Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

அஜித்தின் ‘விவேகம்’ வசூல் எவ்வளவு?

அஜித்குமார் நடிப்பில் கடந்த 24ம் தேதி ‘விவேகம்’ படம் வெளியானது. ‘வேதாளம்’ படத்தை அடுத்து, இரண்டரை ஆண்டு இடைவெளிக்குப் பின் இந்தப்படம் வெளியாகிறது என்பதால், ரிலீசுக்கு முன்பே ‘தல’ ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

தமிழ்நாட்டில் மட்டும் இந்தப்படம் 770 திரையரங்குகளில் வெளியிடப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் படம் வெளியாகி இருக்கிறது.

காஜல் அகர்வால், அக்ஷராஹாஸன், பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் என நட்சத்திர அந்தஸ்து இருந்ததால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விவேகம் ஆரம்பத்திலேயே ரூ.120 கோடிக்கு வியாபாரம் ஆகியிருந்தது. தமிழில் ஜேம்ஸ்பாண்டு வகையறா பாத்திரங்களில் நடிக்க அஜித்குமாரை விட்டால் வேறு ஆளில்லை என்ற ரீதியில் நேர்மறை விமர்சனங்களும் வந்துள்ளன.

‘தல’ ரசிகர்களை பெரிய அளவில் விவேகம் திருப்தி படுத்தியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இருப்பினும், ‘விக்ரம்’ படத்தின் சாயலில் இருப்பதாகவும், லாஜிக் மீறல்கள் நகைப்பை ஏற்படுத்துவதாக எதிர்மறை விமர்சனங்களும் வராமல் இல்லை.

ஆனாலும், எதிர்மறை விமர்சனங்களால் படத்தின் வசூல் பெரிய அளவில் பாதிக்கவில்லை என்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள் சிலர். படம் வெளியான கடந்த 24ம் தேதி மட்டும், தமிழ்நாடு முழுவதும் ரூ.20 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் புள்ளிகள் சொல்கின்றனர்.

விவேகம், முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக இந்தப்படம் ரூ.35 கோடி கல்லா கட்டியுள்ளதாக சொல்கின்றனர். முதல் நாளில் சென்னையில் மட்டும் ரூ.1.21 கோடி வசூலித்து, எப்போதும் ‘பாக்ஸ் ஆபீஸ் கிங்’ ஆக அஜித்குமாரை நிலை நிறுத்தியுள்ளதாகக் கூறுகின்றனர்.

அதேநேரம், பாக்ஸ் ஆபீஸ் தகவல் தொகுப்பாளரான ராமானுஜம், ‘விவேகம்’ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.15 கோடிதான் என்கிறார். சென்னை, கோவை ஏரியாக்களில் ஞாயிற்றுக்கிழமை நல்ல வசூலை எதிர்பார்க்கலாம் எனக்கூறும் அவர், மதுரை, ராமநாதபுரம், சேலம், திருச்சி, தஞ்சை ஏரியாக்களில் பெரிய அளவில் வசூல் ஆவது சந்தேகம்தான் என்றும் கூறுகிறார்.

இது ஒருபுறம் இருக்க, அமெரிக்காவில் பிரீமியர் காட்சிகள் மூலமே விவேகம் ரூ.1.34 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. அதற்கு முன்பு, அஜீத்தின் வேறெந்த படமும் இந்தளவுக்கு வசூலிக்கவில்லையாம்.

அண்டை மாநிலங்களைப் பொறுத்தவரை (முதல் நாள் நிலவரம்) கர்நாடகாவில் ரூ.3.75 கோடி, கேரளாவில் ரூ.2.88 கோடி, ஒருங்கிணைந்த ஆந்திராவில் ரூ.1.75 கோடியும் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.