
ஃபேஸ்புக் தளங்களில்
பரவிக் கொண்டே இருக்கிறது.
அதாவது, சீனாவில்
ஆழ்துளைக் கிணற்றில்
விழுந்த ஒரு குழந்தையை
சில நிமிடங்களில் மீட்கப்பட்டு
விட்டதாகவும், சீனர்களின்
தொழில்நுட்பத்துடன்
ஒப்பிடுகையில், இந்தியா
அதில் 10 சதவீதம்கூட
எட்டவில்லை என்று,
அந்த காணொலி காட்சியுடன்
பகடியாக ஒரு கருத்தும்
பதிவிடப்பட்டு உள்ளது.

தமிழர்கள், வழக்கம்போல் கண்மூடித்தனமாக அந்தப் பதிவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இன்னும் சிலரோ, ‘தமிழனா இருந்தா ஷேர் செய்!’ என்ற மிரட்டல் தொனியுடனும் உலவ விடுகிறார்கள். ஒருவேளை, அந்த காணொலி காட்சியை பகிராவிட்டால் எங்கே நாம் ரத்தம் கக்கி செத்து விடுவோமோ என்ற அச்சத்தில் ஏனையோரும் வழக்கம்போல் சிந்திக்காமலேயே அதை பகிர்ந்துவிட்டுதான் அடுத்த வேலைக்கே நகர்கின்றனர்.

ஜெர்மனியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பு பணிகளின்போது…(கோப்பு படம்)

சீனாவில் குழந்தை மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள சம்பவத்தில், ஆழ்துளைக் கிணற்றின் விட்டம் 11 அங்குலம்; குழந்தை சிக்கிக் கொண்டிருந்தது 33 அடி ஆழத்தில். இத்தனைக்கும் அந்த காணொலி காட்சி 40 வினாடிகளுக்கு எடிட் செய்யப்பட்டது. ஆனால் நம் நடுக்காட்டுப்பட்டி சம்பவத்தின் தன்மையோ முற்றிலும் வேறானது.

சுர்ஜித் சிக்கிக் கொண்டிருப்பது 75 அடி ஆழத்தில். மீட்புப் பணிகளின்போது ஏற்பட்ட மண்ணின் நெகிழ்வுத்தன்மை காரணமாக சுர்ஜித் 88 அடி ஆழத்திற்கும் சென்றுவிட்டான். மேலும், சுர்ஜித் சிக்கியிருக்கும் ஆழ்துளைக் கிணற்றின் விட்டம் 6.5 அங்குலத்தில் தொடங்கி ஆழமாகச் செல்லச்செல்ல 4.5 அங்குலமாக குறுகலாக கிடக்கிறது.

இன்னும் சொல்லப்போனால்,
உலகத்தில் வளர்ந்த நாடுகளில்
பலவற்றிலும்கூட இதுபோன்ற
துயரங்களில் சிக்கிக் கொள்ளும்
குழந்தைகளை மீட்பதற்கு
போதிய உபகரணமோ,
தொழில்நுட்பமோ இல்லை
என்பது ஆகப்பெரும்
துயரச்செய்தி.

இன்னும்கூட சொல்கிறேன்…

ஜெர்மனியிலும் இதேபோல் ஒரு சம்பவம்.

நடப்பு ஆண்டின்
ஜனவரி 13ம் தேதி,
ஆழ்துளைக் கிணறு
ஒன்றில் 2 வயதான
ஜூலன் ரொஸல்லோ என்ற
சிறுவன் 100 அடி ஆழத்தில்
சிக்கிக் கொண்டான்.
அந்த ஆழ்துளைக் கிணற்றின்
விட்டம் 25 செ.மீ.,
நடுக்காட்டுப்பட்டியில்
ஈடுபட்டதுபோல்
ஜெர்மனியிலும் தொடர்ந்து
இரவு, பகலாக ஏகப்பட்ட
பொக்லின், ரிக் வாகனங்கள்
மூலம் மீட்புப் பணிகள்
முடுக்கிவிடப்பட்டும்
குழந்தையின் சடலத்தைதான்
மீட்டனர்.

அந்த துயரத்திலும்கூட அந்தத் சிறுவனின் பெற்றோர், ‘மீட்புப்பணிகளை யாரும் குறை சொல்லாதீர்கள்’ என்றுதான் கண்ணீருடன் பேட்டி அளித்தனர். அங்கெல்லாம், ‘அதிபுத்திசாலி தமிழர்கள்’போல் வேற்று நாட்டை உதாரணம் காட்டி, சொந்த நாட்டின் தொ-ழில்நுட்பத்தை குறைகூறவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

இதுபோன்ற இடர்ப்பாடுகளில் இருந்து மீட்க தொழில்நுட்பத்துடன், காலமும், இயற்கையும்கூட ஒத்துழைக்க வேண்டியதிருக்கிறது. நுனிப்புல் மேய்ந்துவிட்டு, எல்லாவற்றையும் பகடி செய்வது என்பது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு.

 

– பேனாக்காரன்.