Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

‘குடிமகன்’களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்!

டாஸ்மாக் மதுபானங்களின் விலையை, பாட்டிலுக்கு 12 ரூபாய் வரை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தீபாவளிக்கு முன்பே இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2016ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது, திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே மதுவிலக்குக் கொள்கையை முக்கிய வாக்குறுதியாக முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டன. தொடர்ச்சியாக இரண்டாம் முறையாக வெற்றி பெற்ற ஜெயலலிதா, முதல்வர் பதவியேற்ற உடனே முதல்கட்டமாக 500 மதுபான கடைகளை மூடி உத்தரவிட்டார். மதுக்கடைகள் திறக்கப்படும் நேரமும் காலை 10 மணியில் இருந்து பகல் 12 மணிக்கு மாற்றப்பட்டது.

படிப்படியாக டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என்று சொல்லப்பட்டாலும் அதைப்பற்றி அதிமுக அரசு அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில்தான் பாமக வழக்கறிஞர் பாலு தொடர்ந்த வழக்கின்பேரில், நெடுஞ்சாலையோரம் உள்ள மதுக்கடைகளை மூடும்படி அதிரடியாக உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

இதையடுத்து மாநிலம் முழுவதும் சுமார் 3321 மதுபான கடைகள் மூடப்பட்டன. கடைகள் மூடப்பட்டாலும், மது விற்பனை வருவாயில் பெரிய அளவில் சரிவு ஏதும் ஏற்படவில்லை.

கடந்த 2016-17ம் ஆண்டில் தமிழக அரசுக்கு டாஸ்மாக் மது விற்பனை மூலம் ரூ.26995.25 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அதற்கு முந்தைய 2015-16ம் ஆண்டில் ரூ.25845.58 கோடியாக டாஸ்மாக் விற்பனை வருவாய் இருந்தது. ஆளுங்கட்சியினர், காவல்துறையினர் ஆசிகளோடு சந்து கடைகள், பெட்டிக்கடைகள் மூலம் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனையும் நடந்து வருகிறது. அதனால்தான் மது விற்பனையில் பெரியளவில் வீழ்ச்சி ஏற்படவில்லை.

இதற்கிடையே, மூடப்பட்ட இடங்களில் மீண்டும் கடைகளைத் திறந்து வருகிறது தமிழக அரசு. இந்நிலையில், வரும் தீபாவளி பண்டிகை விற்பனையை முன்னிட்டு, அனைத்து மதுபானங்களின் விலையையும் பாட்டிலுக்கு ரூ.12 வரை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று (அக்டோபர் 11, 2017) நடந்தது. இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது எனவும், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தீவிர களப்பணியாற்ற வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

மேலும், டாஸ்மாக் பீர் வகை மதுபானங்களை பாட்டிலுக்கு ரூ.10 வரையிலும், பிராந்தி, விஸ்கி, ரம், ஓயின் போன்ற மதுபானங்களை (180 மி.லி. கொள்ளளவு) பாட்டிலுக்கு ரூ.12 வரையிலும் விலை உயர்த்தவும் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. தீபாவளி பண்டிக்கைக்கு முன்பாகவே இந்த புதிய விலை உயர்வு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்மூலம் அரசுக்கு 5212 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும்.

மதுவிலக்குக் கொள்கையில் இருந்து தமிழக அரசு விலகிச் செல்வதையே புதிய விலை அறிவிப்பும், புதிய கடைகள் திறப்பு நடவடிக்கையும் காட்டுவதாக அரசியல் கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.