Tuesday, December 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

நீடிக்குமா இந்த ஆட்சி?

மழை விட்டும் தூவானம் விடவில்லை என்ற கதையாக ஆளும் அதிமுகவுக்குள் உச்சக்கட்ட பூசல்கள் அரங்கேறி வருகின்றன. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அக்கட்சிக்குள் நிகழும் சம்பவங்களை வைத்துப் பார்க்கையில் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு, இந்த கட்சி ஆட்சிக்கட்டிலில் இருக்குமா என்ற சந்தேகம் பாமரனுக்கும் எழாமல் இல்லை.

ஜெ., மரணத்தின் பின்னணியில் சசிகலா குடும்பம் இருக்கிறதோ இல்லையோ, ஆனால் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது ஓ.பன்னீர்செல்வம் உள்பட யாரையுமே பார்க்க அனுமதிக்காததன் பின்னணி என்ன?. இதெல்லாம், ஜெ., ஆளுமையை நேசிக்கும் வெகுஜன மக்களின் மனதில் படிந்திருக்கும் கேள்விகள். அதன் காரணமாகவே சசிகலா குடும்பத்தினர் மீது மக்களுக்கு ஒருவித வெறுப்புணர்வு இருக்கிறது.

அதேநேரம், ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட மாபெரும் இயக்கமான அதிமுகவை, ‘எல்லா விதத்திலும்’ வழிநடத்தும் ‘சக்தி’ மன்னார்குடி கும்பலுக்கு இருக்கிறது என்பதையும் மறுத்துவிட முடியாது. அதன் பொருட்டே, சசிகலா குடும்பத்தினரின் தலையீடு இனி எந்தக் காலத்திலும் அதிமுகவிற்குள் இருந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு பிரதான எதிர்க்கட்சியான திமுகவுக்கும், தமிழகத்தில் கால் பதிக்கக் காத்திருக்கும் பாஜகவுக்கும் இருக்கிறது.

ஜெ., மறைவுக்குப் பின்னர், குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணி உருவாகிய பின்னர் ஏற்பட்ட இடைவெளியில் எதிர்க்கட்சிகளான திமுகவும், காங்கிரஸூம் அரியணையைப் பிடிக்கும் வாய்ப்புகள் பிரகாசமாகவே இருந்தன. அதை ஏனோ மு.க.ஸ்டாலின் தரப்பு தவறவிட்டு விட்டது. இப்போது மீண்டும் அத்தகைய வாய்ப்பு திமுகவுக்கு கிடைத்தாலும், பாஜக அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்குமா என்ன?

அரசியல் கோட்பாடுகளையும், அறத்தையும் காலடியில் போட்டு மிதிப்பதில் பாஜகவுக்கு ஒன்றும் புதிதல்லவே. மணிப்பூர், கோவா மற்றும் சமீபத்தில் குஜராத், பீஹார் மாநிலங்களில் பாஜகவின் அரசியலமைப்பு சட்ட அத்துமீறல்களையும், அறப்பிறழ்வையும் நாம் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம்.

வரும் 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்திவிட வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டம். ஆனால், உட்கட்சி பூசல்களால் (உபயம்: பாஜக) அதிமுக திணறி வரும் நிலையில், அடுத்த ஆண்டின் மையப்பகுதியிலேயே தேர்தல் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ஓ.பன்னீர்செல்வத்தின் ‘தர்ம யுத்தம்’ (?!) முடிவுக்கு வந்த உடன் நிச்சயமாக பெருமூச்சு விட்டிருப்பார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் தியாகத்திற்கும் துரோகத்திற்குமான யுத்தத்தை டிடிவி தினகரன் தொடங்கி, எடப்பாடியாரின் தூக்கத்தைக் கெடுத்தார். தன் வசம் 19 எம்எல்ஏக்கள் இருப்பதை தினகரன் தரப்பு உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும் சில / பல எம்எல்ஏக்கள் தினகரன் அணிக்குத் தாவும் பட்சத்தில் எடப்பாடி பழனிசாமி தலை மீது கத்தி தொங்கிக் கொண்டிருக்கும் நிலைதான்.

திமுக, காங்கிரஸ் வசமுள்ள 98 எம்எல்ஏக்களும், தினகரனுடன் கைகோர்க்கும் நிலையில் இந்த ஆட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்காமல் போகலாம். தனக்குக் கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று தினகரன் தரப்பு நினைத்தால், எடப்பாடி தரப்பிலிருந்து எத்தனை பேரை வேண்டுமானாலும் தங்கள் அணிக்கு ‘இழுத்து வர’ எத்தகைய உபாயங்களையும் பின்பற்றும் தந்திரம் தினகரனிடமும் இருப்பதை எல்லோரும் உணர்ந்தே இருக்கிறார்கள்.

தினகரன் தரப்புக்கு பிரதான அஜன்டா ஒன்றே ஒன்றுதான். அது, சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கக் கூடாது என்பது மட்டுமே. அத்துடன், அவருடைய அணியைச் சேர்ந்த ஒன்றிரண்டு பேருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் அவர்களின் கொதிநிலை அடங்கி விடும். இவ்வளவுதான் தினகரன் சொல்லும் தியாக – துரோக யுத்தத்தின் சித்தாந்தம்.

ஒருகட்டத்தில் தினகரன் அணியின் கோரிக்கைகளுக்கு எடப்பாடி தரப்பு சம்மதித்தாலும், அவர்களை ஆட்டி வைக்கும் பாஜக ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது. அதற்குப் பதிலாக ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலைச் சந்திப்பதே உத்தமம் என்று சொல்லிவிடும். ஒருவேளை, அதிமுக ஆட்சியைக் கலைத்துவிட்டு, அதே கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தால் வெற்றி பெற்றுவிடுவோமா? என்பதையும் பாஜக தலைமை யோசிக்காமல் இல்லை.

அதனால், தமிழக சட்டப்பேரவையை முடக்கி வைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்சம் ஓராண்டு வரைகூட ஆளுநர் ஆட்சியைக் கொண்டு வரவும் சட்டத்தில் இடமிருக்கிறது. ஆளுநரின் நேரடி கட்டுப்பாட்டில் ஆட்சி நிர்வாகத்தைக் கையாண்டு, அதன்மூலம் பாஜக அதிகார மையத்திற்கு வந்தால் தமிழகத்தை மேலும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல முடியும் என்று மக்களை மடை மாற்றம் செய்யவும் வாய்ப்பு இருக்கிறது. ஊழலை தகர்ப்போம் என்று பேசிவரும் பாஜக ஊழலில் திளைக்கும் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதும் விமர்சனத்திற்கு உள்ளாகும் என்பதால், ரஜினியின் முகத்தை முன்னிலைப்படுத்தவும் தயங்காது.

 

கமல் மீது திராவிட சிந்தனை முத்திரை இருப்பதால் அவரை கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால், ரஜினியிடம் இருந்து தங்களுக்கு சாதகமான சிக்னல் கிடைத்துவிட்டால், அதன்மூலம் கமலையும் வளைக்கப் பார்ப்பார்கள். ரஜினியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அவருடைய குடும்பத்திற்குள்ளிருந்தே நெருக்கடியை உருவாக்கவும் பாஜக தயங்காது.

ஏனெனில், ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத இந்த நிலையில் இப்போது விட்டால் இனி எப்போதும் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதும் பாஜகவுக்கு நன்றாகவே தெரியும். அதனால், ரஜினியை தனிக்கட்சி தொடங்க விடாமல் நாலாபுறத்திலும் குடைச்சல் கொடுப்பார்கள். ஒருவேளை ரஜினி தனிக்கட்சி தொடங்குவதில் உறுதியாக இருப்பாரேயானால், அவரை கூட்டணிக்குள் கொண்டு வரவும் பாஜக முயற்சிகளை முன்னெடுக்கும்.

இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356&ன் கீழ் ஒரு மாநிலத்தில் சட்டம்&ஒழுங்கு சீர்கெடும்போது அந்த மாநில அரசை, மத்திய அரசு கலைக்க நேரிடலாம். தமிழகத்தில் இப்போது என்ன அப்படி சட்டம் – ஒழுங்கு கெட்டுவிட்டது என்கிறீர்களா? ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது சிலர் ஒசாமா பின்லேடன் படத்துடன் நடமாடியதாக, அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வமே சட்டப்பேரவையில் கூறியிருக்கிறாரே. அது ஒன்று போதாதா? தமிழகத்தில், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகச் சொல்லி ஆட்சியைக் கலைத்து விடுவார்கள்.

நகைப்பதற்கில்லை.

கா(பா)விகள் எதையும் செய்வார்கள்.

– இளையராஜா.எஸ்
தொடர்புக்கு: selaya80@gmail.com

Leave a Reply