Tuesday, December 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

பெரியார் பல்கலையில் 28 கோடி ரூபாய் ஊழல்! தொடரும் தில்லுமுல்லு; தணிக்கையில் அம்பலம்!!

சேலம் பெரியார் பல்கலையில்
போலி ஆசிரியர்கள் நியமனம்,
தவறான ஊதிய நிர்ணயம்
உள்ளிட்ட புகார்கள் மட்டுமின்றி,
28 கோடி ரூபாய் ஊழல்
நடந்திருக்கலாம் என்று
2016-2017ம் ஆண்டின்
தணிக்கை அறிக்கையில்
சுட்டிக்காட்டப்பட்டு
உள்ளது.

 

ஒரு பல்கலைக்கழகம் எப்படி எல்லாம் இருக்கக்கூடாதோ அப்படி எல்லாமுமாக இருந்து வருகிறது சேலம் பெரியார் பல்கலைக்கழகம். இன்னும் சில ஆண்டுகளில் வெள்ளிவிழாவை எதிர்நோக்கி இருக்கும் இப்பல்கலை, யுஜிசி, பல்கலை விதிகள், உயர்கல்வித்துறை என எதன் சட்ட வரையறைக்குள்ளும் அகப்படாமல் தான்தோன்றித்தனமான செயல்பாடுகளால், கடும் சீர்கேடுகளை அடைந்திருக்கிறது.

சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் உயர்கல்வி கனவுகளை மெய்ப்பிக்கும் நோக்கில் 1997ல் தொடங்கப்பட்டதுதான் பெரியார் பல்கலை. இந்நான்கு மாவட்டங்களிலும் தற்போது 101 கலை, அறிவியல் கல்லூரிகளை தன்னுடன் இணைத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறது. தவிர, நான்கு உறுப்புக்கல்லூரிகளையும் நேரடியாக நிர்வகித்து வருகிறது.

 

இப்பல்கலையில் துணைவேந்தராக பாலகிருஷ்ணன் இருந்தபோது மட்டும்தான் ஊழல் முறைகேடுகளின்றி இருந்தது. அதன்பிறகு, தங்கராஜூ, முத்துச்செழியன் ஆகியோர் துணைவேந்தர்களாக இருந்த காலக்கட்டத்தில் பணி நியமனங்களில் முறைகேடுகள் எட்டிப்பார்க்க ஆரம்பித்த நிலையில், துணைவேந்தர் சுவாமிநாதன் காலத்தில் ஊழலில் உச்சத்தை தொட்டது; ஆசிரியர் பணியிடங்கள் எல்லாம் சந்தையில் ஏலம் எடுப்பதுபோல் நாற்பது லட்சம் ரூபாய் வரைக்கும் கூவிகூவி விற்கப்பட்டன.

அவருக்குப் பிறகு துணைவேந்தராக பொறுப்பேற்ற குழந்தைவேல் சிறந்த கல்வியாளராகவும், நேர்மையாளராகவும் இருந்தாலும், ஏற்கனவே புரையோடிக் கிடக்கும் ஊழல்களை களைய முடியாமல் தடுமாறி வருகிறார்.

 

இந்த நிலையில்தான், பெரியார் பல்கலையில் ஆகஸ்ட் 2ம் தேதி நடந்த செனட் கூட்டத்தில், 2016-2017ம் ஆண்டின் தணிக்கை அறிக்கை வெளியிடப்பட்டது. இதிலும், பல்கலையில் நடந்த பல்வேறு முறைகேடுகள் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளன. பெரியார் பல்கலை தொடங்கிய காலத்தில் இருந்து தணிக்கை முடிவுபெற்ற ஆண்டு வரையிலும் 28.14 கோடி ரூபாய்க்கான கணக்கு ஆவணங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்கிறது அந்த அறிக்கை. எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், 28.14 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என புரிந்து கொள்ளலாம்.

 

உள்ளாட்சித் தணிக்கைத்துறை மண்டல இணை இயக்குநர் வெங்கடாச்சலம் மேற்பார்வையில், ஆய்வாளர் ராஜசேகர் தணிக்கை செய்துள்ளார். தணிக்கைக்கு உட்படுத்திய ஆண்டில் மட்டும் மொத்தம் 33.38 லட்சத்திற்கான கணக்கு ஆவணங்கள் தணிக்கையில் காண்பிக்கப்படவில்லை.

இது தவிர, கல்லூரி முதல்வர்கள், உதவி பேராசிரியர் நியமனங்களில் அரங்கேறியுள்ள முறைகேடுகளையும் தெளிவாகக் கூறியுள்ளனர். எடப்பாடியில் உள்ள பெரியார் பல்கலை உறுப்புக்கல்லூரி முதல்வர் வெங்கடேஸ்வரன், பென்னாகரம் உறுப்புக்கல்லூரி முதல்வர் செல்வவிநாயகம், அரூர் உறுப்புக்கல்லூரி முதல்வர் வெங்கடேசன், பாப்பிரெட்டிப்பட்டி உறுப்புக்கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் ஆகியோரின் நியமனங்களில் யுஜிசி விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன.

 

பல்கலையில் பணியாற்றி
வரும் உதவி / இணை
பேராசிரியர்கள் சுகுணா,
பச்சமுத்து, பரமேஸ்வரி,
இளங்கோவன், தங்கப்பன்,
லதா, பிரதிபா, தீபா,
அறிவுச்சுடர் ஆகியோரின்
கல்விச்சான்றிதழ்கள்
போலியானவையாக இருக்கலாம்
என்ற சந்தேகத்தையும்
தணிக்கையாளர்கள் எழுப்பி
இருக்கிறார்கள்.
இதில் என்ன வேடிக்கை
என்றால், 2015-2016ம்
ஆண்டின் தணிக்கையின்போதும்
இவை சுட்டிக்காட்டப்பட்டு
உள்ளன. அதன்பிறகும்,
அந்த ஆட்சேபணைகள்
நிவர்த்தி செய்யப்படாமல்
உள்ளதெனில்,
அந்த ஆசிரியர் பணி
நியமனங்கள் அனைத்துமே
விலைக்கு விற்கப்பட்டவையாகவே
கருதிக்கொள்ள முடியும்.

 

இவர்கள் மட்டுமின்றி உறுப்புக்கல்லூரி முதல்வர்களின் கல்விச்சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்தும் வினா எழுப்பி இருக்கிறார்கள் தணிக்கையாளர்கள்.

 

மேட்டூர் அரசுக்கல்லூரியின்
முதல்வராக உள்ள
மருதமுத்துவின் பணி
நியமனத்திலும் யுஜிசி
விதிகள் மீறப்பட்டுள்ளன.
அவருடைய பணி
நியமனத்தில் உள்ள
ஆட்சேபணைகள் குறித்து
முந்தைய ஆண்டிலேயே
சொல்லப்பட்ட பிறகும்,
இதுவரை அவ்விவகாரம்
களையப்படவில்லை எனில்,
அதன் பின்னணியில்
பணம் மட்டுமே இருக்க
முடியும் என்பதை
நாம் சொல்லித்தான்
தெரிய வேண்டும்
என்பதில்லை.

சூர்யகுமார்

மேலாண்மைத் துறையில்
சூர்யகுமார் என்ற
ஓர் உதவி பேராசிரியர்
இருக்கிறார். மூன்று
ஆண்டுகளில் முடிக்க
வேண்டிய பிஹெச்.டி.,
ஆய்வுப்படிப்பை 23
மாதங்களிலேயே
முடித்துவிட்ட கெட்டிக்காரர்.
பணி நியமன
அறிவிக்கையின்போது
அவர் பிஹெச்.டி.,
முடித்திருக்கவில்லை
என்பதுதான் மைய சர்ச்சை.
அவரும் இப்போது
உதவி பேராசிரியர்
என்பதுதான் முரண்.
கடந்த 20.8.2015ம் தேதி
உதவி பேராசிரியராக பணியில்
சேர்ந்த அவருக்கு தணிக்கை
ஆண்டு வரையிலும்
11.61 லட்சம் ரூபாய் வரை
வெட்டியாக ஊதியம்
அழுதிருக்கிறது பெரியார்
பல்கலை.
எல்லாம், ‘ஊரான் வீட்டு
நெய்யே…என்
பொண்டாட்டி கையே’
கதைதான்.

 

சூர்யகுமாரின் பணி நியமனமே
தவறு எனச் சொல்லப்பட்டுள்ள
நிலையில், அவர்
சிறுபான்மை மாணவர்களுக்கான
ஸ்காலர்ஷிப் திட்டத்திற்கு
‘நோடல்’ அலுவலராக
இன்று (ஆக. 19) நியமிக்கப்பட்டு
உள்ளார். இதுவும் இப்போது
சலசலப்பை உண்டாக்கியுள்ள
நிலையில், இதை
துணைவேந்தர்
தவிர்த்திருக்கலாம்.

 

மற்றொன்றையும் இப்போது
சொல்லியாக வேண்டும்.
போலி அனுபவ சான்றிதழ்
குற்றச்சாட்டில் கூறப்பட்ட
தமிழ்த்துறை தலைவர்
பெரியசாமி,
மரைன்பயாலஜி படித்துவிட்டு
மைக்ரோபயாலஜி துறையில்
நியமிக்கப்பட்ட பேராசிரியர்
பாலகுருநாதன்,
கணிதம் படித்துவிட்டு
கம்யூட்டர் சயின்ஸ்
துறையில் நியமிக்கப்பட்ட
பேராசிரியர் தங்கவேல்
ஆகியோரைப் பற்றிய
ஆட்சேபணைகளை எல்லாம்
இத்தணிக்கை அறிக்கையில்
கவனமாக மறைக்கப்பட்டு
உள்ளது என்பதையும்
கவனத்தில் கொள்ள வேண்டும்.

வெங்கடேஸ்வரன் – மருதமுத்து

உரிய கல்வித்தகுதி, போதி முன்னனுபவம், தனித்திறன்களுடன் வெளியே பெருங்கூட்டமே வேலையின்றி திண்டாடிக் கொண்டிருக்கும்போது, பெரியார் பல்கலையோ பணத்தைப் பெற்றுக்கொண்டு தகுதி இல்லாத நபர்களை எல்லாம் ஆசிரியர்களாக நியமித்திருக்கிறது. பணம் மட்டுமின்றி சாதிப்பற்றும், அரசியல் தலையீடும் இந்த முறைகேடுகளின் பின்னணியில் அடங்கியிருக்கிறது.

 

இது ஒருபுறம் இருக்க,
உதவியாளர், கண்காணிப்பாளர்,
ஸ்டெனோகிராபர், எழுத்தர்
என ஆசிரியர் அல்லாத
பணியிடங்களை நிரப்பியதிலும்
ஏகத்துக்கும் முறைகேடுகள்
அரங்கேயிருக்கின்றன என்கிறது
தணிக்கை அறிக்கை.
உயர்கல்வித்துறையிடம்
அனுமதி பெறாமலேயே,
107 பணியிடங்களை
நிரப்பி இருக்கிறார்கள்.
எல்லாம் பண மயம்.

 

பல்கலை வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, முன்பு துணை வேந்தராக இருந்த சுவாமிநாதன், முறைகேடாக 136 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்பினார். உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு 40 லட்சம் ரூபாய் வரையிலும், ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு 3 லட்சம் ரூபாய் வரையிலும் வசூலித்துக்கொண்டு, பணி நியமனம் செய்தார். அவருடைய காலக்கட்டத்தில்தான் பலர் போலி சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்தனர் என்கிறார்கள்.

 

கடந்த 2015-2016 தணிக்கை அறிக்கையில் 47.44 கோடி ரூபாய்க்கு உரிய கணக்கு ஆவணங்கள் இல்லை என்று ஆட்சேபணைகளை பதிவு செய்திருந்த தணிக்கைத்துறை, 2016-2017 தணிக்கை அறிக்கையில் தடாலடியாக 28.14 கோடிக்கு மட்டுமே கணக்கு ஆவணங்கள் இல்லை என சுட்டிக்காட்டி இருப்பதும் நமக்கு அய்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

பொதுவாக, தணிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஒவ்வோர் ஆட்சேபணைக்கும் சம்பந்தப்பட்ட நிர்வாகமும், தணிக்கையாளர்களும் கொண்ட கூட்டமர்வில் (joint sitting), கூடுமானவரை உரிய ஆவணங்களை சமர்ப்பித்து ஆட்சேபணைகள் சரிக்கப்பட்டப்படும். ஆனால், ஓராண்டிற்குள்ளாகவே 19.29 கோடி ரூபாயை எப்படி சரி க்கட்டியிருக்க முடியும்? என்பதுதான் பலர் மனதிலும் எழுந்துள்ள அய்யம்.

செல்வவிநாயகம் – கார்த்திகேயன்

இதுபற்றி நாம் உள்ளாட்சித் தணிக்கைத்துறை உயர் அதிகாரி ஒருவரை சந்தித்து விளக்கம் கேட்டுப் பெற்றோம்.

 

”கடந்த 2015-2016 தணிக்கை அறிக்கையின்போதே பெரியார் பல்கலையில் 47 கோடி ரூபாய்க்கு கணக்கு ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்தப்படாதது குறித்து சுட்டிக்காட்டி இருந்தோம். இதுபற்றி அப்போது நீங்கள் (புதிய அகராதி) வெளியிட்ட செய்தியால், சட்டமன்ற வரைவுக்குழு வரையிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பிறகுதான், ஒட்டுமொத்தமாக நிலுவையில் உள்ள தொகையை தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கத் தேவையில்லை என்றும், அந்தந்த ஆண்டில் மட்டும் உள்ள ஆட்சேபணைகளை மட்டும் தெரிவித்தால்போதும் என்றும் வாய்மொழியாக ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளனர். அதனால் பல காலங்களாக நிலுவையில் உள்ள ஆட்சேபணைகளை நாங்கள் இந்தமுறை அறிக்கை புத்தகத்தில் வெளிப்படையாக பதிவு செய்யவில்லை.

 

சில இனங்களுக்கு முன்கூட்டியே செலவு செய்திருப்பார்கள். ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் போயிருக்கும். அதுபோன்ற சிக்கலான இனங்களில் நாங்கள் இந்தமுறை அறிக்கை புத்தகத்தில் வெறும் கோடு மட்டும் போட்டுக் காட்டியிருக்கிறோம். முறைகேடான பணி நியமனங்கள் வாயிலாக ஊழல் நடந்திருப்பது உண்மைதான். ஆனால் அதை நாங்கள், ‘ஊழல்’ என்ற வார்த்தையில் எங்கேயும் குறிப்பிட முடியாது. அதனால்தான் தணிக்கை அறிக்கையில் சொல்லப்பட்ட ஆட்சேபணை தொகைக்கு உரிய ஆவணங்களை இன்று வரை பல்கலையால் சமர்ப்பிக்க முடியவில்லை. ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை முறைகேடாக நிரப்பப்பட்டிருப்பதை வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறோம்.

 

பணி நியமனங்களில் யுஜிசி விதிகள் மீறப்பட்டுள்ளன என்று நாங்கள் ஆட்சேபணை தெரிவித்தால், அது பல்கலை விதிகளுக்கு உட்பட்டு நிரப்பப்பட்டது என்பார்கள். பல்கலை விதிகள் மீறப்பட்டுள்ளது என்றால் சிண்டிகேட் குழுவில் ஒப்புதல் பெற்றாகி விட்டது என்பார்கள். பிரிட்டிஷ் காலத்தில் வகுத்த விதிகள்தான் பல்கலைகளில் இன்னும் நடைமுறையில் இருக்கிறது. அதனால்தான் அங்கு பல முறைகேடுகள் நடப்பது கண்கூடாக தெரிந்தும் நடவடிக்கை எடுக்க முடிவதில்லை,” என்று புலம்பினார், அந்த அதிகாரி.

 

தணிக்கை அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள ஆட்சேபணைகள் குறித்து நாம் பெரியார் பல்கலை துணைவேந்தர் குழந்தைவேலுவிடம் கேட்டோம்.

 

”2016-2017 தணிக்கை அறிக்கையில் மொத்தம் 569 பாராக்களில் தணிக்கை தடைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில், 150 பாராக்களுக்கு உரிய கணக்கு ஆவணங்கள் இப்போது தயார் நிலையில் இருக்கின்றன. கடந்த காலங்களில் உதவி பேராசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனத்தில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக தணிக்கையில் சொல்லப்பட்டு உள்ளன. முந்தைய காலங்களில் நடந்த தவறுகளுக்கு நான் பொறுப்பேற்க முடியாது. அதற்காக அதை தட்டிக்கழிப்பதாக அர்த்தம் இல்லை.

 

ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கியதிலும் விதிகள் மீறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். துறை ரீதியான அக்கவுண்டன்சி தேர்வில் ஒருமுறை தேர்ச்சி பெற்றாலே போதும் என்று சிலரும், இரண்டு தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் சிலர் கூறுகின்றனர். அதுபற்றி ஏதேனும் அரசாணை இருந்தால் அனுப்பும்படி உயர்கல்வித்துறை துணை செயலரிடமும் கேட்டுள்ளேன். அந்த அரசாணை கிடைத்தால், பதவி உயர்வு தொடர்பான ஆட்சேபணைகளில் விரைந்து தீர்வு காண முடியும்,” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார், துணைவேந்தர் குழந்தைவேலு.

 

அறிவால் விளையும் உலகு என்றார் பெரியார். அவர் பெயரால் இயங்கும் பல்கலையோ, ஊழல் புரையோடி திணறிக்கொண்டிருக்கிறது.

 

– பேனாக்காரன்.

Leave a Reply